Friends In Concert T.M.கிருஷ்ணாவின் கைகூடும் சிம்ம சொப்பனம்!

Friends In Concert ...
Friends In Concert ...

2020-ஆம் ஆண்டு, ‘கொரோனா’ ஊரடங்கு காலகட்டத்தின்போது நண்பர்கள் 13 பேர் இணைந்து பல புதுமைகளுடன் ஆன்லைனில் வழங்கிய நிகழ்ச்சி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதேபோன்றதொரு நிகழ்ச்சியை நேரடியாக, ரசிகர்கள் முன்னிலையில் செய்யலாமே என்று தனக்குத் தோன்றிய எண்ணத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டார் இசைக்கலைஞர்
T M கிருஷ்ணா. அந்த எண்ணம் விருட்சமாக வளர்ந்தது. அந்த விருட்சத்திலிருந்து மலரும் மலர்களின் நறுமணத்தை ரசிகர்களோடு சேர்ந்து நுகரவும் கனிகளின் சுவையை ருசிக்கவும் இசையால் இணைந்த அந்த 13 கலைஞர்களும் காத்திருக்கிறார்கள்.

Friends In Concert ...
Friends In Concert ...

இந்நிகழ்ச்சித் தயாரிப்பு அவர்களுக்குப் பெற்றுத்தந்த அனுபவத்தை ‘கல்கி ஆன்லைன்’ ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடர்புகொண்டபோது உற்சாகமாகப் பதிலளித்தார்கள்.

 

T. M. கிருஷ்ணா:

T. M. கிருஷ்ணா
T. M. கிருஷ்ணா

ந்நிகழ்ச்சியில் 7 லய வித்வான்கள், 4 வயலின் கலைஞர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்களாக நான், சங்கீதா என 13 பேர் கலந்துகொள்கிறோம். இந்நிகழ்ச்சி உருவாக்கத்தின் பின்னணியில் எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள், பல விவாதங்கள், ஆரோக்கியமான வாக்குவாதங்கள் எல்லாம் வந்தன. ஆனால், வென்றது இசை மட்டுமே. இதில் எல்லோருடைய பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. சில பரிசோதனை முயற்சிகளுக்கும் இடமுண்டு. நீங்கள் எதிர்பார்க்காத விதமாக, கலைஞர்கள் பல்வேறு வகையில் இணைந்து வழங்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இசைக் கச்சேரிதான் என்றாலும் ஒரு ‘தியேட்டர்’ தயாரிப்பு போன்று பிரம்மாண்டமாக  உருவெடுத்திருக்கிறது. கண்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என்றால் ஒலி, ஒளி, கலைஞர்கள் மேடையில் அமரும் இடம், விதம், அணியும் உடை என்று மிக நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம். 

அத்தனையும் சிறப்பாக அமைய ஒத்திகை தேவை. ஜனவரி 19 நிகழ்ச்சிக்கான தேதி என்பது  நவம்பர் மாதம் முடிவானது. 13 பேரை ஒன்றிணைப்பது, அதுவும் மிகவும் பிஸியான கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரே மேடையில் அவர்களைக் கொண்டுவருவது என்பது எனக்கு சிம்மச்சொப்பனமாக இருந்தது. நிகழ்ச்சி தினத்தை விடுங்கள். டிசம்பர் மாதம் இசை விழாவின் போது அனைவரையும் ஒன்று திரட்டி ஒத்திகை செய்வது பிரம்மப் ப்ரயத்தனமாக இருந்தது. ஆனாலும் நண்பர்கள் அனைவரும் மனது வைத்ததால் சாத்தியமானது.

என்னுடைய 35 வருட சங்கீத வாழ்க்கையில் இதில் பங்கேற்கும் ஒவ்வொருவருடனும் எனக்கு நீண்ட காலத் தொடர்பு உண்டு.  இதுவரை எந்த மேடையிலும் ஒன்றாக அமர்ந்து கச்சேரி செய்யாத கலைஞர்கள் இந்த மேடையில் ஒன்று கூடுகிறார்கள். அதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம். பி சிவராமன், பிரவீன் ஸ்பர்ஷ், அக்கரை சுப்புலட்சுமி, ஆர் கே ஸ்ரீராம் குமார் இப்படி இவர்களுக்குள் ஒரு புதிய உறவு மலர இந்நிகழ்ச்சி காரணமாகிறது.

