
இன்று அக்டோபர் 14ஆம் தேதி சூரிய கிரகணம். மேலும், அக்டோபர் 28/29 சந்திர கிரகணம். சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. மூன்று வகையான சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. சூரியன் முழுமையாக மறைக்கப்படுவது ‘முழு சூரிய கிரகணம்’. சூரியனின் பகுதி மறைக்கப்படுவது ‘பகுதி சூரிய கிரகணம்’. சூரியனின் நடுப்பகுதி மறைந்திருக்க, ஒளி வட்டம் மற்றும் தெரிவது ‘நெருப்பு வளைய சூரிய கிரகணம்’.
14ஆம் தேதி சூரிய கிரகணம், இரவு 8:34 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 2:25 வரை நீடிக்கிறது. இரவில் கிரகணம் ஏற்படுவதால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. அமெரிக்காவில் ஓரிகான் மாநிலத்தில் ஆரம்பித்து, அமெரிக்காவின் பல இடங்களிலும், மெக்ஸிகோ, ப்ரேசில், பனாமா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் ‘நெருப்பு வளைய சூரிய கிரகணம்’ தென்படும். அமெரிக்கா, பிரேசில் சில பகுதிகளில் ‘பகுதி சூரிய கிரகணம்’ காணலாம். இந்த வான வெளி அதிசயத்தைப் பார்ப்பதற்கு, பல்லாயிரக் கணக்கான மக்கள் பூங்காக்களுக்கு வருகை தருவார்கள்.
ஆனால், அமெரிக்காவில் அரிசோனா, நியூ மெக்ஸிகோ, உட்டா மாநிலங்களின் சில பகுதிகளில் பார்வையாளர்கள் வருகையைத் தடை செய்வதற்காக பூங்காக்கள் பூட்டி வைக்கப்படும். இந்த சில மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியது நவஜோ தேசம் எனப்படுகிறது. இங்கு ‘தினே’ என்ற அமெரிக்க பழங்குடியினர் வசிக்கிறார்கள். கிரகண காலத்தில் சூரியனைப் பார்த்தால் இயற்கையுடன் உள்ள ஆன்மீக நல்லிணக்கத்திற்கு கெடுதல் நேரிடும் என்பது இந்த பழங்குடியினரின் நம்பிக்கை. நவஜோ தேசத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டிற்கும். கிரகணம் ஆரம்பித்தவுடன் வீட்டிற்குள் சென்று விடும் ‘தினே’ இனத்தைச் சேர்ந்தவர்கள், கிரகணம் முடியும் வரை உணவு அருந்த மாட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
உலகெங்கிலும் பல நாடுகளில் கிரகணத்தைப் பற்றிய பரவலான சில நம்பிக்கைகள் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
நம்முடைய புராணங்களின் படி, பாற்கடலிலிருந்து சாகாவரம் அளிக்கும் அமுதம் கடைந்தெடுக்கப்பட்டது. மோகினி உருவத்தில் அசுரர்களை ஏமாற்றி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் அளிக்க முற்பட்டார் மகாவிஷ்ணு. அப்போது, ஸ்வரபானு என்ற அசுரன் தேவர் ரூபத்தில் அமுதம் பருக சூரியன், சந்திரன் இடையே அமர்ந்தான். விஷ்ணு அருகில் வரும்போது, சூரிய சந்திரர்கள், நடுவில் அமர்ந்திருப்பது அசுரன் என்று காட்டிக் கொடுக்க, விஷ்ணு ஸ்வரபானு தலையைக் கொய்தார். ஆனால், அதற்குள் ஸ்வரபானு அமுதம் பருகியதால், உயிர் பிழைத்தார். அந்த தலையும், முண்டமும் முறையே ராகுவும், கேதுவும் ஆகியது. அந்த கோபத்தினால் ராகு அடிக்கடி சூரியன், சந்திரனை விழுங்க கிரகணம் ஏற்படுகிறது. தலை மட்டும் உள்ள ராகுவிற்கு, கைகள் இல்லாததால், சூரிய சந்திரர்களை வெகு நேரம் பிடித்து வைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதால், கிரகணம் சில மணி நேரங்களே நீடிக்கிறது.
கிரேக்க நாட்டினர், கடவுளின் கோபத்தால் கிரகணங்கள் ஏற்படுவதாகவும், அது உலகில் பேரழிவு ஏற்படும் என்பதற்கு அறிகுறி என்று நம்பினர்.
நியூ மெக்ஸிகோவின் ‘டேவர்’ இன பழங்குடியினர், சூரியன் கோபம் கொண்டு வானத்தில் தன்னுடைய இடத்தை விடுத்து, பாதாளத்திலுள்ள அவனுடைய வீட்டிற்குச் செல்வதாக நம்பினர்.
மற்றுமொரு பழங்குடியினரின் நம்பிக்கை, சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் கிரகணம் உண்டாகிறது. அதைத் தடுப்பதற்கு, உலக மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
வியட்நாமில், பெரிய தவளை சூரியனை விழுங்குவதாலும், “நோர்ஸ்” பழங்குடியினர் ஓநாய்கள் விழுங்குவதாலும், சைனாவில் வான்வெளி டிராகன் விழுங்குவதாலும், கொரியா பழங்குடியினர், நாய்கள் விழுங்குவதாலும் கிரகணங்கள் ஏற்படுவதாக நம்பினர்.
‘போமோ’ பழங்குடியினர், சூரியனுடன் சண்டை போட்ட கரடி அதன் ஒரு பகுதியைத் தின்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறதென்றும், அதற்குப் பின்னர் சந்திரனின் ஒரு பகுதியைத் தின்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறதென்றும் நம்பினர். அதனால்தான் இரண்டு கிரகணங்களும் அடுத்தடுத்து இரு வார இடைவெளியில் நடைபெறுவதாகவும் முடிவு செய்தனர். கிரகண காலங்களில் மக்கள் ஒன்று கூடி பெருத்த கூச்சலிட்டும், மேளம், தாரை, தப்பட்டை போன்ற இசைக் கருவிகளை அதிக ஒலியுடன் இசைப்பதாலும் சூரிய, சந்திரனை விழுங்க வந்த மிருகங்கள் பயந்து ஓடிவிடும் என்றும் இவர்கள் நம்பினர்.