“தீபாவளிக் காசு...!”

“தீபாவளிக் காசு...!”

------------------------------------

“கடந்த ஒரு வருஷத்துக்கும் மேல நான் இந்தத் தெருவுல போயிட்டு வந்திட்டு இருக்கேன்...எனக்கு தீபாவளி காசு கொடுங்க...” – என்று மட்டும்தான் இதுவரை வந்து நிற்கவில்லை. அதுவும் அநேகமாக சீக்கிரம் நேர்ந்துவிடக் கூடும். அந்த அளவுக்கு மனம் நொந்து போகிறது. ஏண்டா இந்த தீபாவளி வருதுன்னு இருக்கு...! நோகாதவர்கள் யாரேனும் உண்டு என்று சொல்ல முடியுமா?

ஏனென்றால் இங்கேதான் எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளும் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றனவே...?

ஏரியா தாதாக்கள் மாமூல் வசூல் பண்ணுவதில்லையா கடை கடையாக...? அவர்கள் தீபாவளி வசூல் நடத்தமாட்டார்களா? அதுபோல் இதுவும் ஒன்று இருந்துவிட்டுப் போகிறது? தெருவில் ஒருவன் அல்லது தெருவுக்குத் தெரு ஒரு சிலர் இப்படிக் கேட்கிறார்கள் என்றால் அதையும்தான் யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்.

வருஷத்துக்கு ஒரு தரந்தானங்க...பேசாமக் கொடுத்துட்டுப் போவீங்களா...இதப் போய்ச் சொல்ல வந்திட்டிருக்கீங்க....என்று சொன்னாலும் போயிற்று. இன்று இதுதான் நிலைமை.

போஸ்ட்மேன் மணியார்டர் கொண்டு வருகிறார். மாதா மாதம் தபால் அலுவலகத்தில் கூடியிருக்கும் தாத்தா, பாட்டி, வயதான பெண்கள் ஆண்கள். இப்படி எல்லோருக்கும் வந்திருக்கும் முதியோர் உதவித் தொகைகள், பையன் அனுப்பியிருக்கும் பணம், இவற்றை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குகிறார். அவர்களும் பணம் வந்த மகிழ்ச்சியில், பிரியப்பட்டதைக் கொடுக்கிறார்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதேபோல் வீடுகளில் வழங்கப்படும் மணியார்டர்களுக்கும், அவரவர் விருப்பப்படி ஏதோ கொடுக்கிறார்கள், வாங்கிக் கொள்கிறார்கள். விடுங்கள். இப்படியான எல்லாமும் பரஸ்பரப் புரிதலினாலும், பழக்கத்தினாலும், நட்புணர்வுடனும், ஒரு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் நிகழ்ந்து போகிறது. டீ சாப்பிடுவோமா... என்பதைப் போல.

அலுவலகங்களில் நமக்கு ஒரு அரியர்ஸ் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலுவைத் தொகையும் உரிய காலத்தில் நமக்குக் கிடைத்திருக்காதுதான். அதற்குப் பாடாய்ப் பட்டு, பம்பரமாய்ச் சுழன்றுதான் ஒருவகையாய் அது ஆகியிருக்கும். ஆனால் அந்தத் தொகை வந்ததும் குறைந்தபட்சம் ஒரு எஸ்.கே.சி.யாவது வைக்காமல் நீங்கள் தப்பிக்க முடியாது. நான் சொல்வது மிகப் பழசு. இப்போதெல்லாம் சாப்பாடே வாங்கிப் போட வேண்டியிருக்கிறது. வாங்கிப்போட்டு எல்லோரின் வயிற்றுத் தீயை அணைத்தால்தான் நீங்கள் வாங்கிய காசு உங்களுக்கு விளங்கும்.

மாறுதலில் சென்றால், செல்பவர் ஆபீசுக்கு விருந்து வைத்துவிட்டுத்தான் நகர முடியும். அவர்கள் பதிலுக்கு ஒரு சின்ன மீட்டிங் வைத்து எஸ்.கே.சி. கொடுத்து அனுப்புவார்கள். ஓய்வு பெறுகிறீர்களா? சும்மா நகர்ந்து விட முடியாது. உங்கள் ஓய்வுப் பலன்களையெல்லாம் நீங்கள் உரிய காலத்தில் இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது பெற வேண்டுமா வேண்டாமா? அப்படியானால் நீங்கள் படையல் போடாமல் நகரவே முடியாது. இன்று அதுதான் கலாச்சாரம்.

