பாயும் ஒளி!

நாடக விமர்சனம்!
பாயும் ஒளி!

து அன்பா, பாசமா, நட்பா,  எதிரெதிர் துருவங்களிடையே ஏற்படும் இயற்கையான ஈர்ப்பா?

இந்தக் கேள்விக்கு பதில் தெரிய, “ ThRee Theatre “  குழுவினர் மேடையேற்றியுள்ள “பாயும் ஒளி”  நாடகத்தைப் பார்க்க வேண்டும்.

லாவண்யா வேணுகோபால்
லாவண்யா வேணுகோபால்

திருமதி. லாவண்யா வேணுகோபால், திரு. எம்.வி. பாஸ்கர் இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் “ ThRee Theatre “  முதல் முதலாக மேடையேற்றியிருக்கும் நாடகம் இது.

சில மாதங்களுக்கு முன் தான் மேடையேறினாலும்,  பல முறை சென்னையிலும் பெங்களூருவிலும் பல காட்சிகளில் பெரும் வரவேற்பு பெற்ற நாடகம்.

வித்தியாசமான கதை அமைப்பு. எழுதி இயக்கியிருப்பவர் பிரபல நாடகாசிரியர் ஸ்ரீவத்சன்.

தனியாக இல்லை என்றாலும் தனிமை உணர்வில் இருப்பவள் நர்மதா.

இனிமையாகவும் நட்பாகவும் பழகும் குணமும், எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் கொண்ட  சத்ருக்ராம், மனைவியை இழந்தவர்.

அவரது மகள் சந்தியாவை தன் மகன் ஆதித்யாவுக்கு பெண்பார்க்க வரும் நர்மதா, சத்ருக்ராமின் வெகுளித் தனமானபேச்சால் கவரப் படுகிறாள்.

இவர்களிடையே ஒரு இதமான நட்பு மலர்வதை ரொம்ப நேர்த்தியாக, எந்த  விகல்பமும் தோன்றாத வகையில் மிகச் சிறப்பாக வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீவத்சன்.

சில கூரான வசனங்கள், கைதட்டல்களை அள்ளுகின்றன.

அவரது வசனங்களை இயல்பாகப் பேசி, கதாபாத்திரங் களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் நர்மதாவாக நடிக்கும் லாவண்யா மற்றும் சத்ருக்ராமாக நடிக்கும் பாஸ்கர் இருவரும்.

மொபைல் ஃபோனில் பல விஷயங்களை தொடர்ந்து பல முறை பேசுவதில் இருவருக்குமே  ஆர்வம் ஏற்படுகிறது..

இதை இரண்டு பக்கமும் வீட்டார் கவனிக்கிறார்கள்.

சத்ருக்ராமின் அதிரடி  நண்பர் கண்ணன், மகள் சந்தியா, நர்மதாவின் மகன் ஆதித்யா, அம்மா ஜெயந்தி இவர்கள் நால்வரும் இந்த விஷயத்தை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

இளையோரின் திருமணம் என்ன ஆகிறது..?

ஒரே செட்டில் இரண்டு வீடுகளும், கதாபாத்திரங்கள்  மாறிமாறி அந்தந்த வீடுகளில் பேசுவதும். சுவாரசியமான உத்தி.

இடைவேளை இல்லாவிட்டாலும்,  சுமார் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியாமல் நம்மை நாடகத்தில் ஒன்றை வைத்து, ஆர்வத்தைத் தூண்டும் திறமையான, கதையமைப்பு, வசனங்கள், நடிப்பு.

முகபாவங்களை அருமையாக வெளிப்படுத்தும் பாஸ்கர், லாவண்யா தவிர, நர்மதாவின் அம்மா ஜெயந்தி, மகன் ஆதித்யாவாக நடிக்கும் பரமேஷ், சந்தியாவாக நடிக்கும் சுகன்யா, நண்பர் கண்ணனாக வரும்  சுப்பு என எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com