பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி பற்றி தெரியுமா?

உலக எழுத்தறிவு நாள் – செப்டம்பர் 8 (World Literacy Day)
பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி பற்றி தெரியுமா?
Published on

ரு நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், அந்த நாட்டு மக்களின் எழுத்தறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சி வித்தியாசத்தின் முக்கியமான காரணி நாட்டு மக்களின் எழுத்தறிவு. அடிக்கடி கலவரம் மற்றும் இராணுவ புரட்சி மூலம் ஆட்சி மாறும் சில ஆப்ரிக்க நாடுகளின் மக்களது எழுத்தறிவு குறைந்த விகிதத்தில் உள்ளது.

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது நாட்டின் எழுத்தறிவு விகிதம் 12 விழுக்காடுகளாக இருந்தது. தற்போது எழுத்தறிவு விகிதம் 74.04 விழுக்காடுகளாக உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டின் விகிதம் 80.09 விழுக்காடுகள். கேரளா 94 விழுக்காடுகள் பெற்று இந்தியாவிலேயே எழுத்தறிவு உள்ளோர் அதிகமாக உள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நமது நாட்டில் நகர்ப்புறத்தில் விகிதம் 84.11 விழுக்காடுகள். ஆனால் கிராமங்களில் அந்த விகிதம் 67.77 விழுக்காடுகளாக குறைந்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 வருடத்தில் எழுத்தறிவு விகிதத்தில் நம்முடைய முன்னேற்றம் பாராட்டத்தக்கது எனலாம். இருப்பினும் வளர்ந்த நாடுகளைப் போல நாமும் 100 விழுக்காடுகள் என்ற இலக்கை சீக்கிரம் எட்ட வேண்டும். மேலும், நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் எழுத்தறிவில் உள்ள இடைவெளி குறைய வேண்டும்.

உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் 1965ஆம் வருடம் டெஹ்ரான் நகரில் கூடி உலகளாவிய நிலையில்; எழுத்தறிவின் தரத்தை உயர்த்தும் வழிகள் பற்றி விவாதித்தார்கள். அதன்படி, 1966ஆம் வருடம், யுனெஸ்கோ, செப்டம்பர் 8ஆம் தேதியை, “உலக எழுத்தறிவு நாள்” என்று அறிவித்தது. ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், எழுத்தறிவின் அவசியத்தை உலகில் எல்லா மக்களும் உணரும்படி செய்ய வேண்டும் என்பதே எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம்.

ஒவ்வொரு வருடமும் எழுத்தறிவு நாளுக்கென்று ஒரு குறிக்கோள் வகுப்பார்கள். 2023ஆம் வருடத்திற்கான குறிக்கோள் “மாறிவரும் உலகத்தின் தேவைக்கேற்ப எழுத்தறிவை ஊக்குவித்தல்”

உலகில் நடைபெறுகின்ற பற்பல மாறுதல்களினால், எழுத்தறிவை உயர்த்தும் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளிடையே, எழுத்தறிவு விகிதத்தில் இடைவெளி கூடி வருகிறது. குறைந்த அல்லது நடுத்தரமான வருவாய் உள்ள நாடுகளில், 2019ல் பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்களிடம் எடுத்த ஆய்வின் படி, படித்து அதனைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர்கள் 57 சதவிகிதமாக இருந்தார்கள். இது தற்போது 70 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் பல்கிப் பெருக வேண்டும். மாநிலங்கள், மாவட்டங்கள் தோரும் நூலகங்கள் அமைய வேண்டும். மேலை நாடுகளில் மக்களுக்குக் கட்டணமில்லாத சேவையாக நூலகங்கள் நடத்தப்படுகின்றன. பலவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு புத்தகங்கள் தடையல்ல. இணைய தளத்தில் எதைப் பற்றியும் அறிந்து கொள்ள விவரங்கள் உள்ளன.

மத்திய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பிடிஎப் வடிவிலான இப்புத்தகங்களை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல அறிவுப் பசி உள்ள எல்லோருக்கும் இத்தளத்திலுள்ள புத்தகங்கள் உதவும்.

2022ஆம் வடிவத்திற்கான பாடத்திட்டத்தின்படி இந்த தளத்தில், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்கள் 900. இவற்றில் ஆங்கிலத்தில் மொத்தம் 242 புத்தகங்கள். மராத்தி, இந்தி, உருது, குஜராத்தி, சிந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என்று ஒன்பது இந்திய மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. தற்போது தமிழ் மொழியில் 34 புத்தகங்கள்.

கல்வியறிவை மேன்படுத்திக் கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும்.

உளவியல், தர்க்கம், தத்துவம், புவியியல், வேளாண்மை, பாதுகாப்பு ஆய்வுகள், பொருளாதாரம், விலங்கு அறிவியல், தகவல் தொழில் நுட்பம், அரசியல் அறிவியல் என பலதரப்பட்ட பொருட்களில் ஆங்கிலத்தில் புத்தகங்களைக் காணலாம். ஜெர்மன், ப்ரெஞ்ச், ரஷ்ய மொழி கற்றுக் கொள்ளவும் புத்தகங்கள் உள்ளன.

இணையதளம் – cart.ebalbharati.in

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com