பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?

Gender Equality
Gender Equality
Published on

ஒரு பெண் தான் வளரும் ஒவ்வொரு பருவத்திலும் பாகுபாட்டுக்கு ஆளாகிறாள். ஆண், பெண் மற்றும் திருநங்கைகளுக்கு சம உரிமை உள்ளதா என்றால் இல்லை என்பதே பலருடைய பதில். வளர்ந்து வரும் நவீன உலகில் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறது இந்தப் பதிவு.

ஆணும் பெண்ணும் சமம் என்று பல காலங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் பெண்களை ஆண்களுக்கு நிகராக போற்றுகிறார்களா என்றால் அது கேள்விக்குறி தான். இந்திய சுதந்திரப் போராட்டம் கூட ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், இன்றளவும் பெண் விடுதலைக்கு முழுமையான ஒரு முடிவு எட்டப்படவில்லை.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதை நம்மால் காண முடிகிறது. இருப்பினும் பெண்களை மட்டம் தட்டும் சிலர் ஆங்காங்கே இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஆண்கள் உடல் அளவில் வலிமை மிக்கவர்களாக இருக்கலாம். ஆனால், மனதளவில் வலிமை மிக்கவள் பெண் தான். வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்‌ அனைத்தையும் மன தைரியத்தோடு எதிர்த்துப் போராடும் திறன் பெற்றவர்கள் பெண்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்தாலும் மகிழ்ச்சி அடைபவர்கள், அதுவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் சோகத்தில் மூழ்கி விடுவார்கள். குழந்தையிலே ஆண் பெண் பேதம் பார்க்கும் உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் கிராமப்புற பெண்களின் நிலை இன்றளவும் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கடினமானதாகத் தான் இருக்கிறது. ஆண் குழந்தைகளை வரமாக நினைத்தவர்கள், பெண் குழந்தைகளை சுமையாகத் தானே நினைக்கிறார்கள். ஒருவேளை பெண்ணினம் இல்லாவிட்டால், இவ்வுலகம் நிலைபெறுமா என்று எவரேனும் சிந்தித்தது உண்டா?

பெண்கள் சுயமாக முடிவெடுத்தால் அதைத் தவறென கருதுகின்றனர் சிலர். பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. மற்றவர்கள் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டு. நம்மால் பெண்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும், தடையாக நிற்கக் கூடாது. ஆண்கள் வெற்றி பெற ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும். அதுவே ஒரு பெண் வெற்றி பெற வேண்டுமாயின் முதலில் தன் குடும்பத்தைத் தாண்டி வெளியில் வர வேண்டும். பெற்றோர்கள் பெண்களை கண்டிப்புடன் வளர்க்க நினைப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு சம உரிமையை அளித்து, உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆண்,பெண் பாலின விகிதத்தில் முன்னேற்றம் : நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்!
Gender Equality

பாலின சமத்துவத்தில் ஆண், பெண் என இருவர் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்களும் இவ்வுலகில் அவதரித்தவர்கள் தான். திருநங்கைகளைக் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். ஆண் பெண் சமம் எனக் கருதும் இவ்வுலகில், திருநங்கைகளும் அனைவரையும் போல சமம் என கருத வேண்டும். திருநங்கைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும்.

கள்ளிச்செடிகளை அன்றே களைந்திருந்தால் பெண் மலர்கள் பல பூத்திருக்கும். பெண் என்பவள் தன் துன்பங்களை மனதில் அடக்கி, புன்சிரிப்பை வெளிக்காட்டும் தேவதை. பெண்களை தேவதையாகக் கூட பார்க்க வேண்டாம். குறைந்தபட்சம் அவர்களை மதியுங்கள். பெண்களை அடிமையாகவே வைத்திருக்க நினைக்கும் ஆணாதிக்கவாதிகள் தானாக திருந்த வேண்டும். இல்லையெனில் இனிவரும் காலங்களில் அவர்கள் திருத்தப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com