நான் பாடகனாக நடுவில் அமர்ந்து அக்கரை சுப்புலட்சுமி ஒருபுறம் பூங்குளம் சுப்பிரமணியம் மறுபுறம் என வயலின், மிருதங்கம் இசைத்திருக்கிறார்கள். ஆனால், அது ஒரு முக்கோண உறவு. இந்நிகழ்ச்சி மூலம் இவர்கள் இருவரும் நேரடியாக உரையாட, இந்த உரையாடல் மூலம் அவர்களுக்குள் ஏற்படும் புதிய உறவு, அதன் மூலம் பெறும் அனுபவம் எல்லாம் அழகானது.

அரங்கில் ஒலி அமைப்பை எம் டி ஆதித்யாவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை, இயக்கும் பொறுப்பை வித்வான் ரித்விக் ராஜாவும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

நேரம் கிடைக்கும்போதும், இதற்கென நேரம் ஒதுக்கியும் நாங்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்தும் முழுவதுமாகவும், அதிகாலையிலும் இரவு 10 மணிக்கு மேலும் சந்தித்து பல ஒத்திகைகள் பார்த்திருக்கிறோம். ஆனாலும், நிகழ்ச்சி அரங்கேறும் நாளன்று எல்லோரிட மிருந்தும் தன்னிச்சையாக எழும் இசை புதியதொரு அனுபவத்தை ரசிகர்களுக்கு மட்டுமல்ல கலைஞர்களுக்கும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

K. அருண் பிரகாஷ் (மிருதங்கம்):

K. அருண் பிரகாஷ்
K. அருண் பிரகாஷ்

ங்குபெறும் ஒவ்வொரு கலைஞனுக்கும் தனி சிந்தனை,  வாசிப்பில் தனி வழி, நிகழ்ச்சி வழங்குவதில் தனி வழி என்றிருக்கிறது. ஒன்றிணைந்து செய்யும்போது எல்லாவற்றையும் தாண்டி நல்ல நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும், சங்கீதத்தை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியது. அதே நேரத்தில் நாங்கள் வழங்கும் இசை, ரசிகர்களை சிந்திக்க வைக்கவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டு முயற்சியில் இதை செய்திருக்கிறோம். அனைவரும் ‘நான்’ என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி, ‘நாம்’ என்ற எண்ணத்துடன் செயல்பட்டிருக்கிறோம்.

 R. ஹேமலதா (வயலின்):

 R. ஹேமலதா
R. ஹேமலதா

12 தலைசிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞர்களுடன் பணியாற்ற கிடைத்த தனித்தன்மையானதொரு வாய்ப்பு. கர்நாடக சங்கீதத்தின் முழுப் பரிமாணத்தை ரசிகர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் உணர முடியும்.

பி. சிவராமன் (மிருதங்கம்):

பி சிவராமன்
பி சிவராமன்

நாங்கள் அனைவருமே வெவ்வேறு லய வாத்தியப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஒன்றாக நிறைய கச்சேரிகள் வாசித்திருக்கிறோம். குரு பிரசாத், சந்திரசேகர் சர்மா,  அனிருத் ஆத்ரேயா இவர்களுடன் நான் நிறைய கச்சேரிகள் வாசித்திருக்கிறேன். அந்த அனுபவத்தின் காரணமாக இவர்கள் எந்த தருணத்தில் எப்படி வாசிப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் என்னால் வாசிக்க முடியும்.

