

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவருக்காக பாடல்கள் பாடி அசத்தினார். அதிலும் அவர் பாடிய 'நாளைக்கு நீங்களும் CM தான்' என்ற வரி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இன்று தன் செல்லப் பிள்ளைக்காகப் பாடிய ஷோபா சந்திரசேகர், பல வருடங்களுக்கு முன்பே (11.05.2008) 'என் செல்ல தளபதி' என்ற தொடரின் வாயிலாக விஜய்யைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்தொடர் அன்று பத்திரிகை உலகில் மிகப் பெரிய அளவில் வைரலானது!! அத்தொடரில் இருந்து முதல் சில அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!
ஷோபா சந்திரசேகருடனான முழு நேர்காணலையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
"அம்மன் கோயில் எல்லாமே... எந்தன்
அம்மா உந்தன் கோயிலம்மா! - உன்
அன்புக்கெல்லை சொன்னாலே... அது
எல்லையில்லா வானமம்மா!
"1995ல் விஜய் நடிச்சு வெளிவந்த 'ராஜாவின் பார்வையிலே' படத்துல இந்தப் பாட்டு வருது. இளையராஜா சார் அற்புதமாக இசையமைச்சிருப்பார். விஜய்க்கும் இந்தப் பாட்டுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு.
ரசிகர்களோட மனசைத் தன் சிறகால வருடுற 'குருவி', 'இளைய தளபதி', 'எதிர்கால சூப்பர் ஸ்டார்'. 'டாக்டர்'.. இப்படி விஜய்யை என்னென்னமோ சொல்லிக் கூப்பிடறாங்க. ஆனா, இன்னைக்கும் விஜய் எனக்குக் குழந்தைதான்.
பல வருஷங்களுக்கு முன்னால; சென்னை எழும்பூர் மசுப்பேறு மருத்துவமனைல அவசர அவசரமா பூமியைப் பாக்க வந்த அதே குழந்தை.
அந்த ஜூன் 22ஆம் தேதியை என்னால மறக்கவே முடியாது. இந்த உலகத்தையும் என்னையும் பாக்கற ஆசையில எட்டு மாசத்துலயே பிறந்துட்டான். பத்து நாளைக்கு இன்குபேட்டர்ல. கண்ணாடிப் பெட்டியில வச்சிருந்து, ட்ரீட்மென்ட் பண்ணிட்டு அதுக்கப்புறமாத்தான் குழந்தையை என் கையில் குடுத்தாங்க. விரல் நடுங்க, விஜய்யைக் கையில் ஏந்தி, மனசெல்லம் கரைஞ்சுபோய் அவனைக் கொஞ்சினது இன்னிக்கு நடந்த மாதிரித்தான் இருக்கு.
பொதுவா நம்ம நாட்டுல தாய்மார்கள் 'ராமர் மாதிரி பிள்ளை பிறக்கணும்'னு வேண்டிக்குவாங்க. எதுக்கு? ராமரைப்போலவே அவங்க பிள்ளையும் 14 வருஷம் காட்டுல போய்க் கஷ்டப்படறதுக்காகவா? இல்லை... பெத்தவங்க எது சொன்னாலும் மறுபேச்சுப் பேசாம செஞ்சவர் ராமர். அதுக்காக. நானும் அப்படித்தான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன்.
உசந்த நிலையில இருக்கற ஒரு ஞானி சொல்றார்:
'நீ உன் வாழ்க்கையில முன்னேறணும்னா, நினைச்சதை அடையணும்னா, தினமும் வீட்டைவிட்டு வெளியே போகும்போது உன் தாயின் காலைத் தொட்டு வணங்கிட்டுப் போ!'
அவருக்குத் தாயின் மகத்துவம் தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அப்படிச் சொல்லியிருக்கார்.
சிவாஜி கணேசன் சார் வீடு கட்டினப்போ 'அன்னை இல்லம்'னு பேர் வச்சார். அவர் நினைச்சிருந்தா தம் மனைவி பேரையோ, அல்லது வேற ஏதாவது பேரையோ வச்சிருக்கலாம். வைக்கலை. ஏன்? அவருக்கும் தாயின் சிறப்பு தெரிஞ்சிருக்கு. என்னோட வீட்டுக்குக்கூட 'அன்னை இல்லம்'னுதான் பேர்.
‘நீ உன் தாயை உயர்த்தினால் நான் உன்னை உயர்த்துவேன்' அப்படின்னு எல்லா மதங்களும் சொல்லுது. இன்றைய இளைஞர்கள் நமது பாரம்பரியம், பண்பாடு தெரியாம போய்க்கிட்டிருக்காங்க.
இந்தச் சூழ்நிலையில் விஜய் எப்படி? சொல்றேன். அதுக்கு முன்னால என் கணவரைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும்.
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு ஒரு கவிஞர் எழுதியிருக்காரு. என்னைக் கேட்டா, 'கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு சொல்வேன். ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் முக்கியம்தானே! என் கணவர் ரொம்பக் கோபக்காரர். அது ஃபிலிம் இண்டஸ்ட்ரியில இருக்கற எல்லாருக்கும் தெரியும். ஆனா, அவர் அவரோட அம்மாவை அப்படித் தாங்கினாரு. அவர் வளர வளர அவரோட அம்மாவை ராணி மாதிரி வச்சுக்கிட்டாரு.
என் கணவர் தமிழைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாத ஒரு சினிமா இயக்குநர். ஆனா, ஒரு கட்டத்துல தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிப் படங்கள்லயும் கொடிகட்டிப் பறந்தார். இதுக்குக் காரணம் என்ன? அவர், அவரோட அம்மாவுக்குக் கொடுத்த மரியாதை. ஒரு தாயின் சிறப்பைப் புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிட்ட பண்பாடு.
சின்ன வயசுலருந்தே இதையெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்தான் விஜய். பெத்தவங்களுக்கு மரியாதை குடுக்கணும்ங்கறது அவன் மனசுல ஆழமாப் பதிஞ்சு போயிடுச்சு. இப்பவும் நானும் என் கணவரும் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான். அதுதான் அவனை உயரத்துல தூக்கி வைச்சிருக்கு. சொல்லப்போனா, விஜய்யும் ராமர் மாதிரிதான். ராமர் மாதிரி ஒரு பிள்ளை பிறக்கணும்னு கடவுள்கிட்ட நான் வேண்டிக்கிட்டது வீண் போகல.
விஜய்யோட வளர்ச்சி அசுர வளர்ச்சி. ரொம்பக் குறுகிய காலத்துல எங்கேயோ போயிட்டார்ன்னு எல்லாரும் சொல்றாங்க... ஆச்சரியமாப் பாக்கறாங்க. இதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லை. ஏன்? அடுத்த வாரம் சொல்றேன்...
எழுத்து வடிவம்: பாலுசத்யா
(தொடரும்)
(கல்கி இதழ்: 18.05.2008)