உங்களுக்கு “வாடா..போடா” நண்பர்கள் உண்டா? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்!
உங்களுக்கு “வாடா..போடா” நண்பர்கள் உண்டா? | கலைஞர் 100

கலைஞர் பதில்:

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டுகால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி இரண்டு பகுதிகளாக வெளியானது.

“முதல்வர் கலைஞரை இதுவரை நாம் எத்தனையோ முறை சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறோம். அத்தனை முறையும் அரசியல் பற்றித்தான் கேள்ளிகள் கேட்டிருக்கிறோம். பவள விழாக் காணும் அவரிடம் இந்த முறை அரசியல் தவிர்த்த கேள்விகளைக் கேட்டால் என்ன என்று தோன்றியது. அரசியல் தொடர்பான பேட்டிகளுக்கு, நாம் முன்கூட்டியே கேள்விகளைத் தயாரித்து அவரிடம் கொடுப்பதில்லை. என்றாலும் இப்போது தனிப்பட்ட முறையிலான கேள்விகள் என்பதால் கேள்விகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்தோம்.

“கேள்விகளை நானே படித்துப் பதில் சொல்வதை விட நீங்களாகவே கேட்டால்தான் எனக்குப் பதில் சொல்வது சுலபமாக இருக்கும். கேளுங்கள்!" என்ற கலைஞர், “டேப்பில் சரியாக ரெக்கார்ட் ஆகிறதல்லவா?’ என்று கேட்டுவிட்டு வழக்கமான கவனத்துடனும், உற்சாகத்துடனும் பேச ஆரம்பித்தார்” என்ற அறிமுகத்துடன் அந்தப் பேட்டி வெளியானது.

அதிலிருந்து ஒரு பகுதி இதோ:

கல்கி : உங்களுடைய எத்தனையாவது பிறந்த நாள் பிரபலமாக பெரிய அளவில் முதன் முதலாக கொண்டாடப்பட்டது? அப்போது யாரெல்வாம் உங்களை வாழ்த்தினார்கள்?

கலைஞர் மு. கருணாநிதி : என்னுடைய 44-வது பிறந்து நாளின் போதுதான் சென்னையிலுள்ள கழகத் தோழர்கள், தொண்டர்கள் எல்லாம் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நான் சென்னையிலேயே இல்லாமஸ் மன்னைக்கு ஓடி விட்டேன்!

கல்கி : ஏன்?

கலைஞர் : பிறந்த நாள் கொண்டாடப்படக்கூடாது என்றுதான். ஆனாலும் கலைவாணர் அரங்கத்தில் அண்ணா தலைமையில் எனது பிறந்த நாள்கொண்டாடப்பட்டது. நான் இல்லாமலேயே கொண்டாடப்பட்டது! அந்த விழாவில் அண்ணா சொன்னதுதான்: "தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி” என்பது. அண்ணாவின் அந்த வாழ்த்தைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன்,

கல்கி : இன்றளவும் மறக்க முடியாத பள்ளிக்கூட அனுபவம் ஒன்றைச் சொல்லுங்களேன்!

கலைஞர்: நான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததே பெரிய அனுபவம்தான். திருக்குவளை கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும்போது எனக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியர், எனனை எட்டாம் வகுப்பில் சேர்ப்பதாகச் சொல்லி திருவாரூருக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ஆனாலும் நான் ஐந்தாம் வகுப்பில்தான் சேர்க்கப்பட்டேன். அதில் சேருவதற்குப் போதுமான அளவு மதிப்பெண்ணைக் கூட நான் பெறவில்லை என்பதால் அதில் சேர்ந்ததும் ஒரு கதை.

அப்போது கஸ்தூரிரங்க ஐயங்கார் என்பவர் ஹெட் மாஸ்ட்டர். அவர் ரூமுக்கு ஓடிப் போய், “ என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா? இல்லை எதிரில் உள்ள கமலாலயக் குளத்தில் போய் விழவா? என்று சொல்லிவிட்டு ஓடி வந்தேன். உடனே, ஹெட்மாஸ்டரே ஓடி வந்து என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய், எனக்கு ஐந்தாம் வகுப்பில் அட்மிஷன் கொடுத்தார்.

கல்கி : மறக்க முடியாத உங்கள் இளம் வயது நண்பர் யார்?

கலைஞர் : திருவாரூர் தென்னன்தான்.

கல்கி : உங்களைக் கட்சியின் தலைவராகவோ அல்லது முதல்வராகவோ நினைத்துப் பழகாமல், மு. கருணாதிதி என்கிற அளவில் மட்டுமே பழகிக் கொண்டிருக்கிற நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?

கலைஞர் : சி.டி. மூர்த்தி என்பவர். அவரை சி.டி.எம். என்று அழைப்போம். சென்னையில்தான் இருக்கிறார்.

கல்கி : எல்லோருக்குமே 'வாடா போடா' என்று அழைக்கிற அளவுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படி உங்களை அழைக்கிற அளவுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?

கலைஞர் : சி.டி. மூர்த்திதான். அவரை நான் ‘வாங்க, போங்க’ என்றுதான் சொல்லுவேன். என்றாலும், அவர் என்னை “வா, போ” என்றுதான் அழைப்பார்.

கல்கி : நீங்கள் முதன் முதலில் சத்தித்த திராவிட இயக்கப் பிரமுகர் அல்லது தலைவர் யார்?

கலைஞர்: பட்டுக்கோட்டை அழகிரிசாமி. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்ட நேரம். அப்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும்.

கல்கி : பெரியாரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த அம்சம் என்ன?

கலைஞர்: அவருடைய அயராத உழைப்புத்தான்.

கல்கி : உங்களைப் பற்றிப் பிறர் குறிப்பிடும்பொதும் உங்களுடைய உழைப்பைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள்.

கலைஞர்: பெரியாரின் மாணவன்தானே நான்?

கல்கி : பெரியாரின் அயராத உழைப்புக்கு ஓர் உதாரணம் சொல்லுங்களேன்!

கலைஞர் : பெரியார் அவர்கள் சிறுநீரக நோய்க்கு ஆட்பட்டிருந்தார். ஒரு டியூபின் மூலமாகத்தான் அவரது சிறுநீர் வெளியேற்றப்படும். அதற்காக எப்போதும் அவருடன் ஒரு வாளி இருக்கும். உட்கார்ந்து பேசும்போதும் அந்த வாளி கூடவே இருக்கும். இந்த நிலையிலும் அவர், தமது சுற்றுப் பயணங்களைக் குறைத்துக் கொண்டது கிடையாது. அதனால்தான் அவர் மறைந்த போது நான், 'பெரியார் தமது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்டார்' என்று சொன்னேன். அப்படியோர் அயராத உழைப்பு அவருடையது.

கல்கி : கல்லூரியில் படிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?

இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் என்ன?

நாளை பார்க்கலாம்.

கல்கி 07.06.1998 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com