

மதுரை வடக்கு மாசி வீதி சந்திப்பில் வைகோ அவர்களின் பேச்சு அந்நாளில் எங்களிடையே ஒரு படிமமாகத் (Metaphor) தெரிந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து அவர் விலக்கப்படப் போகிற நாட்களுக்கு முன் அந்த மேடையில் அவர் பேசினார். நேரடியாக யாரையுமே அவர் சாடவில்லை; ஆனால் பல கதைகளை மட்டும் சொன்னார். அரசியல் மேடைப் பேச்சுகளில் நான் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசுவதை நேரடியாகவே கேட்டிருக்கிறேன், ஜெயலலிதா அவர்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். கலைஞர் அவர்கள் பேசுவதைப் பல மேடைகளில் நான் கேட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்களின் எளிமையையும், கலைஞர் அவர்களின் இலக்கிய நயத்தையும் நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.
பட்டிமன்ற ராஜா அவர்கள் மேடையில் பேசும்போது, ஒரு சிரிப்பூட்டும் சிறு அணில் வந்து கைகளை ஆட்டுவது போலவே எனக்குத் தோன்றும். அணில்தான் எனக்குத் தெரிந்து எந்தத் தீங்கும் செய்யாத ஒரு ஜீவன்.
அதேபோலத் திடமாகப் பேசக்கூடிய பர்வீன் சுல்தானாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கடினமாக உழைத்துத் தன் பிள்ளைகளைக் காப்பாற்றிய என் சித்தியைப் போன்ற ஒரு சாயலைப் பர்வீன் சுல்தானாவிடம் கண்டேன். அவருடைய அந்தத் திடகாத்திரமான குரல் சொல்லும் நம்பிக்கையூட்டும் கதைகளை என் மகளுக்கு நான் காட்டியிருக்கிறேன்.
நான் கேட்ட பேச்சுக்களில் என்னை மிகவும் கவர்ந்தது கவியரசர் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்'. அதில் சில கருத்துக்களோடு நான் முரண்பட்டாலும், அவர் பேசும் அந்தத் தொனியை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.
நவீன விஞ்ஞானம் வளர்ந்தபோது நேரடி அனுபவத்தை நான் இழக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அது கைபேசிக்கே வந்துவிட்டது. அதையும் இரண்டு நிமிடத்திற்குச் சுருக்கிவிட்டார்கள்.
பரபரப்பான ஒரு துண்டை மட்டும் அரைகுறையாகப் போட்டுவிடுகிறார்கள்;
பாவம் அந்தப் பேச்சாளர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள்.
ஆரம்பத்தில் கதாகாலட்சேபமாக இருந்த முறை பின்னாளில் மாற்றமடைந்தது.
'சந்திரோதயம்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கதாகாலட்சேபம் நடத்துவார்கள். கிருபானந்த வாரியார் போன்றவர்கள் அத்தகைய முறையில் இடையே பாடல்களை ராகத்தோடு பாடுவார்கள். அதன்பிறகு சரஸ்வதி ராமநாதன் போன்ற பேச்சாளர்கள் சினிமா பாடல்களில் இருக்கிற கவித்துவத்தை விளக்கிப் பாடத் தொடங்கினார்கள். அதன் நீட்சியாகத்தான் திண்டுக்கல் லியோனி அவர்கள் வந்தார்கள்.
மதுரைக்கும் சென்னைக்கும் நடக்கும் பயணங்களில் நள்ளிரவு 2 மணிக்குக் கூட எங்கே பார்த்தாலும் பட்டுக்கோட்டையா அல்லது கல்யாணசுந்தரமா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது.
சுகி சிவம் அவர்களின் பேச்சைக் கேட்கும்போது எனக்கு என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் ஞாபகம் வரும்.
பாமரருக்கும், அதே சமயத்தில் மெத்த படித்தவர்களுக்கும் ஒரே கருத்தை ஒரே நேரத்தில் இரண்டு வகையாகப் பிரித்துச் சொல்லுவார்; அதுதான் அவருடைய விசேஷம்.
மேடைப் பேச்சுக்களை, குறிப்பாகப் பட்டிமன்றங்களை ஒரு முற்போக்குச் சக்தியாகவும் வழக்காடு மன்றங்களாகவும் மாற்றிய பெருமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பேச்சாளர்களுக்கு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுக்கூர் ராமலிங்கம், தோழர் நன்மாறன், தனிச் சொற்பொழிவில் தத்துவார்த்த பிடியிலிருந்து விலகாத ஆதவன் தீட்சண்யா, இவர்களில் ஆடிக்கொண்டே பேசிய பாவலர் ஓம் முத்துமாரி ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார்கள்.
பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் நகைச்சுவையை ‘ஹைக்கூ’ வடிவத்தில் சொல்லுவார். ஒரு நகைச்சுவையில் பின்னாடி சொல்ல வேண்டியதை முன்னாடி சொல்லிவிடுவார். அதன் பிறகு அவர் சிரிக்க வைக்கும் அந்த யுக்தி எனக்கு ரொம்பப் புதிதாக இருந்தது. "இருட்டா இருந்துச்சு... திருப்பி லைட்ட போட்டேன்... கண்ணு தெரியல... அப்புறம் என்ன தெரிஞ்சுச்சு? லைட் ஆஃப் பண்ணது இவன்தான்னு தெரிஞ்சுச்சு" - இது மாதிரி அவர் விளக்குவார்.
அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை. அவர் சொற்களில் கொடி பறக்கிறது என்றால் கொடி பறக்கும். தங்குதடையின்றி ஒரு விஷயத்தை எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டே போவார்.
அனல் பொங்கும் அதிரடி பேச்சு என்றால் மேடையில் இருப்பவர்களையே திட்டுவார்; அவர்தான் நெல்லை கண்ணன் அவர்கள். நண்பர் ஆவிச்சி கிருஷ்ணன், திரைத்துறையில் எழுத்தாளராக இருக்கும் அண்ணன் பிரபாகர், சினிமா துறையிலிருந்து பட்டிமன்றப் பேச்சாளராக மாறிய மதுரை பாலன் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும்.
பிறகு என்னை அப்படியே கட்டிப்போட்டு வைத்து உறைய வைத்தது என்றால் அது ஜெயகாந்தன். அது பேச்சல்ல; சிங்கத்தின் கர்ஜனை.
இன்றைய இளைஞர்களில் தம்மல் கோ. சரவணன், நாகமுத்து மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் என் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறார்கள்.
அதேபோலக் கவிஞர் பாடலாசிரியர் யுகபாரதியின் தகவல்கள் மிகவும் புதியதாக இருக்கின்றன. நவீன கவிதைகளையும் மரபு சார்ந்த கவிதைகளையும் பல தகவல்களையும் மக்கள் மன்றத்திற்குத் தருவதில் அவர் தனித்துத் தெரிகிறார்.
ஈரோடு மகேஷின் தெள்ளத்தெளிவான நீரோடை போன்ற அந்தப் பேச்சு - தமிழை மூச்சாக நினைத்தால்தான் அப்படி வரும். ஒரு சொல்கூட ஓசை நயம் குறையவே குறையாது; அதுதான் மகேஷிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது.
அமெரிக்காவில் பாடலாசிரியர் சினேகனின் பேச்சைக் கேட்டு நான் அசந்துவிட்டேன். ஒவ்வொரு சொல்லுக்கும் கைதட்டல் வாங்கிக்கொண்டே இருந்தார். அடிப்படையில் கவிஞன் என்பதால் சுருக்கமாகவும் நயமாகவும் பேசினார்.
இந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் இதுவரை நான் கவனித்த பேச்சாளர்களைப் பற்றிய குறிப்புதான் இது. இன்னும் சிலர் முகம் தெரிகிறது, பெயர் மறந்துவிட்டது. கடந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இது ஒரு தொடக்கமாகக்கூட இருக்கலாம். ஆனால் இவரின் ஞாபக சக்தியைப் பார்த்து நான் ஒரு கணம் மிரண்டு போய்விட்டேன். நான் அவரிடம் தொலைபேசியில் பேசும்போது சொன்னேன்: "அண்ணே, வல்லாரை கேப்சூலுக்கு உங்களைவிட்டால் தமிழ்நாட்டில் அநேகமாக மாடலாக வருவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்; அந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்கிறதே" என்று சொன்னேன். அவர் சிரித்தார், "அடப்பாவி" என்பார்.
அவர், அண்ணன் நடிகர் சிவகுமார் அவர்கள். கிட்டத்தட்ட நான் சென்னைக்கு வந்த நாள் முதல் அவரோடு தொடர்பில் இருக்கிறேன். அவர் உரைகள் பலவற்றை நான் கேட்டிருந்தபோதிலும், சிவாஜி அவர்களைப் பற்றி அவர் பேசிய அந்த மூன்று மணி நேரப் பேச்சைக் கேட்டுவிட்டு, நான் தனியே சென்று அமர்ந்துவிட்டேன். சிவாஜி அவர்களை நினைத்து இரண்டு நாட்கள் என் உள்ளம் கலங்கியது. அப்படி ஒரு அரிய பெரிய தகவல்களுடன் கூடிய பேச்சு அது.
என் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வந்து நூல்களை வெளியிட்டு, அதில் மிகச் சிறப்பான ஒரு உரையைத் தந்த என் மீது பேரன்பு கொண்டவர் திருச்சி நந்தலாலா அவர்கள். என்னை 'சீனு' என்றுதான் அழைப்பார். "திருச்சி பக்கம் வந்தால் என்னைத் தொடர்புகொள்ளாமல் நீ வரக்கூடாது; அப்படி வந்துவிட்டால் கோபப்படுவேன்" என்பார். பல மேடைகளில், பட்டிமன்றங்களில் வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு ‘கிளாஸ்’ பேச்சாளர் அவர். அவர் பெயரில் ஒரு சாலை திறக்கப்பட்டதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இவையெல்லாம் என் வாழ்க்கையில் வாய்த்தது எதனால் என்றால், நான் அந்த ஆங்கிலப் பள்ளியை விட்டுத் தமிழ்ப் பள்ளிக்கு வந்து சேர்ந்த பிறகுதான். காலம் எதை எப்போது செய்கிறது, ஏன் செய்கிறது என்று யாருக்குத் தெரியும்? அன்று என் வறுமையை மறக்கடிக்க மொழி கைகொடுத்தது. அந்த மேடைப்பேச்சாளர்களின் சொற்கள்தான் ஒரு கலைஞனாக என் மனதைச் செதுக்கின. வறுமை சூழ்ந்த ஒரு சிறுவனின் கையில் இருந்த காலித்தட்டுச் சத்தம், மொழியின் பேரொலியால் மறைந்து போனதுதான் என் வாழ்வின் ஆகப்பெரும் அதிசயம்.
(நிறைவு)
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here