GV Prakash
GV Prakash

GVP நேர்காணல்: ஜி.வி.பிரகாஷ் – தாடிக்குப் பின் இருக்கும் ரகசியம்!

Published on

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்களில் முக்கியமானவராக இருக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கள்வனில் திருடன், ரெபல் படத்தில் புரட்சியாளர், டியர் படத்தில் மனைவியின் குறட்டையால் பாதிக்கப்படும் கணவன் என மாறுபட்ட கதைகளின் நாயகனாக முத்திரை பதித்து வருகிறார். இசை, நடிப்பு என பிசியாக இருந்து வருபவர் கல்கி ஆன் லைன்காக அளித்த பிரத்யேக பேட்டி..,

Q

2014 டார்லிங் முதல் 2024 டியர் வரை எப்படி இருக்கிறது இந்த 10 வருட நடிப்பு பயணம்?

A

பல படங்கள்... பல கதை மாந்தர்கள்… பாலா, ராஜீவ் மேனன் ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம் என நான் எதிர்பார்க்காத பாசிட்டிவான தருணங்களுடன் கடந்து வந்திருக்கிறேன். அடுத்து அனுராக் காஷ்யப்புடன் ஒரு படம்... என சரியான திசை நோக்கி என் பயணம் சென்றுகொண்டிருக்கிறது.

DeAr Movie
DeAr Movie
Q

‘டியர்’ படத்தில் வரும் குறட்டை பிரச்னைபோல நிஜ வாழ்க்கையில் 'சவுண்டு பார்ட்டிகளை’ பார்த்ததுண்டா?

A

குறட்டை பிரச்னையால் வெளிநாடுகளில் விவாகரத்து வரை சென்ற தம்பதிகளைப் பற்றி படித்திருக்கிறேன். என் வீட்டில் என் அப்பா அதிக அளவு குறட்டை விடுவார். இன்னும் பலர் குறட்டை விடுவதைப் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். என் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், என் கற்பனை, டைரக்டர் சொன்ன விஷயங்களுடன் சேர்த்து உருவானதுதான் ‘டியர்’.

Q

நடிப்பு, இசை இரண்டில் மிகவும் விரும்புவது எதை?

A

இரண்டையும்தான். இசையமைப்பாளராக இருந்தபோது சில ஆல்பங்கள் செய்துகொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் ஏ.ஆர் முருகதாஸ் சார் என் ஆல்பங்களைப் பார்த்து நடிக்கலாமே என்றார் . அப்படி எதேச்சையாக நடந்த விஷயம்தான் நடிப்பு. இந்த பத்து வருஷத்தில மக்களுக்கு நெருக்கமான படங்களைத்தான் தந்துகொண்டிருக்கிறேன். செல்லும் இடங்களிளெல்லாம் மக்கள் அவங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மனசு விட்டு பேசுறாங்க. ஐ ஆம் வெரி ஹாப்பி ப்ரோ .

Q

உங்க தாடிக்குப் பின் இருக்கும் ரகசியம் என்ன?

A

எந்த ரகசியமும் இல்லை. எனக்கு தாடி நல்லா இருக்கும்னு தோணுது. அதனால தாடியோட இருக்கேன். சில படங்களில் தாடி இல்லாமலும் நடிச்சுருக்கேன்.

GV Prakash
GV Prakash
Q

இப்போது தமிழ் படங்களை விட மலையாள படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறேதே...?

A

இது ஒரு தற்காலிக நிலைமைதான். சில வருடங்களுக்கு முன்பு கே. ஜி எப், காந்தாரா என கன்னடப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்தது. இப்போது மலையாளப் படங்கள். இந்தத் தற்காலிக சூழ்நிலை நிச்சயம் சீக்கிரம் மாறும்.

Q

இசை, நடிப்பு... அடுத்தது இயக்கம்தானே?

A

இல்லை அடுத்து தயாரிப்புதான். கிங்ஸ்டன் என்ற படத்தை ஜீ ஸ்டூடியோ உடன் இணைந்து தயாரிக்கிறேன். கடலுக்குள் இருக்கும் புதையலைத் தேடி செல்லும் கதை இது.

இதையும் படியுங்கள்:
நேர்காணல்: 'J.பேபி' திரைப்படம் குறித்து மாறன் வருத்தம்!
GV Prakash
Q

உங்களுடன் நடித்த ஹீரோயின்களில் சரியான ஜோடி என்று யாரைச் சொல்வீர்கள்?

A

பேச்சுலர் படத்தில் நடித்த திவ்ய பாரதி. இதை நான் சொல்லவில்லை. நிறைய ஊடகங்கள், ரசிகர்கள் படம் பார்த்துவிட்டுச் சொன்னார்கள். இதனால்தான் என் தயாரிப்பான கிங்ஸ்டன் படத்திலும் திவ்ய பாரதி நடிக்கிறார்.

GV Prakash
GV Prakash
Q

எப்ப டைரக்ட் பண்ணப் போறீங்க?

A

டைரக்ட் பண்றது பெரிய விஷயம் சார். சில பல ஆண்டுகள் ஆகும்.

Q

இந்தத் தேர்தல் நேரத்தில் நம் வாக்காளப் பெருமக்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

A

இவருக்கு ஓட்டு போடுங்க, அவருக்குப் போடாதீங்கன்னு நான் சொல்லல. ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு என்பது இந்தியா அடுத்த இருபது வருடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும், இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றும் சக்தி படைத்ததாகவும் இருக்கும் என்பதை வாக்காளர்கள் உணர்ந்து, புரிந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com