பெரும்பாலான ஆபீஸ்களில் வாரத்துக்கு ஒன்று என்றேனும் ஏதாவது பார்ட்டி என்று ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. மொத்தமாக சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணி, வரவழைத்து, வேலை பார்க்கும் மேஜையில் கோப்புகளை எல்லாம் அள்ளி ஓரங்கட்டி விட்டு, இலை போட்டுப் பரிமாறி சவரணையாய் சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்டீன்னா வேலை? அதெங்க போகுது...அதத்தான் செய்திட்டிருக்கோம்ல....! என்று நீட்டுவார்கள். இல்லையென்று சொல்ல முடியுமா? உயர் அலுவலருக்குத் தெரிந்தால்? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அவரையும் விருந்துக்குக் கூப்பிட்டாப் போச்சு? அலுவலர் அறைக்குள் நுழைந்து பாருங்கள்...அந்த அலுவலகத்தின் அலுவலர் இருக்கையில் உயர் அலுவலர் அமர்ந்திருக்க, எதிரே அவரும் அமர்ந்து, பியூன் பயபக்தியோடு பரிமாற, அய்யா, அப்பளம் போடட்டுங்களா? பாயசம் விட்டுக்குங்க...இன்னும் கொஞ்சம் கறி...? பொடிமாஸ் இருக்குங்கைய்யா....கணேஷ் மெஸ்ல சூப்பராயிருக்கும்...கொஞ்சம் வைக்கிறேன்.....!!! எங்கிருந்து வந்தது இந்தப் பழக்கம்? ஏன் இந்த அவலம்? எல்லாம் லஞ்சம் கொண்டுவந்த பழக்கம்தான். இந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்திய பழக்கங்கள் என்று சொல்லலாமா?

நீங்கள் வாங்காதவராய் இருக்கலாம். ஆனாலும் நைவேத்தியம் வைத்தால்தான் நகர முடியும். உங்கள் கைக்காசு போட்டு, செய்ய வேண்டிய நியமங்களைச் செய்துவிட்டுத்தான் வெளியே வர முடியும். பின்னால் ஒரு சுமுக நிலையோடு நீங்கள் போய் வர வேண்டாமா? என்ன சார், சௌக்கியமா இருக்கீங்களா? என்று ஒரு சிலராவது உங்களைக் கேட்க வேண்டாமா? இவங்க கேட்டா என்ன கேட்காட்டா என்ன என்று உங்கள் உள் மனது நினைப்பது என்பது வேறு. ஒரு முப்பது முப்பத்தைந்து வருடங்கள் இப்படியான எல்லோருடனும்தானே குப்பை கொட்டியிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் என்னால் வேலை பார்க்க முடியாது என்றால், அன்றே அல்லவா ரிசைன் செய்துவிட்டு வந்திருக்க வேண்டும்? அது செய்யவில்லையே? மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்கள் இருந்ததால் அது சாத்தியமாகவில்லையல்லவா? இதுதான் இன்றைய அவலநிலை.

எதற்கோ ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டதைப் பார்த்தீர்களா? இது இப்படித்தான் விரிந்து கொண்டே போகும். புற்று வைப்பது வேகமாகத்தானே நடக்கும்.

வீட்டு வேலைக்காரம்மாவுக்கு தீபாவளி போனஸ். சேலை, ரவிக்கைத்துணி, பழம், வெற்றிலை பாக்கு தாம்பூலம் சரி. நியாயம்.

சிலிண்டர் போடுபவர், பேப்பர் போடுபவர், பால் பாக்கெட் போடுபவர், அயர்ன்காரர், குப்பை வண்டிக்காரர், கூர்க்கா, கூரியர்காரர் என்றால் கச்சேரி தபால் கொடுப்பவர், இசைச் சங்கத் தபால் கொடுப்பவர், எல்.ஐ.சி., எப்.டி. என்று எப்போதாவது வரும் தபால் கொண்டு வருபவர், மாத இதழ் போடுபவர், குடியிருப்போர் நலச்சங்க கூர்க்கா, எனக் கொடுத்தால் போதாது என்று அந்தப் பகுதி பஞ்சாயத்து ஆட்கள் வேறு ஒரு பெரிய பட்டாளமே படையெடுத்து விடுகிறது. அதுவும் தீபாவளி நெருங்குகிறது என்றால் குப்பை அள்ளும் டிராக்டர் ரொம்ப சின்சியராகத் தெருவுக்குள் நுழைவதைப் பார்க்கலாம். ஒரு ஏழெட்டுப் பேர்கள் படையெடுத்தாற்போல் வீட்டு வாசலில் வந்து, சா....ஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்.........யம்மாஆஆஆஆஆஆஆ... என்று கத்தி நீங்கள் தலையைக் காட்டாமல் விடவே மாட்டார்கள்.

நாங்கதான் குடியிருப்போர் அசோசியேஷன் குப்பை வண்டிக்கும், கூர்க்காவுக்கும் கொடுத்துடுறோம்ல.... உங்களுக்கு எதுக்கு? நீங்க எங்க ரெகுலரா வர்றீங்க? இப்போ திடீர்னு தீபாவளிக்குன்னு வந்திட்டு, காசுன்னா யாரு தருவாங்க...?

நகர்ந்தால்தானே..!!..கொடுங்க தாயீ, எப்பவோ ஒரு வாட்டீ....நல்லாயிருப்பீக...நாங்க இத்தனபேர் இருக்கோம், ஆளுக்குக் கொஞ்சமாப் பிரிச்சிக்கிருவோம்....

இளகிவிட்டீர்களா? சரி, போகிறது என்று ஒரு தொகையை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவீர்கள்.

