

மக்கள் விரும்புவதை எல்லாம் பேசக்கூடாது;
மக்களுக்கு எது தேவையோ அதைப் பேசவேண்டும்.
- தவத்திற்கு குன்றக்குடி அடிகளார்
அப்பொழுது நான் மதுரை, திருநகரில் உள்ள சவிதாபாய் (கோவை) மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான், குடும்பத்தில் ஏற்பட்ட தந்தையின் தொழில் தேக்கத்திற்குப் பிறகு, தமிழ்வழிப் பள்ளிக்கு மாறினேன். அது வறுமை எங்களைக் கடுமையாகச் சூழ்ந்திருந்த காலம். அந்த இக்கட்டான நேரத்தில் அரசுப் பள்ளிதான் எங்களுக்குக் கைகொடுத்தது. அங்குக் கிடைத்த அந்த மதிய உணவை இன்று நினைத்தாலும் என்னால் மறக்கவே முடியாது.
ஒருநாள் நான் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, என்னோடு ஆங்கிலப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் எதிரே வந்தார்கள். "What happened Seenu? Why are you not coming to our school?" என்று என்னோடு படித்த சாரதா என்கிற மாணவி கேட்டாள். அப்பொழுது அருகில் இருந்த என் அருமை நண்பன் ராஜேஷ் (அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்) குறுக்கிட்டு, "Don’t ask him anything" என்றான். அப்பொழுது அவர்களுடன் இருந்த ஒரு பையன் என் முதுகில் ஓங்கித் தட்டினான். "Okay da, bye!" என்று அவர்கள் சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
அவன் ஓங்கித் தட்டிய அந்தத் தறுவாயில் என் உயிரே நடுங்கிவிட்டது. காரணம், நான் தோளில் மாட்டியிருந்த அந்தத் தபால் பையினுள், புத்தகங்களுக்கு மேலே வைத்திருந்த அந்தச் சாப்பாட்டுத் தட்டின் மீது அவன் கைபட்டுவிட்டது. அது பெரும்சத்தமாக வெளியே கேட்டுவிட்டது. அவர்கள் என்னை ஒரு வினோதமான பார்வை பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
அந்தத் தட்டின் ஓசை எனக்குள் வெகுகாலம் கேட்டுக்கொண்டே இருந்தது.
தமிழ்ப் பள்ளிக்கு வந்த பிறகுதான் அங்கே எனக்குப் புதிய உலகங்கள் திறந்தன. மாணிக்கவாசகம், ஜேசுரத்தினம் போன்ற ஆசிரியர்களும், எங்களது வரலாற்று ஆசிரியை புஷ்ப லீலா டீச்சரும் எனக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். அதன் பிறகுதான் நாடகங்களில் நடிப்பதற்கு நான் தேர்வானேன்.
சிவானந்த தபோவனத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் நான் பேசுவதற்காக முதன்முதலில் எனக்குப் பேச்சு எழுதிக்கொடுத்தவர் ஜேசுரத்தினம் ஐயா. நாடகத்தில் இயல்பாக நடிக்கவேண்டும் என்பதையும், வசனங்களை உச்சரிக்கும் முறையையும் சொல்லிக்கொடுத்தவர் மாணிக்கம் வாத்தியார். வகுப்பறையில் வரலாற்றுப் பாடங்களை உள்ளூர் உதாரணங்களுடன் உயிரோட்டமாகச் சொல்லிக்கொடுத்தவர் என் புஷ்ப லீலா டீச்சர்.
அதேபோலக் கல்லூரியில் பேராசிரியர் ‘மூட்டா’ பார்த்தசாரதி அவர்களை என்னால் மறக்கவேமுடியாது. அவர் மேடைகளில் ஏறிப் பேசியதில்லை; ஆனால், வகுப்பறையே ஒரு மேடை என்பதுபோலச் சிறந்த பேச்சாளராகத் திகழ்வார். கணித வகுப்புகளுக்கு ஊடாக அவர் சொல்லும் தமிழ்க்கதைகள் அத்தனை சுவாரசியமாக இருக்கும்.
ஒருமுறை அவர் சொன்னார்: "உனக்கு நியூட்டனின் புவியீர்ப்பு விசை தெரிவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பஸ்ஸிலிருந்து இறங்கும்போது எந்தக் காலை வைத்து இறங்க வேண்டும் என்று தெரிய வேண்டும்" என்றார். அந்த ஒரு வரி ஒட்டுமொத்த வகுப்பையுமே சிந்திக்க வைத்தது. அப்படி அவராலும் நான் வெகுவாக உந்தப்பட்டிருக்கிறேன்.
என்னை நாடகங்கள் எழுத வைத்து, அதில் நடிக்க வைத்து, ‘டைரக்டர்’ என்று கூப்பிட்டவர் அருணாச்சலம் வாத்தியார். அது டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்; கம்பராமாயணத்தை அவர் பேசுகிறவிதத்தைப் பார்த்து நான் அசந்து போயிருக்கிறேன்.
