காந்தி ஜயந்தி: "சுதந்திர கொண்டாட்டத்தில் என்னால் ஈடுபட முடியாது; என்னால் வர இயலாது!"

அக்டோபர் 2 – காந்தி ஜயந்தி தினம்!
Gandhi Jayanti
Gandhi Jayanti
Published on

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர் நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள். 

ஆனால் 1947, ஆகஸ்ட் 15 - இந்தியாவின் முதல் சுதந்திர தின விழா  கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

ஏன், எதனால், என்ன காரணம்?

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14, நள்ளிரவு என்று தேதியும், நேரமும் நிர்ணயிக்கப்பட்டன. அதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்னாலிருந்தே அந்த சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று தில்லியில் சர்தார் வல்லபாய் படேலும், ஜவஹர்லால் நேருவும், திட்டமிட்டார்கள். இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான மகாத்மா காந்திஜி அச்சமயத்தில் கல்கத்தாவிற்குச் சென்றிருந்தார். அவரை வரவழைத்து விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி அவர் கையால் சுதந்திர இந்தியாவின் கொடியை முதல் முறையாக ஏற்றச் செய்ய வேண்டும் என்று இருவரும் மிகவும் விரும்பினார்கள். 

காந்திஜியை சந்தித்து விவரம் சொல்ல ஒரு பிரதிநிதியை கல்கத்தாவிற்கு அனுப்பினார்கள். கூடவே, ‘நீங்கள்தான் தேசப்பிதா. நீங்கள் கட்டாயமாக இந்த முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நாட்டினரை ஆசிர்வதிக்க வேண்டும்,‘ என்று ஒரு கடிதம் எழுதி, அதில் சர்தார் வல்லபய் படேல், நேரு இருவரும் கையெழுத்திட்டு பிரதிநிதியிடம் கொடுத்திருந்தார்கள். 

அப்போது கல்கத்தா, கலகத்தாவாக மாறிவிட்டிருந்தது. மக்களிடையே மதபேதம், பொருட்சேதம், உயிர்ச்சேதம், அமைதியின்மை, ஆழ்ந்த சோகம்…. காந்திஜி தன் போதனையாலும், நேரடி தலையீட்டாலும், அங்கே சுமுகமான பொது வாழ்க்கை அமைய பாடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதையும் படியுங்கள்:
Mahatma Gandhi Quotes: காந்தி சொன்ன 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!
Gandhi Jayanti

பிரதிநிதி அவரைச் சந்தித்து, விவரம் சொல்லி, கடிதத்தையும் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த காந்திஜியின் கண்களில் மெல்லிய சந்தோஷ ஒளி தோன்றியது. ஆனால் உடனே அது மறைந்தது. ‘நம் அமைதிப் போராட்டங்கள் நற்பலனைத் தந்திருக்கின்றன, எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால்  இங்கே, கல்கத்தாவில் நம் மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இப்படி இங்கே இருள் சூழ்ந்திருக்கும்போது தில்லியின் சுதந்திர கொண்டாட்டத்தில் என்னால் ஈடுபட முடியாது; என்னால் வர இயலாது,‘ என்று உறுதியாகச் சொல்லி விட்டார். 

பிரதிநிதி பெரிதும் வருத்தம் கொண்டார். அவர் முகம் வாடுவதைக் கண்ட காந்திஜி, ‘நீங்கள் எல்லாம் அந்தக் கோலாகலத்தைக் கொண்டாடுங்கள். நான் இங்கிருந்தபடியே மானசீகமாக அதில் கலந்து கொள்கிறேன்,‘ என்று கூறி, ‘அந்த விழாவிற்கு என்னாலான ஏதாவது அன்பளிப்பை வழங்க வேண்டுமே, ஆனால் நான் ஏதும் இல்லாதவனாக இருக்கிறேனே,‘ என்று சொல்லி வருந்தினார். 

அப்போது அருகிலிருந்த மரத்திலிருந்து சருகான ஒரு இலை உதிர்ந்து காந்திஜியின் மடிமீது வந்து அமர்ந்தது. அதை எடுத்து பிரதிநிதியிடம் கொடுத்தார் மகாத்மா. ‘இதைத் தவிர, சுதந்திர தின சந்தோஷத்தைக் கொண்டாட என்னிடம் வேறு அன்பளிப்பு இல்லை, இந்தாருங்கள்,‘ என்றார். 

அதை வாங்கிக் கொண்ட பிரதிநிதியின் கண்களிலிருந்து நீர் பெருக, அது இலையின் மீது விழுந்தது. 

இதையும் படியுங்கள்:
சிறுகதை - காந்தி தேசம்!
Gandhi Jayanti

அதைப்பார்த்த காந்திஜி, ‘அட, பார்த்தீர்களா, இந்த காய்ந்த இலைக்கும் இறைவன் நீர் வார்த்து விட்டார்! இந்தியவும் இனி துளிர்த்துப் பசுமை பரப்பும்‘ என்று சொல்லி அந்தச் சூழ்நிலை இறுக்கத்தை மென்மையாக இளக வைத்தார். 

ஆமாம், இந்தியாவின் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், நம் தேசப்பிதா கலந்து கொள்ளவில்லைதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com