"எனக்குப் பிடித்த பேச்சுத்தமிழ்" (பகுதி 3) - இயக்குநர் சீனு ராமசாமி

Director Seenu Ramasamy
Pattimandram Raja-Director Seenu Ramasamy-S. Ramakrishnan-Karu Palaniappan-Bharathi krishnakumar-G. GnanasambandanAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

நவீன யுகத்தில் நான் பட்டிமன்றம் ராஜா அவர்களின் உரைகளைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.

Pattimandram Raja-Director Seenu Ramasamy
Pattimandram Raja-Director Seenu RamasamyAI Image

நல்ல விஷயங்களை அவர் மக்களிடம் கடத்துகிறார் என்று எனக்குத் தோன்றியது. அவரை 'இடம் பொருள் ஏவல்' என்ற என் திரைப்படத்தில் நடிக்க வைத்தேன். அவர் பிரபலமான பேச்சாளர்; அவருக்கு ஒரு கேரவன் தந்திருந்தோம். மதிய நேரத்தில் "டைரக்டர் எங்கே?" என்று கேட்டுவிட்டு, கீழே இறங்கி வந்து என் அருகில் அமர்ந்து கொண்டார். நானும் அவரும் பல கருத்துக்களைப் பேசினோம்.

ஒருமுறை டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நான் ஒரு அணியிலும், இயக்குனர் மதுமிதா ஒரு அணியிலும் பேசினோம். என்னுடைய உரையைக் கேட்டுவிட்டு ராஜா அவர்கள் "இவர் பேச்சுத் துறைக்கு வந்தால் எங்களை எல்லாம் காலி செய்துவிடுவார்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இதைச் சொல்வதற்கு ஒரு பெருந்தன்மையான மனம் வேண்டும். ஒரு திறமையைக் கண்டதும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நினைப்பவர்களிடம் தெய்வம் குடிகொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறவன். இது ஒரு பின்தங்கிய கிராமத்திலிருந்து வந்த என்னை என் ஆசான் பாலு மகேந்திரா அவர்கள் நம்பித் தன்னோடு சேர்த்துக்கொண்ட நிகழ்வுக்குச் சமமானது.

Bharathi Baskar-Director Seenu Ramasamy
Bharathi Baskar-Director Seenu RamasamyAI Image

ஒருநாள் நான் வீட்டில் இருந்தபடியே ஒரு பட்டிமன்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாரதி பாஸ்கர் அவர்கள் கடைசியில் பேச வந்தார். எதிராளிகள் சொன்ன கருத்தை அவர் மறுக்கவே இல்லை; ஒப்புக்கொண்டே போனார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தன் பேச்சின் இறுதியில் ஒரே ஒரு சொல்லில் ஒட்டுமொத்தப் போக்கையுமே மாற்றிவிட்டார். "ஆமாம், இல்லைன்னு சொல்லல... அதெல்லாம் விதிவிலக்கு. விதிவிலக்குகள் ஒண்ணு ரெண்டு இருக்கத்தான் செய்யும்" என்று அந்த ஒரு சொல்லைச் சொல்லிப் பட்டிமன்றத்தின் திசையைத் திருப்பினார். நான் உடனே சினிமா பிஆர்ஓ நிகில் முருகனை அழைத்து ராஜா அவர்களின் எண்ணைக் கேட்டு, அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்த ராஜா அவர்களிடம், "ஐயா, அதை ரொம்ப ரசித்துப் பார்த்தேன், பாரதி பாஸ்கர் சிறப்பாகப் பேசினார்" என்று என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

பாரதி பாஸ்கரின் அந்தப் பேச்சு முறை என்பது ஏறக்குறைய ஒரு நவீன கொரில்லா யுத்தத்துக்கு இணையானது. ஒரு எதிரியைக் கூடுமானவரை காட்டின் மையத்துக்கு வரவைத்துவிட்டு பின்பு தாக்குவது. திரைக்கதையின் வடிவில் சொல்லவேண்டும் என்றால் 'U-turning the script'.

Kavitha Jawahar - Director Seenu Ramasamy
Kavitha Jawahar - Director Seenu RamasamyAI Image

வாழ்வியல் சிந்தனையிலிருந்து நேரடியான கேள்விகளைத் தயக்கமின்றி முன்வைப்பவராக நான் பார்ப்பது கவிதா ஜவஹர் என்கிற பேச்சாளரை. இவர் பட்டிமன்றங்களின் இயல்பு மொழியை மிகவும் ரசித்தேன்.

