ஓய்வு பெற்ற கணவருக்கு...

ஓய்வு பெற்ற கணவருக்கு...
Published on

“காலையில் எழுந்து பஸ்ஸைப் பிடிச்சு ஆபீஸ் போயி, நாளெல்லாம் மாடு மாதிரி உழைச்சு, சாயங்காலம் நெரிசலில் பிதுங்கி,வீட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ளே பிராணனே போறது. எப்படா, இந்த ஆபீஸை விடுவோம் அப்படின்னிருக்கு” – என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் ஓய்வு பெறும்போது மகிழ்ச்சியடைவார்கள்!

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வேலையில் இருந்து ஓய்வு பெறுவது என்பது ஒரு திருப்புமுனை. பெண்களுக்கு, அதுவும் வீட்டிலே இருக்கும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயதென்பதே இல்லையாதலால் அவர்கள் எப்போதும் உழைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் ஓய்வு பெற்ற தன் கணவரைக் கவனித்துக்கொள்வது என்பது பெரிய விஷயம்.

முப்பது முப்பத்தைந்து வருடங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருந்துவிட்டு ஒருநாள் “இன்றுடன் நீ வேலை பார்த்தது போதும், ஓய்வு எடுத்துக்கொள்” – என்றால் பலரால் இதைத் தாங்க முடிவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஓய்வு பெற்ற வாழ்க்கையை ஒப்புக் கொள்ள முடியாமல் மனநோயாளியாகி தினமும் காலையில் ஆபீஸ் வாசலில் போய் ஒருதடவை நின்றுவிட்டு வருவார்.

ஓய்வு பெற்றவர்கள் மனோரீதியாக பாதிக்கப் படுகிறார்கள். ஓய்வு பெற்றவரின் மகன்கள் பெரியவர்களாக இருப்பார்கள். ஓடி ஓடி உழைக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். இவருக்கு நிறைய நேரம் இருக்கும். தான் மட்டும் சும்மா உட்கார்ந்திருக்க, மற்றவர்கள் ஓடுவதால் எரிச்சல் வரும். இவர்கள் தன்னை மதிப்பதில்லை என ஆத்திரம் வரும். பெரும்பாலும் இது மனைவியின் மேல் கோபமாக உருமாறுகிறது.

இந்தத் தாழ்வு மனப்பான்மையை மறைக்க தானும் உயர்ந்தவன்தான் எனக் காட்டிக்கொள்ள தன் அந்தக் கால அனுபவங்களையும் ஆபீஸில் தான் வேலை செய்ததைப் பற்றியும் எல்லோரிடமும் சொல்ல ஆரம்பிப்பார்.

அதைக் கேட்க யாருக்கும் நேரம் இருக்காது.

சாதாரணமாக மனைவி ஏதாவது செய்யச் சொன்னால்கூட “நான் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவன். அதனால் என்னை வேலை வாங்குகிறாயா?” என்று சீறுவார்கள். இந்த மாதிரி சமயங்களில் மனநோயாளியாளிவிடும் கணவனைச் சரிப்படுத்த முயல வேண்டியது மனைவியின் கடமைதான். ஐம்பது வயதில் இவர்களும் ஓய்வு இல்லாமல் வேலைக்குப் போகும் மகன், மருமகள், பள்ளிக்குப் போகும் பேரக் குழந்தைகள் என அலைவார்கள். கணவனும் நச்சரிக்க ஆரம்பிக்கும்போது கஷ்டம்தான். எனினும் மெதுவாகச் சிக்கலைப் பிரிக்க முயலும்போது குடும்பமும் அவளுடன் ஒத்துழைக்க வேண்டும்.

எப்படியும் தாம் ஓய்வு பெறப் போகிறோம் எனத் தெரியும். அதற்கு மனத்தைத் தயார் படுத்திக்கொள்ளலாம். மனைவியை அழைத்துக்கொண்டு நிம்மதியாக காசி, ராமேஸ்வரம் போகலாம். நிறையப் புத்தகங்கள் படிக்கலாம், பாட்டு கேட்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

பழைய நண்பர்களைச் சந்தித்துக் கடந்த கால நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம். வீட்டில் இத்தனை நாள் செய்யாத சின்ன வேலைகளைச் செய்யலாம். அப்படிச் செய்வது தம்முடைய கெளரவத்திற்கு இழுக்கு என நினைப்பது தவறு. இத்தனை நாள் குடும்பத்திற்காக உழைத்த மனைவியுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளலாம். தோட்டம் போடுதல், பேரக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லி கொடுத்தல் என குடும்பத்தாருடன் நட்புறவுடன் செல்ல வேண்டும். ‘இன்னும் தானே வீட்டுத் தலைவன்’ எனக் கீரிடத்தை வைத்துக் கொண்டிருக்கும் போதுதான் பிரச்னைகள் வரும். புதிய தலைமுறையோடு ஒத்துப் போவதால் மீதமுள்ள வாழ்வை நிம்மதியாக் கழிக்கலாம்.

ஓய்வு பெற்றவர்களுக்குக் கூடுமானவரை வீட்டில் இதமான சூழ்நிலையைத் தர வேண்டியது மற்றவர்களின் கடமையும் கூட. இதில் மனைவியின் பங்கு ரொம்ப முக்கியமானது. அவர் உபயோகமில்லாது போய்விடவில்லை. ஆபீஸ் தொல்லைகளிலிருந்து விடுபட்டுச் சற்றே நிம்மதியான சூழ்நிலையில் ஓய்வெடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறார் என்பதை அவர் உணரச் செய்ய வேண்டும். பெண்கள், பிள்ளைகள் எல்லாரும் தொடர்ந்து மரியாதையுடனும், மனம் நோகாதபடி பேசும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும். தம் பழைய காலத்தை அசை போடும்போது, தெரிந்த கதைதான் என்றாலும், உட்கார்ந்து பொறுமையாகக் கேட்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் இருக்க கூடிய உடைந்த மனத்தை இவை சரிப்படுத்தும்.

பெரும்பாலும் எல்லா வீட்டிலும் இருக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வயதானவர்களின் தொண தொணப்பு என அலட்சியப்படுத்தி விடுகிறோம். இத்தனை நாள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவருக்குத் திடீரெனத் தள்ளாமை வந்துவிடாது. அவருடன் நட்புறவாகப் பேசிச் சிறிய காரியங்களில் ஈடுபடுத்தலாம். மாலை அலுவலகத்திலிருந்து வரும் மகன்,

“அப்பா, நீங்கள் ரொம்ப நாளா தேடிண்டிருந்த சின்மயானந்தா புக் கிடைச்சுதப்பா” எனக் கொடுத்தால் அவர் அகமகிழ்வார்.

மனைவி, மதிய வேளையில் விசேஷ டிபன் செய்து கொடுத்து அவரைச் சந்தோஷப்படுத்தலாம்.

வேலையிலிருந்துதான் அவர் ஓய்வு பெற்றார். குடும்பத்திற்கு அவர் இப்போதுதான் மிகவும் தேவை; ஒரு பெரியவராக இருந்து வழி நடத்த வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்ளுமாறு நடந்துகொள்ளுங்கள். குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com