என் நண்பர் ஒருவர் இருந்தார். இப்பொழுதும் இருக்கிறார். தீபாவளி வசூல் என்று நோட்டுப் போட்டு பிரிவு பிரிவாக வந்து நிற்கும் பியூன்களிடம், எதுக்குய்யா தீபாவளிக் காசு? நீயும் வேலை செய்ற...நானும் வேலை செய்றேன்...நீயும் சம்பாதிக்கிற...நானும் சம்பாதிக்கிறேன். நான் எதுக்கு உங்களுக்குத் தரணும்?அதெல்லாம் தர முடியாது...என்று மறுத்து விடுவார். கடைசி வரை அப்படியேதான் இருந்தார். தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. அவர் இருந்த இருப்பு தவறு என்று சொல்ல முடியுமா?

சரி, கேட்பதோ கேட்கிறோம். அதைக் கொஞ்சம் பணிவாய்க் கேட்போம் என்று இருக்கிறதா எவரிடமும்?

தீவாளிக் காசு வசூல் பண்ணிக்கிட்டிருக்கோம்..... என்பார்கள். தகவல் எப்படி வருகிறது பாருங்கள்.

வீட்டுவரியெல்லாம் வசூல் பண்ணிட்டிருக்கோம் சார்...ஏதாச்சும் ஒண்ணுன்னா அப்புறம் ஜப்திக்கு வந்திருவோம் ஆம்மா...என்பதைப்போல பந்தாவாய்க் கேட்கிறார்கள். காலம் எப்படி மாறிப்போய்விட்டது பாருங்கள்? சார், தீவாளிக்காசு கொடுங்க சார்....ஒருத்தராவது இப்படிப் பணிவாய், அட அதுகூட வேண்டாம்...குரல் தாழ்த்தி சற்று மென்மையாகவாவது கேட்கலாம் அல்லவா? அனுபவப்படாதவர் யாரேனும் உண்டா? சொல்லுங்கள்.

வருஷத்துக்கு ஒரு தடவைதானங்க....கொடுக்கட்டுமே...!

வருஷத்துக்கு ஒருவாட்டி கொடுத்தா என்ன குறைஞ்சா போவாங்க....?

சும்மா கேளுங்க...கொடுப்பாங்க.....- நமது தயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு தடையின்றி விழும் கேள்விகள்.

கேட்டு, யாருக்கேனும் மறுக்க முடிகிறதா? இதுவரை மறுக்க முடிந்திருக்கிறதா?

என்னா சார்...அம்பது கொடுக்கிறீங்க...? போனவாட்டியும் இம்புட்டுத்தான் கொடுத்திங்க...கொஞ்சம் கூட்டிக் கொடுங்க சார்...

பிரியப்பட்டுக் கொடுக்கிறதை வாங்கிக்கப்பா.....

நூறு கொடுங்க சார்...நாங்க ரெண்டு பேரு இருக்கம்ல.....

ஆளாளுக்கு இப்டி வந்தீங்கன்னா, நாங்க எங்க போறது? நாங்களும் ஒரு நோட்டைத் தூக்கிட்டு அலைய வேண்டிதான்.....இன்னும் அது ஒண்ணுதான் நடக்கல...அதுவும் கூடிய சீக்கிரம் நடந்துடும்....

தொலையட்டும் என்று அழுதிருக்கிறீர்களா இல்லையா?

தயவுசெய்து கொடுப்பவைகளை எழுதி மட்டும் வைத்து விடாதீர்கள். பிறகு கூட்டிப் பார்த்தால் நீங்கள் மயக்கமானாலும் போயிற்று. நான் ஜவாப்தாரியில்லை.

ச்ச்சே...!! வாங்கின ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் பூராவும் இதுக்கே சரியாப் போச்சுய்யா...ஆளாளுக்கு வந்து பிச்சுப் பிடுங்கிட்டுப் போய்ட்டானுங்க....ஒத்தக் காசு மிச்சமில்லே....அந்தக் காசுல ஒரு டிபன் கூடச் சாப்பிடலய்யா....வீட்டுல கூட அந்தப் பணத்தைக் கண்ணால பார்க்கலய்யா...

மனசுக்குள் புழுங்கும் உள்ளங்கள் எத்தனை? – மறுக்க முடியுமா?

மனித நேயம், கருணை, அன்பு எல்லாமும் இருக்க வேண்டியதுதான். எல்லாருக்கும் இருக்குதான். யாரு இல்லேன்னா? ஆனால் அவை ஒரு நியாயமான, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டாமா?

ஏன் சார், எப்பவோ ஒருவாட்டி வந்து நிக்கிறாங்க...இதுக்குப்போயி இப்டி டென்ஷனாகுறீங்க...? விடுங்க சார்.... – நான்கு திசைகளிலிருந்தும் குரல்கள் எதிரொலிக்கின்றன. ஆனாலும் மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் இங்கே பல உள்ளங்களிலும், தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் வாய் மூடியிருக்கிறார்கள். அல்லது மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எதுக்குடா இந்த தீபாவளி வருது ? என்று புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் வசதியற்றோர், நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் என்று பரவிக் கிடக்கிறார்கள். சற்றே சிந்திப்பீர் தோழர்காள்...!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com