

எஸ்.வி.என் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஐயா ராஜாராம் அவர்களை என்னால் மறக்கவேமுடியாது. மற்ற பேச்சாளர்களிடம் நகைச்சுவை துணிக்கும். ஆனால், இவர் எப்பொழுதுமே பம்ப்செட் போலச் சத்தமாகப் பொழிவார். அதுவும் ஒரே சீராக (Steady). ரஷ்யாவுக்குப் போவார், அமெரிக்காவுக்குப் போவார்; ஆபிரகாம் லிங்கன் முதல் உலகப் புரட்சிக் கதைகள் வரை ஏதேனும் ஒன்றைச் சொல்லுவார். அவர் பேசி முடித்துவிட்டால் அரங்கம் கைதட்டிவிட்டு அமைதியாக இருக்கும். அவர் என்னை மிகவும் கவர்ந்தார்.
ஒருநாள் நாமும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது. அவரை நேராக அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். அவர் வீடு அலங்கார் டாக்கீஸ் பின்னால் இருந்ததாக ஞாபகம். அப்பொழுது சோழவந்தானில் இருக்கக்கூடிய விவேகானந்தா கல்லூரியில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. "ஐயா, நீங்கள் எனக்கு ஏதேனும் சொல்லவேண்டும், எழுதித் தர வேண்டும், நான் இதில் கலந்துகொள்கிறேன்" என்று சொன்னேன். அவர் அந்த மேடையில் எப்படிப் பேச வேண்டும், என்னென்ன கருத்துக்களைப் பேச வேண்டும் என்பதை அவர் சொல்லச் சொல்ல அப்படியே ஒரு குறிப்பாக எடுத்துக்கொண்டேன். "இதை உன் பாணியில் பேசு" என்று அறிவுறுத்தினார்.
நான் எதிர்பார்க்கவே இல்லை; பஸ் பிடித்துச் சோழவந்தான் போய் அந்தப் போட்டியில் பேசி நான் மூன்றாம் பரிசு பெற்றேன். அதன்பிறகு அவரை வந்து சந்தித்து என் நன்றியைச் சொன்னேன். விடைபெறும்போது அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். அவர் முற்போக்கான கருத்துக்களைப் பேசினாலும், அவர் நெற்றியில் எப்பொழுதுமே ஒரு திருநீறு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் அதைப் பற்றி நான் அவரிடம் கேட்டதில்லை.
வார்த்தைகளின் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் மதுரைக்கு வந்திருந்தார். அவர் வரும்போதெல்லாம் நான் போய்விடுவேன். அவருக்குத் தலையாட்டி பொம்மை கடையிலிருந்து மூக்குப்பொடி வாங்கி வருவது நான்தான். ஒரு சிறிய மூக்குப்பொடி டப்பா வாங்குவதற்கு ஆட்டோவில் போய்விட்டு வரச் சொல்லி, வருவதற்குப் பணம் தருவார். மாலையில் சரஸ்வதி தியேட்டர் அருகில் அவர் பட்டிமன்றம் நடைபெறும்; அதுபோலப் பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
நெல்லை ஜெயந்தாவின் தனிச்சிறப்பு மேடையில் சொல்லப்படும் அவரது கவிதைகள்தான். மேடைக்கான அந்த கவிதைகள் அரங்கத்தை அதிர வைத்துவிடும். அதேபோல ஒருவரைப் பேச அழைப்பதற்கான நிகழ்ச்சித் தொகுப்புக் கவிதைகளில், பல ஆண்களைக் கன்னம் சிவக்க வெட்கப்பட வைத்துச் சிரிக்க வைத்திருக்கிறார். இவர் கவிஞர் வாலி அவர்களின் உயிருக்கு நெருக்கமானவர்.
வலம்புரி ஜான் அவர்கள் "என் காலத்திலேயே இந்த நாட்டில் ஜாதி அழிந்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்; அது நடக்காதுபோலத் தெரிகிறது. உங்கள் காலத்திலாவது அழிய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று அன்றைக்குத் தனது பேச்சைத் தொடங்கினார்.
அதேபோல த.கு. சுப்பிரமணியன், புனித ஏகாம்பரம் என அன்றைய பட்டிமன்றங்களை வலம் வந்தவர்கள் எல்லோருடைய ரசிகனாகவும் நான் இருந்தேன்.
இப்பொழுது தென்காசியில் வசித்து வரும் பெரியவர், பட்டிமன்றப் புகழ் பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களின் அந்த 'குத்தூசி' நகைச்சுவைப் பேச்சுக்கு நான் பெரிய ரசிகன். ஏழு கிலோமீட்டர், எட்டு கிலோமீட்டர் சைக்கிளில் சென்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அவர் பேசுவதை ரசித்துக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவர் சொன்னார்: "வைகையில் அத்தனை வெள்ளம் ஓடுது, இந்தப் பையன் என்ன செய்றான் தெரியுமா? வாட்டர் பாட்டில் தண்ணீரைக் குடித்துக்கொண்டே அதைப் பார்க்கிறான்" என்றார். நான் கீழே உருண்டு சிரித்துவிட்டுப் பின் சிந்திக்கத் தொடங்கினேன்.
