“நான் திருடி இல்லை என்ற நிம்மதியோடு போய் வாரேன் ராசா"

“நான் திருடி இல்லை என்ற நிம்மதியோடு போய் வாரேன் ராசா"
Published on

- லக்ஷ்மண் செட்டியார் முகநூல் பக்கத்திலிருந்து... 

ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் பழுதுபார்த்தல் அவரது பணி...

ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... அவருக்குப் பரிச்சயமான கஸ்டமர் அவரது தோழிக்கு, அவரைப் பரிந்துரை செய்ததன் மூலம் அவரது இல்லத்தில் ஃபிரிட்ஜ் பழுது நீக்க சென்று மிஷினை மேடையில் இருந்து திருப்பி பார்த்தார். பின்புறம் சுத்தம் செய்து பல வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

பின்புறம் உள்ள வாட்டர் டிரேயைக் கழற்ற முற்பட அதில் ஏதோ மோதிரம் போல தென்படவே அதை டெஸ்டரை வைத்து எடுத்துப் பார்த்தார். அது பெண்கள் அணியும் தங்கமோதிரம் என்பது தெரியவே அந்தக் கஸ்டமரை அழைத்து அவரிடம் கொடுத்தார்.

கையில் வாங்கிய அந்தப் பெண்மணி முகத்தில் பதற்றம் தொற்றியது. உடல் முழுவதும் வேர்வை சொட்டக் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஒட, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாகக் காணாமல் போன ஒரு பொருள் கிடைத்தால் சந்தோஷப்படுவோமே தவிர, இப்படி யாருமே ரியாக்ட் ஆக வாய்பில்லை.

ஆகவே, அவர் வாய்விட்டுக் கேட்க "இது ஆறு மாதங்களுக்கு முன்பு  தொலைந்து போனது. அப்போது நானும் பணிப்பெண்ணும் மட்டுமே வீட்டில் இருந்தோம். ஆகவே, அவர் மீது சந்தேகப்பட்டு வேலையை விட்டு நிறுத்தி விட்டோம். அதுபோக, அந்தப் பணிப்பெண் பலவருடங்கள் வேலை பார்த்து வந்தார். ஆகையால் சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை" என்று சொல்லி முடிக்கும் முன்பே அந்த பெண்மணியின் கணவர் அப்பணிப் பெண்ணுக்கு அலைபேசியில் அழைக்க அந்தப் பெண் வந்து சேர்ந்தார்.

சட்டென்று அந்தப் பெண்மணி பணிப்பெண்ணின் காலில் விழுந்து "என்னை மன்னித்து விடு கௌரியம்மா... நான் அவசரப்பட்டு வெளியே அனுப்பி விட்டேன்" என்று சொல்ல நடப்பதே புரியாமல் விழிகள் விரிய கௌரியம்மா குழப்பத்தோடு பார்க்க... நடந்ததை கௌரியம்மாவிடம் விளக்கினார் அந்தப் பெண்மணியின் கணவர்.

அடுத்த நிமிட‌‌ம் இரு கைகளையும் கூப்பி மெக்கானிக்கை நோக்கி "என்மீதான திருட்டுப் பழியை நீ துடைத்து விட்டாய் ராசா... இந்த வீட்டோடு எனக்கு முப்பது ஆண்டுகள் தொடர்பு உண்டு. இந்தப் பெண்ணைப் பெற்றது அவரது தாயாக இருக்கலாம். ஆனால், வளர்த்து எடுத்து ஆளாக்கியது நான்தான். இவர்கள் என்மீது பழி சுமத்திய நாளில் இருந்து இன்று வரை எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. இன்று அந்தப் பழி உன்னால் துடைக்கப்பட்டது. “நான் திருடி இல்லை” என்ற நிம்மதியோடு போய் வாரேன் ராசா" என்று கிளம்ப.

“கணவனும் மனைவியும் ஒருசேர கௌரியம்மா” என்று அழைக்க கீழே சென்று தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிட்டு ஏதும் பேசாமல் சென்று விட்டார்.

கௌரியம்மா... ஒரு குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கு உழைத்த உன்னதமான பணிப்பெண்ணைத் திருட்டுப் பழியில் இருந்து காப்பாற்றி தான் ஒரு குற்றமற்றவர் என நிரூபிக்க அந்த மெக்கானிக்கின் ஒரு சிறிய செயல் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நினைக்கையில் சந்தோஷமடைவதா அல்லது பெருமிதம் கொள்வதா என்று தெரியவில்லை….

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com