

உடலிலோ, மனதிலோ ஏற்படும் எதிர்பாராத மாற்றத்தின் காரணமாக ஒருவரால் சில செயல்களை நிரந்தரமாக செய்ய முடியாமல் போய் விடுவது உண்டு. அவ்வாறானவர்ளை நாம் ‘மாற்றுத் திறனாளிகள்’ (Differently abled people) என்று அழைக்கிறோம். ஹெலன் கெல்லர், பீத்தோவன், லூயி பிரெயில் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமது சுய ஊக்கத்தால் அவர் தம் வாழ்வில் பல சாதனைகளை படைத்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம், சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு சட்டம் 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது 1996 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விதிகளை ஐக்கிய நாட்டு சபை அமைத்தது. இந்தியாவில் தற்போது அது அமலில் உள்ளது. 'மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்' என்பதும்தான் இதன் நோக்கமாகும்.
நாட்டில் பார்வையற்றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும், செவித்திறனிலும், பேசுவதிலும் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பாசிரியர்களும் போதிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 1996 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
மாற்றுத்திறனாளிக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. 1968 ஆம் ஆண்டு மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டன.
1995 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான (சம வாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டமும், 1992 ஆம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் இந்திய அரசால் இயற்றப்பட்டன.
இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் ஆண்டுதோறும் இவர்களுக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவர்களுக்கான இலவசப் இரயில் பயணச் சலுகை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சலுகைகளை இவர்கள் பெற மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி மாற்றுத்திறனாளர் மறுவாழ்வுத் துறை வழங்கும் அடையாள அட்டை இவர்களுக்கு தேவை. இதனைப் பெறுவதற்கு அசல் குடும்ப அட்டை மற்றும் அதன் நகல், மார்பளவுப் புகைப்படம், உடல் இயலாமையை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழ் போன்றவை தேவையாகும்.
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்தம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 667 கோடியிலிருந்து, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளியில் சேருதல், தேர்வுகளில் கூடுதல் நேரம் பெறுதல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழித் தாளிலிருந்து விலக்கு பெறுதல், பயணச்சீட்டுகளில் கட்டணச் சலுகை பெறுதல், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுதல், அரசின் நலத்திட்டச் சலுகைகளில் முன்னுரிமை பெறுதல், இலவச நான்கு சக்கர வாகனம் பெறுதல், காதுகேள் பொறி, நிதியுதவி பெறுதல், கண்பார்வைக் குறைபாட்டிற்கான உதவி உபகரணங்கள் பெறுதல் போன்ற உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற தகுதி படைத்தவர்கள்.
இவ்வுதவிகளைப் பெற இவர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். இவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை மன உறுதியுடன் சந்தித்து வெற்றி பெற வேண்டும். சமூகத்தில் அவர்கள் கண்னியமாக நடத்தப்பட வேண்டும். இதுவே நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியாகும்.