மேடையில் பேச்சாளர்கள் சொல்லும் ஏதேனும் புத்தகத் தகவல்களைக் கேட்டால், அடுத்த நாளே கிளை நூலகத்திற்குச் சென்று அதைத் தேடுவேன். "அவன் சுதந்திரத்தைப் பற்றிய கனவில் இருந்தபொழுது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" என்று த.கு. சுப்பிரமணியன் அவர்கள் ஒரு மேடையில் சொன்னார்கள். அதன் பிறகுதான் நான் வைரமுத்து அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.
அதேபோல புலவர் தீரன் என்ற ஒரு பேச்சாளர் வந்தார்; கிருஷ்ண கதையை அவ்வளவு அழகாகச் சொல்லுவார். இடையிடையே கல்கண்டு பால் அருந்திக் கொள்வார். அந்தச் சொற்பொழிவாளர் தீரன் அவர்கள் பின்னாளில் ஒரு சாலை விபத்தில், பழங்காநத்தம் அழகப்பன் நகர் சாலையில் சைக்கிளில் போகும்போது இறந்து போன செய்தி எனக்கு மிகவும் துக்ககரமாக இருந்தது.
90களின் இறுதியில் சீமான் அவர்களுடன் நான் அவர் படங்களில் பணிபுரிந்தபோது, அவர் என்னை 'சிந்தனைச் செல்வன்' என்றுதான் அழைப்பார். நான் எப்போதும் ஒரு அறையில் உட்கார்ந்து ஏதேனும் படித்துக்கொண்டே இருப்பேன். என் உள்ளுணர்வு தொடர்ந்து ஒன்றை நினைத்துக்கொண்டிருந்தது.
எல்லாவற்றிற்கும் எதிர்வினையாகக் கருத்துக்களைப் பேசிக்கொண்டே இருக்கும் அண்ணன் சீமான் அரசியலுக்கு வந்தால் ஒரு முக்கியமான இடத்திற்கு வருவார் என்று, அவர் அப்பொழுது வசித்த வெங்கடேஸ்வரா நகர் வீட்டின் வாசலில் இருக்கும் வேப்ப மரத்திற்கு கீழே அமர்ந்திருந்தபோதே எனக்குத் தோன்றியது. இதை எதிரே இருந்த ஐயா துரை அவர்களிடம் சொன்னேன். பிறகு அவருக்கு ஆரம்ப நாட்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைய மேடைகளைத் தந்தது. அப்பொழுது அவர் உடன் செல்லும்போதெல்லாம் எனக்குள் ஒரு அச்சம் இருக்கும்; எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம், அதுபோலத்தான் அவர் பேசுவார். ஆனால் அவர் சன் தொலைக்காட்சியில் இலங்கையைப் பற்றிப் பேசிய பிறகு அவர் வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது. அந்த 20 நிமிடப் பேச்சு அவரை இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மாற்றிவிட்டது.
மதுரை திருநகர் பகுதியில் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி என்பவர் இருந்தார். அவரே பார்ப்பதற்கு ஒரு இயேசு கிறிஸ்து போல நீண்ட தாடியுடன் சாந்தமான கண்களுடன் இருப்பார். அவருடைய புதல்வர் பதஞ்சலி என்னுடைய நண்பன். அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் ஒரு சொற்பொழிவாளர் தொடர் சொற்பொழிவு நடக்கப்போகிறது, அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டார். "செய்கிறேன் ஐயா" என்று சொன்னேன். தினமும் அவருக்குச் சாப்பாடு கொண்டுபோய் தருவது என் வேலை. திருநகரில் இருந்து பஸ் பிடித்து அவருக்குச் சாப்பாடு தருவேன். அந்தச் சொற்பொழிவாளர் அன்றைக்கு வந்திருந்த பாகற்காய் கூட்டையும் நினைவுபடுத்தி, திருவருட்பா சொற்பொழிவின் இடையில், பாகற்காய் கூட்டோடு அதைக்கொண்டு வந்த என் பெயரையும் மேடையில் சொல்வார். அவர்தான் ஊரன் அடிகள்.
தொடர்ந்து 16 நாட்கள் திருவருட்பாவை நான் பருகினேன். அதன்பிறகு அதன் உரைகள் எல்லாம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். தமிழ் மொழி வளர்ச்சித் துறைத் தலைவராக இருக்கும் அவ்வையருளின் தாத்தா ஔவை சு. துரைசாமிப் பிள்ளை விளக்கவுரை தந்த நூல்களை எல்லாம் நான் படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட திருவருட்பாவின் அத்தனை தொகுதிக்கும் தன் வாழ்வையே ஒப்புவித்து உரை எழுதியவர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள். அந்த நூல்களைச் சில நூலகங்களுக்கும் நான் வாங்கி அனுப்பி இருக்கிறேன். எனக்குப் பிடித்த நூறு திருவருட்பாக்களை எடுத்து, அதை என் மொழியில் ஒரு விளக்கவுரையாக எழுதி வெளியிட வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
எங்கள் ஊரில் இருந்த ஒரு அச்சமுத்தம்மன் கோயிலில் தினமும் காலையில் கிருஷ்ணசாமி அவர்கள் தந்த அருட்பெருஞ்ஜோதி அகவலின் 1594 அடிகள் கொண்ட பாடலை வாரத்திற்கு ஒரு நாள் உட்கார்ந்து முழுமையாகப் படிப்பேன். "நாயினும் கடையேன் பேயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி" என்பார் வள்ளலார்.
(தொடரும்... பகுதி 3)
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here