ஒருமுறை நாடகங்களில் நான் கலந்துகொண்டிருந்த அந்தச் சூழலில், என்னைவிட இரண்டு வருடம் மூத்த மாணவி ஒருவரிடம் வெகு நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்ட அருணாச்சலம் ஐயா, என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்கள்: "என்ன சீனிவாசன், உன்னை டைரக்டர்னு சொன்னேன்... ஆனா ஹாலிவுட் டைரக்டரா வருவேன்னு நான் எதிர்பார்க்கல!" நான் பதறிப்போய், "ஐயா, அப்படியெல்லாம் இல்லைய்யா" என்றேன். இதுதான் தமிழ் ஆசிரியர்களின் இயல்பான அணுகுமுறை.
இந்தக் காலகட்டங்களில்தான் தமிழ்மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. அந்த வயதில் என் தமிழ் ஆர்வத்திற்கும், மொழி உணர்விற்கும், உலக அறிவிற்கும் உண்மையில் முக்கிய காரணங்களாக இருந்தவர்கள் தமிழ் சொற்பொழிவாளர்கள்.
அப்பொழுது அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள் எங்கள் ஊருக்குப் பேசுவதற்கு வந்திருந்தார். இரவு 10 மணிக்கு அவர் மேடை ஏறினார். மெலிந்த தேகம் உடைய ஒரு பேச்சாளர்; பார்ப்பதற்கு வெல்டிங் குச்சி போலச் சிறியதாக இருப்பார். ஆனால், அவர் பேச்சிலிருந்து வரும் தீப்பொறியோ அனலாக வீசும். அப்பொழுது அவர் ஒரு கவிதை சொன்னார்; அது நான்கு வரிகளில் பரிசு பெற்ற கவிதை என்று சொல்லி அந்த வரிகளை உதிர்த்தார்:
‘இந்திரா, நீ பொற்கோவிலுக்குள் துளைத்த குண்டுகள் உன் வயிற்றின் வழியாக வெளியேறியது.’
அதைக் கேட்டதும் என் மூளை பரபரப்பாக வேலை செய்யத் தொடங்கியது. ஒரு மிகப்பெரிய நிகழ்வை நான்கே சொற்களில் ஒருவரால் சொல்ல முடிகிறதே என்று நான் வியந்து போனேன். தமிழின் ஆகப்பெரும் சிறப்பு, அந்த மொழியின் எந்தத் துறையைச் சேர்ந்த பிரிவை நாம் திரும்பத் திரும்பக் கேட்டாலோ, எழுதினாலோ, படித்தாலோ மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டும் ஒரு ஆச்சரியமான சக்தி அதற்கு உண்டு. அதிலிருந்து மேடைப்பேச்சுகள் என்றால் எனக்கு ஒரு கிறக்கமாகவே இருக்கும்.
அன்றைய நாளிதழ்களில் அன்றைய நிகழ்ச்சிகள் என்னென்ன நடக்கும் என்று போட்டிருப்பார்கள். அப்பொழுது என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அந்தச் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் மேடைப்பேச்சுகளுக்கு நான் போய்விடுவேன்.
புலவர் தமிழ்க்கூத்தன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட ‘முற்போக்கு கவிஞர் பேரவை’, ஒருமுறை சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் அவர்களின் ஒரு பாட்டை விருந்து போலச் செவிகளுக்குத் தந்தார் அந்த அம்மையார். அவருடைய அந்த கரகரப்பான குரலை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி, சலசல சலவெனும் சாலையிலே, செல் செல் செல் எனும் காளைகளே, சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே" என்கிற பாடலைப் பாடிக் காண்பித்துவிட்டு, அதன் சரணத்தில் சில வார்த்தைகளைச் சொன்னார். நாயகன் திருடனாம்; நாயகியைச் சந்தித்த பிறகு கத்தியைக் காட்டிப் பணத்தைக் கேட்கும்போது, கத்தியின் கூர்மைபோல அவள் கண்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அப்படியே போய்விடுகிறான். அடுத்த வரியைக் கண்ணதாசன் எழுதுகிறார்: "அவன்தான் திருடன் என நினைத்தேன், அவனை நானே திருடி விட்டேன்" என்று. அந்தப் பாடலின் கவித்துவ ரசத்தை அந்த அம்மையார் விவரித்தபோது, ஒவ்வொரு பேச்சாளரிடமிருந்தும் எதையாவது பெறத் தொடங்கினேன்.
'ஊடறுத்து' என்கிற ஒரு சொல் எப்படி இலங்கையின் வரலாற்றைத் திறக்குமோ, அதுபோல இவர்கள் சொல்லிச் சென்ற ஒவ்வொரு சொற்களும் எனக்கு ஒரு வரலாற்றையே திறந்தன.
அப்பொழுது தமிழருவி மணியன் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய மொழிப்பொழிவே ஒரு குற்றால அருவி போல இருந்தது. கண்ணதாசன் அவர்களைப் பற்றிப் பேசினார். அப்பொழுது இயேசுபிரானின் 'இயேசு காவியத்தை' கண்ணதாசன் எழுதியதாகச் சொல்லிவிட்டு, அதில் இருக்கும் ஒரு பாட்டை மனப்பாடமாக ஒப்புவித்தார். அதில் எனக்கு நான்கு வரிகள் அப்படியே ஒட்டிக்கொண்டன: "ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... அது என்றென்றைக்கும் ஞானத்தின் பாட்டு". அதன் பிறகுதான் நான் இயேசு கிறிஸ்துவின் முழு வரலாற்றையே தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.
(தொடரும்... பகுதி 2)