நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் வேண்டி கோரிக்கை மனு. அனுமதி வழங்குமா நிர்வாகம்?

நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் வேண்டி கோரிக்கை மனு. அனுமதி வழங்குமா நிர்வாகம்?

ந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நம் தமிழ் பாரம்பர்யத்தில் நாட்டுப்புற கலைகளுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு. அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் கிராமங்கள் தோறும் நடைபெறும் திருவிழாக்களில் கரகாட்டக் கலைஞர்களுக்காக தனி ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள். ஆண்களும் பெண்களுமாக வண்ண வண்ண உடைகள் தரித்து தலையில் கிளி கொஞ்சும் கரகம் சுமந்து வந்து அடிக்கும் மேளத்துக்கு தப்பாமல் சுழன்று சுழன்று ஆடும் கரகாட்டத்தை அனைவரும் ரசிக்கவே செய்திருப்போம். நாட்டுப்புற கலைகளில் கரகாட்டத்துடன் மானாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் கட்டைகால் ஆட்டம் குறவன்குறத்தி ஆட்டம் எனப் பலவகைகள் உண்டு.

ஆனால் சமீபகாலமாக  விழிப்புணர்வுடன் அவரவர் சமூகத்துக்காக போராடும் படித்தவர்கள் வந்து விட்டனர். இந்நிலையில் நரிக்குறவர் சமூகத்தினர் தங்கள் குலப்பெருமையை குறைக்கும் விதத்தில் ஆபாசம் கலந்து ஆடப்படும் குறவன் குறத்தி ஆட்டத்தை தடை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அந்த ஆட்டத்தை தடை செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆட்டத்துடன் தொடர்புடைய சக நாட்டுப்புற கலைஞர்களின் வாய்ப்புகள் குறைந்ததால் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி பல மாவட்டங்களில் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கலைகளுக்கு பெரும்  ஆதரவு தரும் சேலத்திலும்  கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு கரகம் சுமந்தபடி வந்த நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தினர் சேலம் ஆட்சியர்  அலுவலகத்திற்கு தலையில் கரகம் சுமந்தபடி வந்து மனு ஒன்றைத் தந்தனர்.

அதில் “சேலம் வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் குடும்பத்தினருடன்  வசித்து வருகிறோம். நையாண்டி மேளம், கரகாட்டம். மாடு, மயில், காவடி ஆட்டம் போன்றவற்றுடன் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். இதனால் எங்கள் குழந்தை களின் படிப்பு செலவிற்கும். மருத்துவ செலவு. வீட்டு வாடகை உட்பட எவ்வித செலவு செய்ய முடியாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். மதுரை உயர்நீதிமன்றம் கிளை கோயில் விழாக்களில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. பிற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவில்லை ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிப்பதில்லை.        

இந்த கலைகளை நம்பி வாழும் எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே கிராமியக்  கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று  தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சேலத்தில் உள்ள கிராமியக் கலைஞர் தனபால் “ இசைப்பள்ளியின் முன்னாள் மாணவன் நான். ஒயிலாட்டமும் கோல்கால் ஆட்டமும் ஆடி வருகிறேன். எந்த விழாக்கள் பள்ளி நிகழ்ச்சிகள் என்றாலும் என்னை அழைத்தால் சென்று ஆடி வருகிறேன். ஆகவே எங்களைப் போன்றோருக்கு பாதிப்புகள் குறைவுதான். நான் எந்த சங்கத்திலும் இணையவில்லை என்றாலும்  குழுக்கள் அழைத்தாலும் செல்வேன். ஆனால் தற்போது குறவன் குறத்தி ஆட்டத்துக்கான தடை இருப்பதால் கிராமியக் கலைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து வருவது உண்மைதான். மக்கள் கிராமியக்கலைகள் என்றாலே குறவன் குறத்தி ஆட்டம் என்று முத்திரை குத்தி உள்ளார்கள். ஆனால் அதை விடுத்து பல கலைகள் இதில் உள்ளது. அவற்றை நிகழ்ச்சிகளில் ஆட அனுமதிக்க வேண்டும். எங்கோ ஒரு சிலரின் ஆபாச நடனங்களைக் காட்டி இதையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பாதிக்கப்படுவது சரியல்ல” என்கிறார்.

கலைஞர் தனபால்
கலைஞர் தனபால்

ஆட்சியரிடம் மனு தந்த  சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான பழனிச்சாமி “கடந்த நாற்பது வருசமாக நாதஸ்வரம் வாசித்து வருகிறேன். இந்த சங்கத்தின் செயலாளராக உள்ளேன். இதன் தலைவர் கென்னடி. கரகாட்டக் குழுவும் வைத்துள்ளேன். இந்தத் தடை வந்ததுமே எங்கள் குழுவும் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்று குறவர் குறத்தி ஆட்டத்தை ஆடுவதில்லை. ஒரு சமூகத்தினரின் மனது புண்படும் அவர்கள் பெயர் கொண்ட அந்த ஆட்டத்தை ஆடுவது முறையல்ல. ஆனால் இந்த ஆட்டத்தின் பேரைச்சொல்லி ஆபாச நடனம் ஆடிய ஒரு சில குழுவினரால் தற்போது ஒட்டுமொத்த கலைஞர்களுமே வாய்ப்புகளுக்கான அனுமதி இன்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப் பட்டுள்ளோம். எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதால் வேறு வழியின்றித் தவிக்கிறோம். வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே திருவிழாக்கள் காலம் என்பதால் அப்போது வரும் வருமானத்தை வைத்துதான் நாங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தடை வந்தது ஒரு ஆட்டத்துக்குத்தான் என்றாலும், அதனுடன் தொடர்பு கொண்ட மற்றக் கலைகளும் பாதிக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம்? ஆகவேதான் ஆட்சியரை சந்தித்து எங்கள் ஆட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்குமாறு கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்” என்றார்.

குழுவினருடன் பழனிச்சாமி
குழுவினருடன் பழனிச்சாமி

பரம்பரை பரம்பரையாக நாட்டுப்புற கலைகளை கற்று அதை ஆடி வாழக்கையை நடத்தும் ஆயிரக் கணக்கான கலைஞர்கள் நலம் பெற மாவட்ட நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து ஆதரவு தரவேண்டும் என்பதே கலைஞர்கள் மற்றும் கலை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com