சந்திரசேகர் சர்மா (கடம்):

சந்திரசேகர் சர்மா
சந்திரசேகர் சர்மா

மூத்த கலைஞர்களுடன் ஒரு குழுவாக ஒரு நிகழ்ச்சி வழங்கும்போது தனித்தன்மையான அனுபவம் கிட்டுகிறது. கற்கவும் பகிர்ந்துகொள்ளவும், ஒரு கச்சேரியின் பல்வேறு தருணங்களில் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மாறுபட்ட கோணங்களைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இன்னும் சில நாட்கள்தான். பரபரப்புடன் காத்திருக்கிறேன்.

அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா):

அனிருத் ஆத்ரேயா
அனிருத் ஆத்ரேயா

னித்தன்மை மிக்க சிறப்பானதொரு நிகழ்ச்சி; எதிர்கால சந்ததியினர் இவ்வகையில் இயங்க தூண்டுகோலாக அமையப்போகும் நிகழ்ச்சி. இதில் நானும் அங்கம் வகிக்கிறேன் என்பதே எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நான் பள்ளி மாணவனாக இருந்த காலந்தொட்டு என்னுடைய இசை உணர்வுகளை வகைப்படுத்திய பெருமை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. என்னுடைய சங்கீதப் பயணத்தில், என்னுடைய வளர்ச்சியில், இன்று இவர்கள் என் நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் அளவிற்கு என்னை ஒவ்வொரு நிலையிலும் செதுக்கியவர்கள் இவர்கள். அர்த்த முள்ளதாகவும் பிரமிக்கத்தக்க வகையிலும் அமையப்போகும் ஒரு நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் என்பது எனக்கு பன்மடங்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

பிரவீன் ஸ்பர்ஷ் (மிருதங்கம்):

பிரவீன் ஸ்பர்ஷ்
பிரவீன் ஸ்பர்ஷ்

தோழமையில் அனைவரும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்கிறோம் என்பதே மிகவும் அழகாக இருக்கிறது. இந்தக் குழுவிலேயே வயது, அனுபவம் இரண்டிலும் நான்தான் மிகவும் சிறியவன். இவர்கள் அனைவரும் வழங்கிய கச்சேரிகளில் அமர்ந்து பார்க்க எனக்கு இடம் கிடைக்குமா என்று ஏங்கிய காலம் உண்டு. இப்போது அவர்களோடு இணைந்து வாசிப்பது, பரந்த மனத்துடன் அவர்கள் எனக்கும் இடம் அளித்திருப்பது எல்லாமே நெகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இவர்கள் ஒவ்வொருவருடனும் நான்  தனித்தனியாகப் பணியாற்றியிருக்கிறேன். அப்போதும் சரி இப்போதும் சரி, ஆர்வம்தான் மேலோங்கி இருக்கிறது. கிருஷ்ணா  அண்ணாவின் கச்சேரி என்றாலே பரிசோதனை முயற்சிகள் பலவற்றிற்கு இடமிருக்கும். இங்கு, பல்வேறு கலைஞர்களின் எண்ண ஓட்டங்கள் இணைந்து கர்நாடக சங்கீதம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரப்போகிறது.

 குருபிரசாத் (கடம்):

குருபிரசாத்
குருபிரசாத்

பாட்டு, நான்கு மிருதங்கம், நான்கு வயலின், என்னுடன் சந்திரசேகர சர்மா கடம், அனிருத் கஞ்சிரா என இது வரை நடந்திராத வகையில் கலைஞர்களின் சேர்க்கை. தனி ஆவர்த்தனமும் உண்டு. ஆனால், வழக்கமான வகையில் அல்ல. ஒத்திகையின்போது அவரவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அறிவுப் பரிமாற்றம் சாத்தியமானது. இப்போதைய சூழலில் இது மிகவும் அரிதாக இருக்கும் ஒரு விஷயம். நிறைய ஆச்சர்யங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

சங்கீதா சிவகுமார்:

சங்கீதா சிவகுமார்
சங்கீதா சிவகுமார்

நான் கச்சேரி மேடைகளுக்கு அறிமுகமாகிய காலம். ஆர் கே ஸ்ரீராம் குமார், அருண்பிரகாஷ் இருவரும் அப்போது இளம் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருந் தார்கள். கல்லூரியில் புதியதாக சேருபவர், கடைசி வருடம் படிக்கும் மாணவரைப் பார்த்தால் எப்படி ஒரு ‘ஹீரோ வழிபாடு’ செய்வார். எனக்கு அவர்களிடம் அவ்வகை மரியாதை. YACM என்ற அமைப்பின்மூலம் இளம் கலைஞர்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாகப் பல விஷயங்களைச் சாதித்தோம். என்னுடைய உயர்வு தாழ்வு எல்லாவற்றிலும் இவர்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள்.

சிவராமன், பூங்குளம் சுப்ரமணியம், ஹேமலதா நாங்கள் ஒரே நேரத்தில் ஜூனியர் ஸ்லாட், சப் சீனியர் ஸ்லாட், பல இரயில் பயணங்கள் என்று நண்பர்களாக நிறைய கச்சேரிகள் வழங்கி, வளர்ந்திருக்கிறோம். அக்கரை சுப்புலட்சுமி, H N பாஸ்கர் அவர்களுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. குரு பிரசாத், பிரவீன், சந்துரு மிகவும் சிறியவர்கள். ஆனால் அவர்கள் வழங்கும் சங்கீதம் உயர்தரமானது. இவர்கள் ஒவ்வொருவரும் என்னை ‘இன்ஸ்பயர்’ செய்பவர்கள்.

இந்த நிகழ்ச்சி கிருஷ்ணாவுடைய ஐடியா. க்ருஷ்ணா படைப்புத் திறன் மிக்கவர். அவர் நினைப்பதை நடத்திக் காட்டுவதில் திறமையானவர். இக்கலையின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை அபரிமிதமானது.

ரித்விக் ராஜா (இயக்கம், ஒருங்கிணைப்பு):

ரித்விக் ராஜா
ரித்விக் ராஜா

டந்த 20 ஆண்டுகளாக கிருஷ்ணா அண்ணாவிடம் சங்கீதம் பயின்று வரும் மாணவன். 13 பேரில் நிறைய பேர் சீனியர் கலைஞர்கள். பலருடன் 2003 ஆம் வருடம் தொடங்கி ஒரு இசைக் கலைஞனாக நானும் வளர்ந்திருக்கிறேன்.

ஒத்திகையின்போது, நிகழ்ச்சி உருவாக்கம் குறித்த பல எண்ணப் பரிமாற்றங்களில் என் குரலுக்கும் மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சி பல பிரிவுகளாக வழங்கப்படவிருக்கிறது. அதற்கேற்றாற்போல் தொழில்நுட்ப அமைப்பு சிறப்பாக அமையவேண்டும். அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் அதை நிறைவேற்ற முழுச் சுதந்திரத்தையும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆன்லைனில் வந்தபோதும் அதை இயக்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. இன்று நேரடி நிகழ்ச்சியாக வழங்கும்போது என் பொறுப்பு பன்மடங்கு அதிகரித்திருக் கிறது. அனைவரின் ஒத்துழைப்பு, பரந்த மனப்பான்மை, கூட்டு முயற்சி என இந்த மூன்று கோட்பாடுகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் இந்நிகழ்ச்சியில் எனக்குச் சிறப்பானதொரு அனுபவம் கிடைத்திருக்கிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் சிந்தையில் போற்றிப் பாதுகாப்பேன்.

ரசிகர்களின் செவிக்கும், சிந்தைக்கும், கண்களுக்கும் விருந்தாக இசை நண்பர்கள் இணைந்து வழங்கும் ‘பிரண்ட்ஸ் இன் கான்செர்ட்’  நிகழ்ச்சி, வரும் வெள்ளிக்கிழமை, அதாவது 19ஆம் தேதி அன்று சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் மாலை 6:30 மணிக்கு நடக்கவிருக்கிறது. இனிமையான அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்து கொண்டோம். சங்கீதத்தையும் கேட்டு மகிழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com