வழக்கறிஞர் சுமதி இப்போதல்ல, முன்பிருந்தே ஒரு ‘டேரிங் ஸ்பீக்கர்’ (Daring Speaker). அவர் தொழிலே வக்கீல் தொழில் என்பதால், லாஜிக் இல்லாத விஷயத்தை அவர் பேசி நான் இதுவரை பார்த்ததே இல்லை.

Thiruppur Krishnan-Director Seenu Ramasamy
Thiruppur Krishnan-Director Seenu RamasamyAI Image
K. Vaidyanathan - Director Seenu Ramasamy
K. Vaidyanathan - Director Seenu RamasamyAI Image

எப்பொழுதுமே பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்கள் மேடைப்பேச்சுகளில் பெரிய கவனம் ஈர்க்கமாட்டார்கள். ஆனால் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும், தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் உரையையும் நான் கேட்டபிறகு அந்த எண்ணம் சுக்கு நூறானது. ஒரு சொல்லிலிருந்து மறு சொல் வைத்தியநாதன் அவர்களுக்கு வேறு ஒரு பரிமாணத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஒருவேளை அவர் மதுரைக்காரர் என்பதால் அவருடைய மேடை உரை சிக்கனத்தோடு, அதே சமயத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் ஒரு விஷயத்தில் நிற்கமாட்டார், அடுத்த விஷயத்திற்குப் போய்விடுவார். திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் பேச்சு என்பது முழுக்கத் தமிழ். எப்படி கண்ணதாசனுக்கு ஒரு லயம் இருக்கிறதோ, அதுபோல இவருக்கும் ஒரு லயம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நல்ல அடர்த்தியான குரல் அவருக்கு.Kirubananda variyar - Director Seenu Ramasamy

Kirubananda variyar - Director Seenu Ramasamy
Kirubananda variyar - Director Seenu RamasamyAI Image

மக்களிடம் மக்கள் மொழியில் பேசுகிற இந்தச் சொற்பொழிவாளர்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர்கள். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவில் சிறு வயதில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு சிறு குறிப்பும் இல்லாமல் பேசக்கூடியவர் அவர். அதற்கான விடையை அவர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். தான் எப்படி குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதை அவர் விளக்கிய ஒரு ஆடியோவை ஒருமுறை காரில் செல்லும்போது கேட்டேன். "டேங்க் நிரம்பியிருந்தால் டேப்பை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்" என்று, பேச்சாளர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உண்மையை மிக எளிமையாகச் சொன்னார்.

G. Gnanasambandan -  Director Seenu Ramasamy
G. Gnanasambandan - Director Seenu RamasamyAI Image

மதுரையில் நகைச்சுவை மன்றத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஐயா கு. ஞானசம்பந்தன் அவர்கள், தான் பேராசிரியராகப் பணிபுரிந்த தியாகராசர் கல்லூரித் தமிழ் மன்றத்தில் பல பேச்சாளர்களை அழைத்துச் சிறப்பு செய்திருக்கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த நிகழ்ச்சி நடக்கும்; அதற்கு நான் என் கல்லூரியிலிருந்து போய் கலந்துகொள்வேன். அங்கே ஏறக்குறைய தமிழின் மிக முக்கியமான பேச்சாளர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, புதியவர்களை உற்பத்தி செய்த பெருமை அவருக்குத்தான் உண்டு. பேச்சாளர்களை உருவாக்கும் புதிய பட்டறையாக அவர் இருந்தார். எப்படி கண்ணதாசன் அவர்கள் திரைப்பாடலின் வழி நமது பண்பாட்டு இலக்கியங்களைச் சொன்னாரோ, அதுபோல நகைச்சுவையாக நமது இலக்கிய மரபை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை ஐயா ஞானசம்பந்தன் அவர்களுடையது.

இப்பொழுது காணொளி மூலம் உலகம் எங்கும் அவர் செய்தியைப் பார்ப்பதற்கு அவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமானது, விருந்தோம்பலில் அவர் மன்னன். அப்படி ஒரு பெயரை அவர் வாங்குவதற்கு காரணம் அவருடைய துணைவியார் அவர்கள். ஐயா எப்படி இனிப்பான பேச்சைக் கண்டுபிடித்தாரோ, அதேபோல இளநீர் பாயாசம் என்பதைத் தமிழ்நாட்டில் கண்டுபிடித்தது அவர்கள்தான்.

இந்த உலகில் ஒரு சொற்பொழிவாளரின் பேச்சைக் கேட்டு நான் இரவு முழுக்க அழுது இருக்கிறேன். அதன் பிறகு பலகாலம் அவர் பின்னால் ஒரு தோழனாகச் சென்றிருக்கிறேன்.

