பள்ளிக்கூட கிரவுண்டின் மண் புழுதிக்கூட இவர் பெயரைத்தான் சொல்லுமாம்!

ஆசிரியர் தினம் – செப்டம்பர் 05
பள்ளிக்கூட கிரவுண்டின் மண் புழுதிக்கூட இவர் பெயரைத்தான் சொல்லுமாம்!
Published on

ந்த ஆண்டு (2௦23) மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார், உடற்கல்வி ஆசிரியர் முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். இதனால் உடற்கல்வித் துறைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். உலக அளவில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூரில் இருந்து ஒருவர், தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.

முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்
முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்

“1998ல் அலங்காநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதே பள்ளியில் பலப்பல நிலைகளில் இருந்து முன்னேறி மேலே வந்து, தேசிய மாணவர் படை (என்.சி.சி.) ஆபீசராகப் பணியாற்றுவது மட்டுமல்ல, அதனை ஒரு சேவையாகவேக் கருதி இயங்கி வருகிறேன்” என்கிறார் காட்வின் ஐயா.

மாநில நல்லாசிரியர் விருது 2014ல் பெற்றிருக்கிறார். ஒன்பது ஆண்டுகள் கடந்து தற்போது, 2௦23ல் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பள்ளியில் படிப்பை முடித்து விட்டுச் சென்ற மாணவர்கள் மத்தியிலும், தற்போது பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியிலும், காட்வின் சார்க்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் மிகுதியாகவே  நிறைந்துள்ளது. “பள்ளிகளில் மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் என்றால், கொஞ்சம் பயமும் மிகுந்த மரியாதையும் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தவும் முடியும். அவர்களை நல்வழிப் படுத்தவும் முடியும். விளையாட்டுகளில் ஆர்வமும் அதிகத் திறனும் கொண்டவர்களை மேலும் மேலும் செதுக்கி சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும் முடியும்” என்கிறார்.

“எங்க ஸ்கூல் கிரவுண்டு தரைகூட, அந்த மண் புழுதிக்கூட எங்க மாஸ்டர் சார் பேரைத் தாங்க சொல்லிட்டே இருக்கும்” என்கிறார் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர்.

முனைவர் காட்வின், இதே பள்ளியில் 2௦11லிருந்து என்.சி.சி. ஆபீசராகவும் பணியாற்றி வருகிறார். பல விளையாட்டுகளில் மாணவர்கள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி வாகை சூடி வரக் காரணமாக இருந்தும் வருகிறார்.

டேக்வோண்டா கராத்தே விளையாட்டில் ஐம்பது மாணவர்களைக் கொண்டு கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். ஐம்பது மாணவர்களைக் கொண்டு டெக்வோண்டா ஸ்டெப்ஸ் 89,500தான் உலக அளவில் போடப்பட்டிருந்தது. 2018ல் அலங்காநல்லூர் பள்ளியின் ஐம்பது மாணவர்கள் காட்வின் அவர்களின் தீவிரமான பயிற்சிகள் வாயிலாக டேக்வோண்டா கராத்தே ஸ்டெப்ஸ் 1,06,411 ஒரு மணி நேரத்தில் போட்டுக் காட்டி கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளனர். கைச் சிலம்பு போட்டியில் ஒரே நேரத்தில் முந்நூறு மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனையும் காட்வின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் தான் சாதனை நிறைவேற்றப்பட்டது.

தேசிய அளவில் பள்ளியின் கூடைப் பந்து குழுவானது, அந்தப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று வரும், முக்கியமான விளையாட்டு வீரர்களுக்கு முனைவர் காட்வின் தருகின்ற “ட்ரீட்டே” தனி. அது அலாதியானது. ஆம். அது தனித்துவமானது.

“முக்கியமான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று வந்த ஒரு மாணவனையும், அடுத்து வேறொரு ஆண்டில் ஒரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று வந்த மூன்று மாணவர்களையும், முறையே வெவ்வேறு காலங்களில் அவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்று வந்தேன். மதுரையில் இருந்து சென்னைக்கு அவர்களுக்கான விமானக் கட்டணம் நானே செலுத்தி அவர்களை ஒரு உல்லாசப் பயணமாக அழைத்துச் சென்றிருந்தேன். அந்த இரண்டு விமானப் பயணமும் வெவ்வேறு ஆண்டுகளில் நடைபெற்றன. ஒரு போட்டியில ஜெயிச்சுட்டோம். அதுக்குப் பரிசா ஒரு விமானத்துல ஏறிப் போய்ட்டு வர்றோம்னா, அந்தப் பையன்களுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும். அந்த சந்தோசத்தை அவர்களுக்குத் தருவதே எனது நோக்கமாகும்.”

“ஒரு முறை ஒரு வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டு பீரியட். மைதானத்தில் என் முன்னே நின்றிருந்த அந்த வகுப்பு மாணவர்களிடம் சாதாரணமாகத் தான் கேட்டேன். உங்களில் எத்தனை மாணவர்கள் அவரவர் வீடுகளில் உங்கள் வீட்டுக் கழிவறைகளை சுத்தம் செய்கிறீர்கள்? என்று. ஒரு பத்து மாணவர்கள் ஆமாம் என்று கை தூக்கினார்கள். மீதி மாணவர்கள் கை உயர்த்தவே இல்லை. அடுத்து உங்களில் எத்தனை பேர் வீடுகளில் கழிவறைகள் உள்ளன? என்றேன். அதற்கு ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லா மாணவர்களும் கை உயர்த்திக் காண்பித்தார்கள். கை உயர்த்தாத அந்த ஒரு மாணவனைப் பார்த்து, என் மனதுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. அந்தக் குறிப்பிட்ட மாணவனை என் அருகே அழைத்து கனிவுடன்  விசாரித்தேன். அதன் பின்னர் ஒரே மாதத்தில் பல தடவை நானே நேரில் சென்று வந்து என் சொந்தச் செலவில் அந்த மாணவனின் வீட்டுக்கு ஒரு கழிவறையினைக் கட்டித் தந்துள்ளேன்.” என்கிறார் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் என்.சி.சி. அலுவலர் முனைவர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.

வாழ்த்துகள் முனைவர் சார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com