தமிழில் என்சைக்ளோபீடியா உருவான வரலாறு தெரியுமா?

தமிழில் என்சைக்ளோபீடியா...
தமிழில் என்சைக்ளோபீடியா...

ந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் ஆங்கிலத்தின் என்சைக்ளோபீடியா போன்ற, நவீன கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?

அந்தக் கலைக்களஞ்சியத் திட்டம் உதயமானது, இந்தியா சுதந்திரம் அடைந்த அன்றேதான். ஆம், தமிழின் கலைக் களஞ்சியத் திட்டம் ஆகஸ்டு 15, 1947 அன்று தொடங்கப்பட்டது. இதனை உருவாக்குவதற்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே, 1902 ஆம் ஆண்டு, அபிதான கோசம் என்ற கலைக்களஞ்சியம் ஈழத்தில், ஆ. முத்துத்தம்பி பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, 1910ஆம் ஆண்டு, அபிதான சிந்தாமணி என்ற மேம்பட்ட கலைக்களஞ்சியம் ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்துக்கு நிகரான நவீன கலைக்களஞ்சியம் சுதந்திரத்திற்கு பிறகு,  முதன்முதலாக தமிழில்தான் இந்தியாவில் வெளிவந்தது (மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே).

அவினாசிலிங்கம் செட்டியார்
அவினாசிலிங்கம் செட்டியார்

இந்த திட்டத்தினை மதராஸ் மாகாணத்தின் அன்றைய கல்வித் துறை அமைச்சராக இருந்த, அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கினார். இதன் பொறுப்பாசிரியராக பெரியசாமித் தூரன் இருந்து, இதைத் தொகுத்தார். முதல் ஐந்து ஆண்டுகள், புதிய கலைச்சொற்களை உருவாக்குவது, சர்வதேச கலைச்சொற்களை தமிழில் ஏற்றுக்கொள்வது, எப்படி புதிய கருத்துகளை எடுத்துச் செல்வது, திட்டமிடுவது என்று செலவானபோதும், இதன் முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து வருடம் ஒரு தொகுதி வெளியானது. 9 ஆவது தொகுதி, 1963 ஆம் ஆண்டு வெளியாகியது. 1968 ஆம் ஆண்டு, 10 ஆவது தொகுதி வெளியாகி, மாபெரும் சாதனையைப் படைத்தது. இதனை வெளியிட்டமைக்காக பெரியசாமி தூரனுக்கு 1968 ஆம் ஆண்டு, பத்மபூஷன் விருது, இந்திய அரசால் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மாபெரும் நிதி தேவைப்பட்டது. இதற்கு அன்றைய தேதியில்,  14 இலட்சம் ஆகுமென கணிக்கப்பட்டது. இந்திய அரசாங்கமும், சென்னை அரசாங்கமும் இதற்கு நிதி தர முன்வந்தன. மேலும், நிதி வழங்கியதில் ஆதீனங்கள், திருப்பதி தேவஸ்தானம் போன்ற ஆன்மீக நிறுவனங்களும், அழகப்ப செட்டியார், எம்.ஏ முத்தையா செட்டியார் போன்ற தொழிலதிபர்களும், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற எழுத்தாளர்களும் அடங்குவர். அவினாசிலிங்கம் செட்டியார் அமைச்சர் பதவியில் இருந்து மாறிய போதும், இப்பணிக்கு தொடர்ந்து பங்காற்றினார்.

இந்த மாபெரும் முயற்சிக்கு ஏறத்தாழ 1200 கட்டுரையாளர்கள் பங்காற்றினர். அந்தந்த துறை வல்லுநர்கள் கட்டுரைகளை எழுதினர். உதாரணமாக, புத்தரைப் பற்றிய கட்டுரையை டாக்டர். இராதாகிருஷ்ணன் எழுதினார். ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட 750 பக்கங்களை உடையது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை, தமிழறிஞர்கள் ராபி.சேதுபிள்ளை, ரசிகமணி டி.கே.சி போன்ற பலரும் பங்காற்றினர்.

இந்த கலைக்களஞ்சியம் தற்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த மாபெரும் முயற்சியை செயல்படுத்திய பெரியசாமி தூரன் அவர்களது உழைப்பு பிரமிப்பிற்குரியது.

இந்த பிரம்மாண்ட முயற்சியைத் தொடர்ந்து, பெரியசாமித் தூரன் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தை 10 தொகுதிகளாக உருவாக்கினார். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 100 பக்கங்களை உடையது.

இந்தக் கலைக்களஞ்சியம் வந்த பின்னர், இதன் அடிபின்பற்றி நூற்றுக்கணக்கான அறிவு சார்ந்த நூல்கள் தமிழில் வெளிவந்தன. தமிழில் அறிவுப் புரட்சிக்கு இந்தூல் தூண்டுகோலாக விளங்கியது என்றால் மிகையல்ல!

இந்தக் கலைக்களஞ்சியத்தைப் போலவே, மேம்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடையவில்லை என்பது வருந்தத்தக்கது. அவை கட்டுரைக் குவியல்களாக மட்டுமே திகழ்ந்தன. பின்னர், நல்லதொரு மாற்றம் தமிழ் விக்கிபீடியா வழியாக உருவானது. இன்று தமிழ் விக்கிபீடியா இணையத்தில் தமிழில் கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
க்ரான்பெரி டீயிலிருக்கும் ஆரோக்கியம் அறிவோமா?
தமிழில் என்சைக்ளோபீடியா...

இந்திய மொழிகளில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கட்டுரைகளைத் தாண்டி, உருதுவிற்கு அடுத்தபடியாக தமிழ் விக்கிப்பீடியாதான் அதிக கட்டுரைகளைக் கொண்டதாக உள்ளது என்பது பெருமிதத்துக்குரியது!

இன்றைய தமிழ் இளைஞர்கள், இத்தகைய தமிழ் களஞ்சியத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மேலும் தமிழ் மொழியை வளப்படுத்த ஆவன செய்ய வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com