புகைப் பிடிக்காதே! குடிக்காதே! கண்டதை உண்ணாதே!

உலக கல்லீரல் தினம் - World Liver Day April 19, 2023
புகைப் பிடிக்காதே! குடிக்காதே! கண்டதை உண்ணாதே!

மொழியாக்கம் : பத்மினி பட்டாபிராமன்

ம்முடைய ஜீரணம், மெடபாலிசம் எனப்படும் உடல் இயக்கம், உணவில் இருக்கும் சத்துப் பொருட்களைச் சேமித்தல், தேவையற்றதை வெளியேற்றுதல்,  நோய் எதிர்ப்பு சக்தி  போன்ற மிக முக்கியமான பணிகள் உடலில் நடைபெறுவதில் கல்லீரல் பெரும்பங்கு வகிக்கிறது.

கல்லீரலை சரியான முறையில் பராமரித்தல் மூலம் பல  நோய்களைத் தடுக்க முடியும். கல்லீரல் பாதுகாப்பு மற்றும் அது சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ம் தேதி “உலக கல்லீரல் தினமாக” (World Liver Day) அனுசரிக்கப்படுகிறது. நமது உடல் உறுப்புக்களில், மூளைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய, அதிக சிக்கலான உறுப்பு கல்லீரல்.

இந்த ஆண்டுக்கான தீம் (World Liver Day 2023 )

"Be Vigilant, Do Regular Liver Check-Up, Fatty Liver Can Affect Anyone."

“எச்சரிக்கையுடன் இருக்கவும். அவ்வப்போது கல்லீரல் சோதனைகள் செய்து கொள்ளவும்.  அதிக கொழுப்பு சேர்ந்த  கல்லீரல் பாதிப்பு (Fatty Liver)” எந்த வயதிலும் வரும்.

கல்லீரலை பராமரிக்க முக்கியமான எளிய வழிமுறைகள்;

“நேஷனல் ஹெல்த் போர்டல் ஆஃப் இந்தியா” (The National Health Portal of India) என்னும் அமைப்பு, இந்த உலக கல்லீரல் தினத்தை மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதிகக் குடிப்பழக்கத்தைக் தவிர்க்கும்  அல்லது முற்றிலும் நிறுத்தும் தினமாகவும் குறித்துள்ளது.

இந்த தினமானது, கல்லீரலில் வரும் தொற்று நோய் குறித்தும், தக்க சமயத்தில் சிகிக்சை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுந்த நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், மது, போதைப் பழக்கம் இவற்றால் கல்லீரலைப் பாதிக்கும் ஹெபடிடிஸ் A, B, C (மஞ்சள் காமாலை) போன்ற நோய்கள் தோன்றும் அபாயம் உண்டு.

குறிப்பாக, நுண்கிருமித் தொற்றால் வரும் வைரல் ஹெபடிடிஸ் (Viral Hepatitis) என்பது, ஜங்க் ஃபுட் என்னும் சுகாதாரமற்ற உணவு வகைகளை உட்கொள்வதாலும், சுத்தமற்ற குடிநீரைப் பருகுவதாலும் வரக் கூடியது.

பாதுகாப்பற்ற உடலுறவு, போதைப் பழக்கம் இவற்றால்,கல்லீரலில் சிரோசிஸ் (Liver Cirrhosis) மற்றும் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

உலக சுகாதார மையத்தின் (World Health Organisation (WHO) கணக்கெடுப்புப் படி, இந்தியாவில் ஏற்படும்  மரணங்களுக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் கல்லீரல் நோய்கள் உள்ளன.

நம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதின் அவசியம் என்ன?

நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

பைல் என்னும் திரவத்தை சுரந்து உணவை ஜீரணம் செய்ய உதவுகிறது.

ஆல்கஹால் உட்பட உடலுக்குத் தேவையற்ற மருந்துகளை முறியடிக்கிறது.

இத்தனை நன்மைகளைச் செய்யும் கல்லீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ?

ஆரோக்கியம் தரும் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும்.

தானியங்கள், புரதம், பால் உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்க காய்கள், ஓரளவு கொழுப்புச் சத்து, சிறுதானிய ரொட்டிகள், அரிசி, ஓட்ஸ் போன்ற சீரியல் வகைகள் இவையெல்லாம் கல்லீரலுக்கு நல்லவை.

எப்போதாவது மாற்று ரத்தம் பெற வேண்டியிருந்தால், ஏற்கனவே ஹெபாடிடிஸ் பாதிப்பு ஏற்படாத நபரிடமிருந்து பெறுவதை உறுதி செய்து கொள்ளவும்.

கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையான உடற்பயிற்சி அவசியம்.

குடிப்பழகத்தைக் குறைத்துக் கொள்ளவும் அல்லது முற்றிலும் நீக்கி விட்டால், கல்லீரல் பாதிப்படையாமல் தவிர்க்க முடியும். புகை பிடித்தலும் கண்டிப்பாக கைவிட வேண்டிய பழக்கம்.

போதை மருந்துகளுக்கு நிச்சயமாக நோ சொல்லி விடவும். தேவையில்லாமல் தானே மருந்துகள் உட்கொள்வதும் வேண்டாம்.

பாதுகாப்பான உடலுறவு கொள்வதும் கல்லீரலுக்கு நல்லது.

உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளவும்.  அதிக பருமன், ஆபத்தான கல்லீரல் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.

ஹெபடிடிஸ் போன்ற நோய் பாதிப்புக்கள் வராமல் இருக்க, எந்த பிரச்னை என்றாலும் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறவும்.

கல்லீரல் நோய்களைப் பொறுத்த வரை,பொதுவாக , அவை முற்றி கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும் வரை எந்த அறிகுறியும் வெளியே தெரிவதில்லை.

பசியின்மை, எடைக் குறைவு, மஞ்சள் காமாலை  இவையெல்லாம் மெதுவாகத்தான் தெரிய ஆரம்பிக்கும்.

ஹெபடிடிஸ் வராமல் கல்லீரலை பாதுக்காக்கவும். ஹெபடிடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் ஒரு வீக்கம் (inflammation). இது நுண்கிருமிகளால் வரலாம். அல்லது மது போன்ற தீய பொருட்களால் வரலாம். அறிகுறி எதுவும் வெளிக் காட்டாமலேயே பாதிப்பு தரக்கூடும். ஹெபடிடிஸில்,  தீவிரமான  மற்றும் நீண்ட நாளைய  (acute and chronic) பாதிப்பு உண்டாக்கும் இரண்டு வகைகள் இருக்கின்றன. பொதுவாக, மஞ்சள் காமாலை, பசியின்மை (anorexia (poor appetite) and malaise) இதன் பாதிப்பினால் வரக் கூடியவை.

எதுவானாலும், நோய் வந்த பின் சிகிச்சை செய்து கொள்வதை விட, வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com