"என் செல்ல தளபதி"- 4: 'தங்கையோட இழப்பு விஜய்யை ரொம்ப பாதிச்சது' - ஷோபா சந்திரசேகர்!

பத்து வயசு வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி துள்ளிக்கிட்டு, கலகலப்பாத்தான் இருந்தான். திடீர்னு ஒரு நாள் அவனோட துறுதுறுப்பு மொத்தமும் சட்டுன்னு காணாமப் போயிடுச்சு.
En chella thalapathy Vijay
En chella thalapathy Vijay
Published on

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவருக்காக பாடல்கள் பாடி அசத்தினார். அதிலும் அவர் பாடிய 'நாளைக்கு நீங்களும் CM தான்' என்ற வரி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

இன்று தன் செல்லப் பிள்ளைக்காகப் பாடிய ஷோபா சந்திரசேகர், பல வருடங்களுக்கு முன்பே (11.05.2008) 'என் செல்ல தளபதி' என்ற தொடரின் வாயிலாக விஜய்யைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்தொடர் அன்று பத்திரிகை உலகில் மிகப் பெரிய அளவில் வைரலானது!! அத்தொடரில் இருந்து முதல் சில அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!

ஷோபா சந்திரசேகருடனான முழு நேர்காணலையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

"விஜய் இப்படி ஏம்மாத்திட்டு செகண்ட் ஷோ போறான்னு தெரிஞ்சதும், நானும் அவரும் ரொம்பப் பதறிட்டோம். ஆனா, அவனை எங்களால என்ன செய்யமுடியும்? தலைக்கு மேல வளர்ந்த பிள்ளை. நான் அவனை என்னிக்குமே அடிச்சது கிடையாது. என் கணவர் அப்படி இல்லை. ரொம்ப கண்டிப்பானவர். சமயத்துல அடிச்சிடுவார். அன்றைக்கு என்னவோ அவர் அவனை அடிக்கலை. ரெண்டு பேருமா சேர்ந்து அவனுக்கு அட்வைஸ் பண்ணினோம்.

காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. கத்தியைக் காட்டி வழிப்பறி பண்றது. ஆளைக் கடத்தறதுன்னு என்னென்னவோ நடக்குது. ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போயிடுச்சுன்னா என்ன பண்றது? சினிமாவுக்குப் போகவேணாம்னு சொல்லலை. ஃப்ர்ஸ்ட் ஷோவுக்குப் போ!ன்னு அட்வைஸ் பண்ணினோம். நாங்க சொன்னதை விஜய் ரொம்ப அமைதியா, பொறுமையா கேட்டுக்கிட்டான்.

'விஜய் கலகலப்பாவே பேசமாட்டார். ரொம்ப அமைதி. எப்பப் பார்த்தாலும் இறுக்கமா இருப்பார்... அப்படின்னுதான் நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீங்க. அது உண்மைதான். அதுக்குக் காரணம் இருக்கு. அந்தக் காரணத்துக்குப் பின்னால் ஒரு சோகம் இருக்கு. பத்து வயசு வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி துள்ளிக்கிட்டு, கலகலப்பாத்தான் இருந்தான். திடீர்னு ஒரு நாள் அவனோட துறுதுறுப்பு மொத்தமும் சட்டுன்னு காணாமப் போயிடுச்சு. ஏன் தெரியுமா? சொல்றேன்.

அப்போ நான் மேடைக் கச்சேரிகள்ல பாடுவேன். இளையராஜா சார் குழு, கங்கை அமரன் சார் குழு, இன்னும் சில இசைக்குழுக்கள்ல பாடிக்கிட்டு இருந்தேன். நானும் என் கணவரும் சேர்ந்து சம்பாதிச்சதுலதான் ஏதோ குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ரொம்பக் கஷ்டம். நான் சினிமாவுல பாடின முதல் பாட்டை என்னால எப்பவும் மறக்கமுடியாது. எம்.எஸ்.சார் இசையில் 'ஒரு மகராஜா ஒரு மகராணி, இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி'ன்னு ஒரு பாட்டு வருமே. அந்தப் பாட்டு. அந்தப் பாட்டை இப்ப நினைச்சாலும் அடிவயிறு கலங்குது. இந்தப் பாட்டுக்கும் என் வாழ்க்கைக்கும் ரொம்பவும் தொடர்பு இருக்கு.

விஜய் எனக்கு ஒரே பிள்ளைன்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்படி இல்லை. விஜய்க்கு அப்புறம் இன்னொரு குழந்தையை நான் என் வயித்துல சுமந்தேன். விஜய்க்கு ரொம்ப சந்தோஷம். எனக்குத் தம்பி பொறக்கப் போறான்னு துள்ளிக் குதிச்சுக்கிட்டு இருந்தான். குழந்தைக்கு பேரெல்லாம்கூட வச்சிட்டோம். ஆனா என் துரதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். ஒன்பதாவது மாசத்துலயே வயித்துலயே இறந்து போயிடுச்சு அந்தக் குழந்தை. விஜய் ரொம்ப அழுதான்.

அதுக்கப்புறம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 'வித்யா'ன்னு பேரு வச்சோம். அவ பிறந்த நேரம் எங்களுக்கு ரொம்ப நல்ல நேரமா இருந்தது. அதுவரைக்கும் உதவி இயக்குநரா இருந்த என் கணவருக்கு, டைரக்டராகற வாய்ப்புக் கிடைச்சது. ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் பண்ண ஆரம்பித்தார்.

