

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவருக்காக பாடல்கள் பாடி அசத்தினார். அதிலும் அவர் பாடிய 'நாளைக்கு நீங்களும் CM தான்' என்ற வரி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இன்று தன் செல்லப் பிள்ளைக்காகப் பாடிய ஷோபா சந்திரசேகர், பல வருடங்களுக்கு முன்பே (11.05.2008) 'என் செல்ல தளபதி' என்ற தொடரின் வாயிலாக விஜய்யைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்தொடர் அன்று பத்திரிகை உலகில் மிகப் பெரிய அளவில் வைரலானது!! அத்தொடரில் இருந்து முதல் சில அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!
ஷோபா சந்திரசேகருடனான முழு நேர்காணலையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
"சில சமயங்கள்ல விஜய்யோட ரசிகர்கள் யாருக்காவது கல்யாணம் நடக்கறப்போ என்னையும் கூப்பிடுவாங்க. போவேன். மணமக்களை வாழ்த்தும்போது மறக்காம நான் சொல்ற வாசகம், 'விஜய்யை நீங்க ரோல் மாடலா எடுத்துக்கங்க!' அப்படிங்கறதுதான். ஏன்னா, விஜய் அவ்வளவு கடினமான உழைப்பாளி.
உழைப்புன்னா அப்படி ஒரு உழைப்பு. சினிமா ஃபீல்டே கஷ்டமான ஃபீல்டு. அதுல ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சாத்தான் முன்னுக்கு வரமுடியும். அவன் நைட்டும் பகலும் உழைக்கறதைப் பாத்து, எனக்கு நானே கண்ணீர் விடுவேன். சாவகாசமா எங்களோட பேசறதுக்கு மட்டும் இல்லை, ஆற அமர உக்காந்து சாப்பிடுவதற்குக்கூட அவனுக்கு நேரம் இருக்காது,
வெற்றிங்கிறது விஜய்யோட இலக்கா இருக்கு. மகாபாரதத்தில் அர்ஜுனனைப் பத்திச் சொல்வாங்க. குரு துரோணாச்சாரியார் மரத்து மேல உக்காந்திருக்கிற ஒரு பறவை மேல அம்பு எய்யச் சொல்வார். அர்ஜுனன் கண்ணுக்கு அந்த மரம், கிளை, பறவை எதுவுமே தெரியாது. பறவையோட கண் மட்டும்தான் தெரியும். அம்பு விடுவான். பறவை அடிபட்டு விழுந்துடும். அது மாதிரிதான் விஜய்யும். அவனுக்கு உழைப்பு ஒண்ணுதான் இலக்கு. அதனாலதான் விஜய்யை ரோல் மாடல்னு சொல்றேன். இந்த மாதிரி இலக்கை நிர்ணயம் செஞ்சுக்கிட்டு பயணம் செஞ்சா. எந்த மனிதனும் லட்சியத்தை அடைஞ்சிடுவான்.
யதார்த்தத்துல விஜய் ரொம்ப சாது. அமைதின்னா அப்படி ஒரு அமைதி. ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்கு வருவான். கூடப்போன காஸ்ட்யூமர், டிரைவர். மேக்கப்மேன் எல்லோரும் சொல்வாங்க. ''இன்னிக்கு ஃபைட் சீன்மா, தம்பியை என்னவோன்னு நினைச்சோம். பயங்கரமா ஃபைட் பண்றாரு; பின்னி எடுக்கறாரு! இவ்வளவு திறமை இவருக்குள்ள இருக்கான்னு நினைக்க நினைக்க ஆச்சரியமா இருக்கு". இதையெல்லாம் கவனிக்காம தலையக் குனிஞ்சி, விஜய் தோசை சாப்பிட்டுக்கிட்டு இருப்பான்.
செட்ல நடிக்கறதுக்கும் அவன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது. அதிரடியான படங்கள்ல நடிச்சுட்டு, வீட்டுல குழந்தையை முதுகுலே ஏத்தி வச்சுக்கிட்டு யானை விளையாட்டு விளையாடிக்கிட்டு இருப்பான். பாக்கற நமக்குத்தான் 'திருப்பாச்சில நாலுபேரைத் தூக்கிப் போட்டுப் பந்தாடின விஜய்யா இது?'ன்னு இருக்கும்.
ஸ்கூல்ல ஃபுட்பால், பேஸ்கட்பால் எல்லாம் நல்லா விளையாடுவான். ஆனா, ஜிம்னாஸ்டிக்ஸ் அவனுக்கு ரொம்ப நல்லா வந்துச்சு. கட்டில்ல சாதாரணமா வந்து உக்காரவே மாட்டான். ஒரு பல்டி. இல்லன்னா ஒரு ஜம்ப். நமக்கு திடுக்குன்னு இருக்கும். அப்படி ஏறி உட்காரும்போது அடியெல்லாம் பட்டிருக்கு.
அதேமாதிரி அவனுக்கு என்னைப் பயமுறுத்தறது ஒரு பொழுதுபோக்கு. வீட்டுக்குப் பின்பக்கமா வந்து, குழாயைப் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி, எகிறிக் குதிச்சு வீட்டுக்குள்ள வருவான். சத்தம் கேக்காம மெதுவா நடந்துவந்து என் பின்னால நின்னு, "பே"ன்னு கத்துவான். நான் அலறியடிச்சுத் திரும்பிப் பார்ப்பேன். முதல்ல திட்டணும்போலத் தோணும். ஆனா, அவன் முகத்தைப் பாத்தா திட்டத் தோணாது, சிரிச்சுடுவேன்.
அட்டகாசம் பண்ணுவான். ஆனா அதனால யாருக்கும் பாதிப்பு அதிகம் இருக்காது. அப்போல்லாம் நானும் என் கணவரோட நிறைய நாள் ஷூட்டிங் போயிடுவேன். சில சமயங்கள்ல வெளியூர் போக வேண்டியிருக்கும். அங்கேயே தங்கவேண்டியிருக்கும். என்னோட மாமியார்தான் விஜய்யைப் பாத்துப்பாங்க. அவனுக்கு வேணுங்கறதையெல்லாம் குடுத்து, ரொம்ப அன்பா கவனிச்சுப்பாங்க.
ஆனா, விஜய் அவங்களையே ஏமாத்திடுவான். ஒரு நாள் அவங்க தூங்கினதுக்கப்புறம் பெட்ல தலைகாணியை வச்சு, போர்வையைப் போத்தி, ஆள் படுத்திருக்கறமாதிரி செட்டப் பண்ணிட்டு, செகண்ட் ஷோ போயிருக்கான்.
ராத்திரியில எழுந்து வந்தவங்க, விஜய்யைக் கூப்பிட்டிருக்காங்க. பதில் வராமப் போனதும் தொட்டு எழுப்பிப் பாத்திருக்காங்க. படுக்கையில் விஜய் இல்லை. ரொம்ப பயந்துட்டாங்க. அதோட அவங்க விட்டுடலை. நாங்க ஊர்ல இருந்து திரும்பி வந்ததும் என்கிட்டயும் அவர்கிட்டயும் சொன்னாங்க. அப்புறம்?
எழுத்து: பாலு சத்யா
(தொடரும்)
(கல்கி இதழ்: 25.05.2008)