Bharathi krishnakumar - Director Seenu Ramasamy
Bharathi krishnakumar - Director Seenu RamasamyAI Image

என் கலை ரசனையைத் தூண்டிய இலக்கிய ஆசானாகவும் அவரை நான் பார்த்திருக்கிறேன். அவர்தான் பாரதி கிருஷ்ணகுமார்.

என் உடன் இருந்த நண்பர்களே சிறந்த பேச்சாளர்கள்; ஆனால் பேச்சுப் போட்டியில் தோற்றுப் போவோம் என்று தெரிந்தும் விடாது ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொண்டவன் நான்.

இன்று பேராசிரியராக இருக்கும் ஐ. செல்வம் அவர்கள் கல்லூரி காலங்களில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அதேபோல மா. விஜயகுமார், கா. கண்ணதாசன், குறிப்பாக ராமசுப்பு என்று அறியப்பட்ட இன்றைய இயக்குனர் ராம்...

ராம் மேடையில் பேசுவது ரொம்பப் புதுமையாக இருக்கும். அந்த நாட்களில் அவர் பரிசுக்காகப் பேச வருவதில்லை, "என் கருத்தை இங்கே பேசிவிட்டுப் போக வந்திருக்கிறேன்" என்று சொல்லக்கூடிய புரட்சிகர சிந்தனை கொண்ட இளைஞராக ராம் இருந்தார்.

அப்பொழுது ஒரு பக்கம் வகிடெடுத்துச் சீவி, வசீகரமாகச் சிரிக்கும் ஒரு மாணவன் அமெரிக்கன் கல்லூரியில் இருந்தார். அவர் பெயர் சாத்தூர் லட்சுமிகாந்தன். லட்சுமிகாந்தனின் எழுத்தும் பேச்சும் அத்தனை அழகாக இருக்கும்; பேச்சையே கவிதையாகப் பேசக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது.

Karu Palaniappan-Director Seenu Ramasamy
Karu Palaniappan-Director Seenu RamasamyAI Image

மதுரையில் நான் ஒரு சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டேன். அது அண்ணா நகரில் இப்போது ஸ்டார் ரெசிடென்சி ஹோட்டலாக இருக்கும் ராஜேஸ்வரி ஹாலில் நடந்தது. எனது கொள்ளுப்பாட்டியின் மரணத்தை ஒட்டி நான் எழுதிய ஒரு கதையை அங்கு முதல் பரிசுக்குத் தேர்வு செய்தார்கள். அப்பொழுது எனக்கு சீனியர் தோற்றத்தில் இருந்த, வேட்டி கட்டிய ஒரு இளைஞர் குறுந்தாடியுடன் என் பெயரை மேடையில் அறிவித்து என்னை அழைத்தார். அவர்தான் அண்ணன் கரு. பழனியப்பன். அவரைப் பின்னாளில் நான் சென்னையில் சந்தித்தபோது இதை நினைவுபடுத்தினேன்.

Theeppori Arumugam -Director Seenu Ramasamy
Theeppori Arumugam -Director Seenu RamasamyAI Image

மேடைப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் அவர்களின் கூட்டங்களில் ரகசியமாக நான் கலந்துகொண்டிருக்கிறேன். முக்காடு போட்டு நான் அமர்ந்திருந்தபோது, எனக்கு எதிரே என் உடற்கல்வி வாத்தியார் சிரித்துக்கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சிக்கிக்கொள்வோமோ என்று ஒளிந்துகொண்டு தீப்பொறி ஆறுமுகம் அவர்களின் மேடைப் பேச்சைக் கவனித்திருக்கிறேன்.

S. Ramakrishnan - Director Seenu Ramasamy
S. Ramakrishnan - Director Seenu RamasamyAI Image

நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சை மிகவும் ரசித்திருக்கிறேன். அவர் பேச்சில் இருக்கும் இனம் புரியாத ஒரு கவித்துவ மொழி எனக்குப் பிடிக்கும். அவர் எழுதுவதைப் போலவே அத்தனை நேர்த்தியாகப் பேசுவார். அவை யாவும் இந்தச் சமூகத்தின் ஆவணங்கள். லியோ டால்ஸ்டாய் பற்றி அவர் பேசிய அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியாது.

சில இலக்கியப் பேச்சாளர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகளின் பேச்சுகளைக் கேட்பது ஒரு தவம் போன்றது.

(தொடரும்... பகுதி 4)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com