பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

Elderly
Elderly
Published on

சாலையில் அனாதரவாகத் திரியும் முதியவர்களைக் காப்பாற்றி தம் பொறுப்பில் வைத்துப் பராமரிக்கிறது அரசு சுகாதாரத் துறை.

அதேசமயம், பொதுமக்களில் சிலர், ‘‘நீங்கள் பராமரிக்கும் முதியவர்களில், எங்களுடைய பெற்றோர்களும் இருந்தால், அவர்களை நாங்கள் திரும்ப எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம்‘‘ என்று அதிகாரிகளைக் கேட்டிருக்கிறார்கள்.  

தாம் பராமரிக்க மறுத்த அநியாயத்தைப் புரிந்து கொண்டோ அல்லது அத்தகைய பெரியவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுமானால், அதைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்கிறவர்கள் தம்மை கேலி பேசுவார்களே என்ற அவமான உணர்வோதான் இப்படி கேட்டுக் கொள்வதற்குக் காரணம். 

தெருவில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், பிச்சைக்காரர்களையும் மீட்டுச் சென்று அவர்களுடைய நலத்தைக் காக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பொது சுகாதாரத் துறை. அவர்களில் சிலரை பொதுநலத் தொண்டு புரியும் தன்னார்வ அமைப்புகளின் பராமரிப்பில் விட முடிவு செய்து அப்படியே ஒப்படைக்கவும் செய்திருக்கிறார்கள்.

தெரிந்தே தம் பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் அத்தகையப் பிள்ளைகள் சிலருக்கு மனசாட்சி உறுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் அப்படி விண்ணப்பித்திருக்கிறார்கள்.  

பொதுவாகவே முதியோர்கள் அலட்சியப்படுத்தப்படுவது பல குடும்பங்களில் நிகழத்தான் செய்கிறது. சில குடும்பங்களில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அளவுக்கும் போய்விடுகிறது. ஆனால், முதியவர்கள் இப்போது தம் வேதனைகளை வெளிப்படுத்தவும், தம்மைத் தம் பிள்ளைகள் பராமரிக்க வேண்டிய கடமையை, சட்டம் மூலமாக அவர்களுக்கே உணர்த்தவும் முன்வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தந்தையார், தன்னைத் தன் மகன் முறையாகப் பராமரிப்பதில்லை என்று புகார் செய்திருக்கிறார். தான் அந்தப் பிள்ளையை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் என்பதை விவரித்திருக்கும் அவர், தனக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மகன் தன்னைப் புறக்கணிக்கிறான்; தனக்குக் குறைந்தபட்ச வசதிகளைச் செய்து கொடுக்காமல் இருக்கிறான் என்றும் சொல்லியிருக்கிறார். 

அதேபோல ஒரு தாயார் தன்னைத் தன் இரு மகன்களும் கவனிப்பதில்லை என்று புகார் அளித்திருக்கிறார். ஒரு மகன் வீட்டில் தான் தங்கியிருக்கும்போது, சகோதரன் வீட்டில் போய் வசிக்குமாறு அவன் தன்னை விரட்டிவிடுவதாகவும், இன்னொரு மகனோ தன்னை வீட்டிற்குள் சேர்க்காமல், முதல் மகன் வீட்டிற்கே போகச் சொல்லி, கதவைத் தாள் போட்டுக் கொள்வதாகவும் வருந்தி தன் மனவேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

இதையும் படியுங்கள்:
சீனியர் சிட்டிசன்கள் உண்பதற்கு உகந்த உணவுகள்!
Elderly

தன் மகன் வீட்டில் தனக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துத் தரப்படாத நிலையில், ஒரு தாய் அல்லது தந்தையால் வெளியில் சென்று பிச்சை எடுத்துதான் அந்த உணவைத் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற கொடுமையான தகவல், மீட்கப் பட்ட சில முதியவர்களிடமிருந்து தெரிய வந்திருக்கிறது. இதைவிட, தாமே அப்படி பெற்றோரை வெளியே அனுப்பி, பிச்சை எடுக்க வைத்து, அவர்கள் கொண்டுவரும் தொகையைப் பறித்துக் கொள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான தகவல். 

காப்பாற்ற யாரும் இல்லாத முதியவர்களை காப்பிடங்களில் தங்க வைத்து அரசு பராமரிக்கிறது. ஆனால் சொந்த மகனோ, மகளோ இருக்கும் குடும்பத்திலிருந்தும் முதியவர்கள் இப்படி தெருவில் திரியவேண்டிய சோகம் மிகக் கொடுமையானது.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இந்தக் கொடுமையைக் களைய முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. அதாவது முதியவர்களுடைய மகன் அல்லது மகளிடம் பேசி, அவ்விருவரிடையே பாசத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியை அவர்கள் எடுத்து வருகிறார்கள். இத்தகைய மனமாற்ற நடவடிக்கைகளால், சில குடும்பங்களில் முதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் மீண்டும் பாசத்துடன் இணைகிறார்கள் என்ற நற்செய்தியையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இன்றைய இளைஞர்கள் வருங்கால முதியோர்கள்தான்; இன்றைய முதியோர்கள் கடந்தகால இளைஞர்கள்தான் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது. அதை உணர்ந்துவிட்டால், முதியோர், இல்லத்தில்தான் இருக்கவேண்டும்; ‘முதியோர் இல்ல‘த்தில் இருக்கக் கூடாது எனும் உண்மை புரியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com