மிக்ஜாம் புயலின் எதிரொலி - தவறு நடந்தது எங்கே?

Rain water in Chennai
Rain water in Chennai

மிக்ஜாம் புயல் அடித்து ஒரு வாரம் ஆன நிலையில் சென்னையின் பல பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள இவ்வேளையில் தேங்கிய மழை நீரில் சிக்கி தவிக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க, பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓர்  புரிதலுக்காக தமிழக அரசு திருப்புகழ் கமிட்டி அமைத்திருந்தது. சென்ற மே மாதம் 2022ல் அந்த கமிட்டி தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், சென்னையில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதற்கு குறிப்பிட்ட மூலக்காரணம் சென்னையில் உள்ள நதிகளுக்கும், மழை நீர் வடிகால்களுக்கும் சென்னையின் உபரி மழை நீரை தாங்கும் சக்தி இல்லாதது தான் என்றும், அதனை உடனே சீர் செய்யவும் தமிழ் நாடு அரசிற்கு அறிவுரை செய்திருந்தது . மேலும் கரை ஓர ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும், நதிக்கரைகளின் மீது எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் உடனே தடை செய்யும்படியும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

வெள்ள அபாயப் பகுதிகளை ஆய்வு செய்து, அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மற்றும் ,வெள்ள நீர் செல்லும் வழியில் குறுக்கிடும் பட்டா உள்ள மற்றும் அரசு நிலங்களை கண்டுபிடித்து அங்கே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை செய்யும்படியும் வலியுறுத்தி இருந்தது. கரைகளை சுற்றி ஈகோ பூங்கா, நடைபாதை, விளையாட்டுத் திடல் போன்ற திட்டங்களைக் கூட அந்த கமிட்டி கைவிடும்படி அறிவுரை செய்திருந்தது.

பெரும்பாக்கம்
பெரும்பாக்கம்

சென்னை ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம் ஓடை, அரசன்கழனி மற்றும் பெரும்பாக்கம் நீர் நிலைகளை இணைக்கும் வண்ணம் கால்வாய்களை உடனே போட வலியுறுத்தியுள்ளது அந்த அறிக்கை. இந்த கால்வாய் பாதையில் தனியார் நிலங்கள் இருந்தாலும் உடனே இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தென் சென்னை பகுதிகளில் வெள்ள பாதிப்பை மிகவும் குறைக்கும் என்கிறது திருப்புகழ் கமிட்டி.

தென் சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை சில பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அவ்விடத்தில் கள ஆய்வு மேற்கொண்டு அந்த மக்களிடம் நாம் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

பள்ளிக்கரணை:

ள்ளிக்கரணை காமாக்ஷி ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்து அளவு வெள்ளம் வடியாமல் இரண்டு நாட்கள் நிலைகொண்டு இருந்தது. அப்பகுதி மக்கள் பகிர்ந்த வீடியோ மற்றும் புகைப்பட ஆவணங்கள மூலம், முழுக் கார்கள் கூட மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகிறது. அவர்கள் சாலையில் நிறுத்தியிருந்த கார்களை வைத்து தண்ணீர் நிலை முழங்கால் அளவு குறைந்ததை உணர்ந்து, அரசு சார்பில்  எந்த ஒரு உதவியும் இல்லாமல் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் அகதிகள் போல மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை

“ மழை ஓய்ந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நாங்கள் அரசு சார்பில் படகுகள் மூலம்  நிவாரணப் பொருட்கள், மற்றும் குடி தண்ணீராவது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தோம். குறைந்த பட்சம் , நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம் என்று ஒலிப்பெருக்கிகள் மூலமாவது அறிவுரை செய்திருக்கலாம்,” என்று வருந்துகிறார் கேசவன் தெருவை சேர்ந்த சரண்யா.

அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் சொல்வது என்னவென்றால், நண்பர்கள் உதவியோடு ஓரிரு தனியார் படகுகள் மட்டுமே அங்கு வந்து சில முதியோர்களையும், பச்சிளம் குழந்தைகளையும் மீட்டனர் என்றும், மற்றபடி புதன் கிழமை அன்று அடையார் பகுதியை சேர்ந்த மாத்தூர் என்பவர் பால், தயிர் மற்றும் நிவாரணப் பொருட்களை கொடுத்துவிட்டு  சென்றதாக கூறுகிறார்கள்.

