

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவருக்காக பாடல்கள் பாடி அசத்தினார். அதிலும் அவர் பாடிய 'நாளைக்கு நீங்களும் CM தான்' என்ற வரி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இன்று தன் செல்லப் பிள்ளைக்காகப் பாடிய ஷோபா சந்திரசேகர், பல வருடங்களுக்கு முன்பே (11.05.2008) 'என் செல்ல தளபதி' என்ற தொடரின் வாயிலாக விஜய்யைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்தொடர் அன்று பத்திரிகை உலகில் மிகப் பெரிய அளவில் வைரலானது!! அத்தொடரில் இருந்து முதல் சில அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!
ஷோபா சந்திரசேகருடனான முழு நேர்காணலையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கோடம்பாக்கமே 'குருவி' பரபரப்பில் சிறகடித்துக்கொண்டிருக்க, விஜய் பற்றியும் 'குருவி' படம் குறித்தும் நம்மோடு பேசினார் ஷோபா சந்திரசேகர்...
நாளைய தீர்ப்பு... குருவி... எப்படி இருக்கிறார் விஜய்?
எப்பவுமே விஜய்க்குள்ள ஒரு நெருப்பு கனன்றுக்கிட்டே இருக்கும். லைட்டா தூண்டிவிட்டா போதும் பரபரன்னு பத்திக்குவார். அந்த ஃபயர் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு. அவரோட அம்மாவா எனக்கு அது மிகப் பெரிய சந்தோஷம்.
சின்ன வயகல விஜய் போக்கிரியா... சாதுவா...?
எந்த அம்மாவுக்குமே தன்னோட குழந்தை குறும்பு பண்ணினாலும் அதை ரசிக்கிற பக்குவம் இருக்கும். அப்படித்தான் நானும், சின்ன வயசுல விஜய் பயங்கரச் சுட்டி ஒரு இடத்துல அடங்கி இருக்க மாட்டார். அவரோட தங்கை இறந்தபிறகுதான் படு அமைதியாயிட்டார்.
விஜய் ரஜினி ரசிகர்... நீங்கள்?
கண்டிப்பா நான் விஜய் ரசிகைதான். திரையில் பார்க்கும்போது இது நம்ம விஜய்தானான்னு சில நேரம் வியந்து போயிருக்கேன். அப்படி வியக்கிற அளவுக்குத் தன்னை விஜய் வளர்த்துக்கிட்டதுதான் எங்களோட அதிர்ஷ்டம்!
விஜய்யிடம் நீங்க பார்த்து பிரமிப்பது...?
அவரோட உழைப்புதான். நேரம் பார்க்காம உழைப்பார். திருப்தி வர்றவரைக்கும் அசரமாட்டார். அவர் இந்தளவுக்கு உயர்ந்ததுக்குக் காரணமே அவரோட அயராத உழைப்புதான்.
பாடகர் விஜய் எப்படி இருக்கார்...?
(சிரிக்கிறார்) விஜய்க்கு அபாரமான இசை ஞானம். எந்த ஒரு பாட்டையும் ஒரு தடவை கேட்டார்னா, அப்படியே திருப்பிப் பாட ஆரம்பிச்சிடுவார். என்னோட சகோதரர் சுரேந்தர், நான், எல்லாருமே இசை மேல ஆர்வமா இருக்கறதால அந்த ஆர்வம் விஜய்யைத் தொத்திக்கிச்சு. அவரோட உந்துதல்தான் என்னைப் பாடல் கேசட் ரிலீஸ் பண்ணுற அளவுக்குக் கொண்டு வந்திருக்கு.
விஜய் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம்..?
எல்லாமே பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா... பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, போக்கிரி...
குருவியைப் பத்திச் சொல்லுங்க....
தமிழகத்தைப் போலவே தானும் ரொம்ப ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். தமிழகத்தில் இருக்கற ஒவ்வொரு குடும்பமும், இந்தப் படத்தை ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க. விஜய்யோட திரை வாழ்க்கைல பெரிய திருப்புமுனையா இந்தப் படம் இருக்கும்ங்கறது நிச்சயம்.
- கபிலன்
(தொடரும்)
(கல்கி இதழ்: 11.05.2008)