விஜய்க்கு வித்யான்னா அவ்வளவு இஷ்டம். அவளையே சுத்திச் சுத்தி வருவான். தூக்கி வச்சுக்கிட்டுக் கொஞ்சுவான். கீழேயே இறக்கமாட்டான். வித்யாவுக்கு ஒண்ணரை வயசு ஆனப்போ அது நடந்தது. ஒரு நாள் அவ திடீர் மயக்கம் போட்டு விழுந்துட்டா. நானும் என் கணவரும் பதறியடிச்சுக்கிட்டு அவளைத் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் பண்ணினாங்க. கடைசியில டாக்டர் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னார். ‘வித்யாவுக்கு பிளட் கேன்சர். அவ இன்னும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோதான் உயிரோட இருப்பா!' அதைத் கேட்டு நான் துடிச்சுப்போயிட்டேன். கண்ணுல இருக்கற தண்ணியெல்லாம் வத்திப் போற மாதிரி அழுதேன். என்னால வேறு என்ன பண்ண முடியும்?

விஜய் எப்போ பாத்தாலும் வித்யாகூடதான் விளையாடிக்கிட்டு இருப்பான். அவளோட மூணாவது பிறந்தநாளை ரொம்ப கிராண்டா கொண்டாடினோம். மூணரை வயசெல்லாம் சாகற வயசா? அந்தப் பிஞ்சுக் குழந்தை, அந்தச் சின்ன மொட்டு, திடீர்னு ஒரு நாள் எங்களை விட்டுப் போயிட்டா. அவளோட இழப்பு எங்க குடும்பத்துல இருக்கற எல்லாரையுமே பாதிச்சது. விஜய்யை ரொம்ப பாதிச்சது. இத்தனை நாள் ரத்தமும் சதையுமா வீட்டுல வளைய வந்துக்கிட்டு இருந்த தங்கச்சி இல்லைன்னதும், அவன் ஆடிப்போயிட்டான்.

அப்போ அவனுக்குப் பத்து வயசு. எல்லார்கிட்டயும் கலகலப்பாப் பேசறது குறைஞ்சு போயிடுச்சு. தனியா இருக்க ஆரம்பிச்சான். ரூம்லயே அடைஞ்சு கிடக்க ஆரம்பிச்சான். ஏதாவது கேட்டா பதில் சொல்வான். அவ்வளவுதான். அவனோட உற்சாகம், துறுதுறுப்பு எல்லாம் சுத்தமா காணாமப் போயிடுச்சு. அந்தப் பழக்கம் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. வீட்டுக்குள்ள வருவான். என்னைப் பார்த்ததும் புருவத்தை உயர்த்திக் காமிப்பான். 'ஓ! எப்படி இருக்கேன்னு விசாரிக்கறான்'ன்னு நாமளா புரிஞ்சுக்கணும். அவ்வளவு தூரத்துக்கு அவனோட பேச்சு குறைஞ்சு போயிடுச்சு.

இவ்வளவு சின்ன வயசுல அவன் இப்படி இறுக்கமா இருக்கறது எங்களுக்குப் பிடிக்கலை. என் கணவர் என்ன செய்யலாம்னு யோசிச்சார். கடைசியில் அவனை சினிமாவுல நடிக்க வைக்கலாம்னு முடிவு செஞ்சார். அப்போ, பி.எஸ்.வீரப்பா சார் 'வெற்றி'ன்னு ஒரு படம் தயாரிச்சார். அதுல சின்ன வயசு விஜயகாந்தா நடிக்கறதுக்கு ஒரு பையன் தேவைப்பட்டான். அந்த ரோல்ல விஜய்யை நடிக்க வைக்கலாம்னு என் கணவர் சொன்னார்.

முதல் படம். அதுலயும் ரொம்ப சோகமான காட்சிதான் விஜய்க்கு. கதைப்படி, விஜய் ஒரு பெட்ரோல் பங்க்ல உக்காந்து படிச்சுக்கிட்டு இருப்பான். அவனோட அப்பாவா வர்ற கே.கே.சௌந்தர், அந்த பெட்ரோல் பங்க்ல வேலை பார்ப்பார். அப்போ வில்லன் பி.எஸ்.வீரப்பா வந்து, பெட்ரோல் டியூபைப் பிடுங்கி, பெட்ரோலை கே.கே.சௌந்தர் மேல ஊத்தி. கொளுத்தற மாதிரியான காட்சி. விஜய் அதைத் திகைச்சுப் போய்ப் பாத்துக்கிட்டு இருப்பான். அந்த சீன் ரொம்ப நல்லா வந்தது, அவன் நடிச்ச முதல் படத்தோட பேர் ‘வெற்றி'. அது வாழ்நாளெல்லாம் அவன்கூடவே வரப்போறது அப்போ எங்களுக்குத் தெரியலை.

அவனை நல்ல மூடுக்குக் கொண்டு வர்றதுக்காக என் கணவர் செஞ்ச முயற்சிக்குப் பலன் இருந்தது. அவனுக்கு நடிக்கறதுல ஆர்வம் வந்துச்சு. அதுக்கப்புறம், அந்தச் சின்ன வயசுலயே 'வசந்த ராகம்' 'குடும்பம்'னு நடிச்சுக்கிட்டு இருந்தான். எல்லாம் சின்னச் சின்ன ரோல். அப்புறம் 'சட்டம் ஒரு விளையாட்டு', 'இது எங்கள் நீதி’ படங்கள்ல நடிச்சான். இந்த ரெண்டு படங்களுக்கும் கலைஞர் வசனம் எழுதியிருந்தார். 'இது எங்கள் நீதி’ படத்துல தூக்குக் கயித்துல தொங்கற மாதிரி சீன்ல நடிச்சான். ஒரு நாள் முழுக்க அந்த சீனைப் படம் பிடிச்சாங்க. காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் தூக்குல தொங்கிக்கிட்டே இருந்தான் விஜய்!

எழுத்து வடிவம்: பாலு சத்யா

(தொடரும்)

(கல்கி இதழ்: 01.06.2008)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com