பள்ளிக்கரணைகேசவன் நகர்
பள்ளிக்கரணைகேசவன் நகர்

“நான் வியாழன் அன்று கால் நடையாக வீட்டை விட்டு வெளியேறி எனது உறவினர வீட்டில்  தஞ்சம் புகுந்தேன். அப்போது காமாக்ஷி மருத்துவமனை உள்ள பிரதான சாலையில் மழை வெள்ளம் வடிந்து விட்டதாக செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு சொல்ல முடியாத கோபமும், அழுகையும் வந்தது. பிரச்சனை இருக்கிறது என்று கூட ஒப்புக் கொள்ள முடியாத அரசும், ஊடகங்களும் இருக்கும்போது எத்தனை மழை வந்தாலும் எங்கள் நிலை மாறாது என்ற ஏமாற்றமே மேலோங்கி இருக்கிறது,” என்று வருந்துகிறார் அப்பகுதியை சேர்ந்த பாலாஜி.

வேளச்சேரி:

ழை வெள்ளம் என்றால் ஒவ்வொரு முறையும் சென்னையில் கவனம் பெறும் இடம் வேளச்சேரி. அங்கே உள்ள ராம் நகர், தான்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திருந்தது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மூன்று நாட்கள் தவித்து உள்ளனர்.

வேளச்சேரி நிவாரணப் பொருள் வழங்குதல்...
வேளச்சேரி நிவாரணப் பொருள் வழங்குதல்...

“ எனது நண்பர் ராம் நகரில் இருந்து அவரை மீட்கக் கோரி என்னை தொடர்பு கொண்டார். நானும் ஒரு தனியார் படகு ஏற்பாடு செய்து, எனது ஓட்டுநர் ஜஸ்டினையும் அனுப்பி வைத்தேன். ஜஸ்டின்  அங்கே பல குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாகவும், தண்ணீர் பாட்டில்களாவது அவர்களுக்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே நானும், எனது வேளச்சேரி மலையாளி அசோசியேஷன் நண்பர்களும் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இரண்டு நாட்களுக்கு மேலாக விநியோகித்து வருகிறோம்,” என்று கூறுகிறார் வேளச்சேரியை சேர்ந்த மருத்துவர் அஸ்வின் குமார்.

வேளச்சேரி பகுதி
வேளச்சேரி பகுதி

“எத்தனை பேர NDRF படகுல காப்பாத்த முடியும்? இங்க நூத்துக் கணக்குல மக்கள் இருக்காங்க. அதான் எங்களால முடிஞ்சத நாங்க செஞ்சோம். மனுசனுக்கு மனுசன் இது கூட செய்யலன்னா எப்படி?” என்று கூறுகிறார் ஜஸ்டின். 

செம்மஞ்சேரி:

பழைய மகாபலிபுர சாலையில் விரைவாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி செம்மஞ்சேரி. இங்கே சுனாமி குடியிருப்புகளும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்புகள் இரண்டு அடுக்குகளிலும், ஏழு அடுக்குகளிலும் அங்கு  உள்ளன. முழங்கால் அளவு தண்ணீரில் அப்பகுதி மக்கள் மின்சாரமும் இன்றி, அடிப்படை பொருட்களும் இன்றி நான்கு நாட்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி

“ பால் பாக்கெட்  வாங்க கூட வெளியில போக முடியல. தண்ணீல பாம்பு எல்லாம் ஓடுது. வீட்டுல வேற எலி, கொசு தொல்லை தாங்கல. ஒரு நிவாரணப் பொருள் கூட எங்களுக்கு கிடைக்கல.

நான் வேலை செய்யுற எடத்துல இருந்து எங்களுக்கு ஒரு அம்மா எங்க குடியிருப்புல இருக்குற எல்லாருக்கும் பால் பாக்கெட்டும், ப்ரெட் பாக்கெட்டும் வாங்கிக் கொடுத்தாங்க. அதே போல வெள்ளிக் கிழமை ஒரு தனியார் நிறுவனம் எங்களுக்கு மளிகை சாமான் கொடுத்துட்டு போனாங்க. அரசு சார்பா ஒண்ணும் எங்களுக்கு கிடைக்கல,” என்று புலம்புகிறார் அப்பகுதியை சேர்ந்த கோமதி.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தம் சீராக உதவும் செஸ்ட்நட்!
Rain water in Chennai

சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களாக சென்னையில் பல்வேறு சாலைகளில் பல கோடி ரூபாய் செலவில் தற்போது மழை நீர் வடிகால்கள் கட்டி வருகின்றது. இந்தப் பணிகளை திருப்புகழ் கமிட்டி அறிவுரையின்படி சென்ற ஆண்டே துவங்கியிருந்தால் இந்த பெருவெள்ளத்தில் இருந்து சென்னை வாசிகள் ஓரளவேனும் பிழைத்திருக்கலாம்.

நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி, நீர்நிலைகளை அழித்தால் தாங்காது சென்னை என்பது தான் டிரெண்டிங் புதுமொழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com