

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவருக்காக பாடல்கள் பாடி அசத்தினார். அதிலும் அவர் பாடிய 'நாளைக்கு நீங்களும் CM தான்' என்ற வரி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இன்று தன் செல்லப் பிள்ளைக்காகப் பாடிய ஷோபா சந்திரசேகர், பல வருடங்களுக்கு முன்பே (11.05.2008) 'என் செல்ல தளபதி' என்ற தொடரின் வாயிலாக விஜய்யைப் பற்றிய பல சுவாரசிய தகவல்களை கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்தொடர் அன்று பத்திரிகை உலகில் மிகப் பெரிய அளவில் வைரலானது!! அத்தொடரில் இருந்து முதல் சில அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!
ஷோபா சந்திரசேகருடனான முழு நேர்காணலையும் மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
விஜய்க்கு, அவனோட தங்கை வித்யா இறந்துபோனது ரொம்ப பாதிப்பை உண்டாக்கிடுச்சுன்னு ஏற்கெனவே சொன்னேன் இல்லியா? அது அவனோட மனசை மட்டும் இல்லாம உடம்பையும் பாதிச்சுடுச்சு. அடிக்கடி வயித்து வலி வரும்; அது தலைவலியில போய் முடியும். துடிச்சுப் போயிடுவான்.
அப்போ டைரக்டர் ஷங்கர், என் கணவரோட படங்கள்ல ஓர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். விஜயா ஹாஸ்பிடல்ல ஒரு டெஸ்டுக்கு எழுதிக் குடுத்து, ஊசி போடறதுக்காக, விஜய்யைக் கூட்டிட்டுப் போயிருந்தாங்க. ஷங்கரும் கூடப் போயிருந்தார். ரெண்டு நிமிஷம்தான். எப்படி வந்தான்னு தெரியல. வீட்டுக்கு ஓடி வந்துட்டான். அதுக்கு அப்புறம் அவனோட அப்பாதான் அவனைத் திட்டி, அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயி ஊசி போட்டுக் கூட்டிட்டு வந்தார். அவ்வளவு முரண்டு பண்ணுவான். இப்பக்கூட ஷங்கர் என்னைப் பார்த்தா, அதை நினைவு வைச்சுக்கிட்டுச் சொல்வார்.
விஜய்யை ஸ்கூல்ல சேர்க்கறப்போ அவனுக்கு என்ன பேர் வைக்கறதுங்கற பிரச்னை வந்தது. ஏன்னா, என் கணவர் கிறிஸ்டியன். நான் இந்து. ரெண்டு பேரும் மனசுக்குப் பிடிச்சுப்போயி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஸ்கூல்ல விஜய் 'கிறிஸ்டியன்'னு சர்டிஃபிகேட்ல எழுதியிருந்தோம். இப்போ என்ன பண்றது? கடைசியில அவனுக்கு 'ஜோசப் விஜய்'னு பேரு வைச்சோம். விஜய்யை ஒரு பிரபலமான கான்வென்ட்ல படிக்க வைக்கலையேன்னு எனக்கு ஒரு குறை இருக்கு. ஏன்னா நானும் என் கணவரும் கான்வென்ட்ல படிக்கலை. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலிங்கறதால, விஜய்யை எங்களால் பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்க முடியலை. கொஞ்சம் வசதி வந்தப்புறம்கூட, என் கணவர் அவன் சாதாரண ஸ்கூல்லயே படிக்கட்டும்னு விட்டுட்டார்.
சென்னை, சாலிகிராமத்துல இருக்கற 'பால லோக் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்'ல ப்ளஸ் டூ வரைக்கும் விஜய் படிச்சான். என் வீட்டுக்காரரோட உறவினர்கள்ல நிறைய பேர் இன்ஜினியருக்குப் படிச்சுருந்தாங்க. வெளிநாட்டுல வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் விஜய்யை அந்த மாதிரி இன்ஜினியரிங் இல்லைன்னா மெடிகல் படிக்க வைக்கணும்னு நினைச்சோம். ஆனா அது நடக்கலை. விஜய் சென்னை லயோலா காலேஜ்ல, விஷுவல் கம்யூனிகேஷன்ல சேர்ந்தான். இதுக்கிடையில விஜய் தன்னை நல்லா வளத்துக்க ஆரம்பிச்சான்.
கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு வசனம் பேசுவான், நடிப்பான் குழந்தை நட்சத்திரமா நடிக்கறான்ல... அதான் இவ்வளவு ஆர்வமா இருக்கான்னு நாங்களும் விட்டுவோம். விஜய் நல்லா டான்ஸ் ஆடுவான். இப்பதான் எல்லாப் படத்துலயும் கதாநாயகிகளே டான்ஸ் ஆடறாங்க. அப்போல்லாம், அனுராதா, ஜெயமாலினின்னு டான்ஸ் ஆடுறதுக்குன்னே நடிகைகள் இருப்பாங்க. வீட்ல பர்த் டே, ஏதாவது விசேஷம்னா, அவங்க ஆடின ஏதாவது ஒரு பாட்டை டேப்புல போட்டுட்டு ஆடுவான். இப்படி அவன் ஆடறதை ஏவி.எம். ஸ்டூடியோவுல ஒரு முழுப் பாட்டையே ஷூட் பண்ணியிருக்கோம்.
அவனுக்கு இசையிலயும் ஆர்வம் இருந்துச்சு. திவாகர் மாஸ்டர்கிட்ட கிதார் கத்துக்கிட்டான். முறைப்படி கர்நாடக சங்கீதம் எதுவும் கத்துக்கலையே தவிர சுருதியோட அவனுக்குப் பாடத் தெரியும். ஆனாலும் அவன் ஒரு தனி ரகம்தான். அதைச் சொல்லியே ஆகணும். நானும் அவனும் சேர்ந்து முதல்முதல்ல சினிமாவுக்காகப் பாடின பாட்டு 'தொட்டபெட்டா ரோட்டு மேல...' அந்தப் பாட்டை ரெகார்டிங் பண்ணினப்போ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடலை. எனக்கு முன்னாடி போய் அவன் ஒரு டிராக்குல பாடிட்டு வந்துட்டான். வெளியே வந்து, 'அம்மா! அப்பா கூப்பிடறாரும்மா'ன்னான். அப்புறம் நான் போய்ப் பாடிட்டு வந்தேன். அவனுக்கு ரெகார்டிங்ல பாடும்போது யாரும் கூட இருக்கக்கூடாது. மியூசிக் கண்டக்ட் பண்றவங்க மட்டும்தான் ஸ்டூடியோவுல இருக்கணும். அவனே 1,2,3,4... சொல்லிப் பாட ஆரம்பிச்சுடுவான்.
விஜய் அடிக்கடி போற சினிமா தியேட்டர் உதயம். நல்ல படமா இருந்தா திரும்பத் திரும்பப் பார்ப்பான். 'தளபதி' 'நாயகன்' மாதிரியான படங்களை ஏழு, எட்டு தடவை பார்த்திருக்கறதா அவனே சொல்லியிருக்கான். எல்லாம் ஸ்கூல், காலேஜ் 'கட்' அடிச்சுட்டுதான்!
அவனுக்குச் சின்ன வயசுலருந்தே சினிமாவுல நடிக்கணும்கற ஆசை உள்ளே கனன்றுக்கிட்டு இருந்திருக்கும்போல. எங்களுக்குத்தான் அது தெரியலை. லயோலாவுல விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தானே தவிர, ஒழுங்கா காலேஜுக்கே அவன் போகலை. ஒருநாள் அவங்க அப்பா முன்னாடி வந்து நின்னான்.
"நான் ஹீரோவா நடிக்கணும்னு ஆசைப்படறேன். நீங்களே என்னை சினிமாவுல அறிமுகப்படுத்துறீங்களா? இல்ல, வெளியில போய் நான் சான்ஸ் கேக்கட்டுமா?" அப்படின்னான். என் கணவர் ரொம்ப. அதிர்ச்சி அடைஞ்சுட்டார்.
எழுத்து வடிவம் : பாலு சத்யா
(தொடரும்)
(கல்கி இதழ்: 08.06.2008)