புவிசார் குறியீடும் மண்ணின் பாரம்பரியமும்!

புவிசார் குறியீடும் மண்ணின் பாரம்பரியமும்!

ண்ணின் பாரம்பர்யத்தை உணர்த்தும் வகையில் அந்தந்தப் பகுதியின் முக்கிய சிறப்புகள் நிச்சயம் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும். இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு எனும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.  

திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிப் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் தட்டு, தம்மம்பட்டி மரசிற்பம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு இப்படியாகப்பட்ட வரிசையில்,

மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம்  மட்டி வாழைப்பழம்

ஸ்தாளி பழம் போலவே மஞ்சள் நிறத்தோலுடன் தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும்.   மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது.   இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து இருப்பதோடு சற்று மணமாகவும் இருக்கும். மட்டி வாழை மரங்கள் 8 அடி முதல் 10 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை. இதில் வரும் காய்கள் மிகவும் நெருக்கமாக பார்க்க அழகாக இருக்கும். ஒவ்வொரு மட்டி வாழைப்பழமும் 40கிராம் முதல் 60கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். இதில் நோயெதிர்ப்பு சக்தி தரும் மருத்துவ குணம்  மிகுதியாக காணப்படுவதால் சிறுகுழந்தைகள் முதல் நோயாளிகள் பெரியவர்கள் என அனைவரும் உண்ணலாம் ..முக்கியமாக பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் உணவாக இந்த மாவுச்சத்து நிறைந்த மட்டிப்பழத்தை நசுக்கி ஊட்டுவார்கள். இந்தப் பழம் குமரிமாவட்டத்தில் பரவலாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும்.

நேருவுடன் சம்பந்தப்பட்ட இந்தப் பழத்தைக் குறித்த ருசியான நிகழ்வு ஒன்று இன்றும் பேசப்படுகிறது. நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட விருந்தில் மட்டி வாழைப்பழமும் இடம்பிடிக்க, அவரதன் அதன் ருசியில் மயங்கி ஆஹா அருமை இவ்வளவு ருசியான வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை என்றாராம். அதன் பின் அந்தப் பழங்கள் இங்கிருந்து நேருவுக்கு அடிக்கடி அனுப்பபட்டதாக தகவல்கள் உண்டு.

நெல்லை மாவட்டம் வீரவாநல்லூர் செடி புட்டா சேலை

புடவைகள் என்றாலே நம் தமிழ்நாடு உலகளவில் புகழ்பெற்றது. அதிலும் சேலம் சுங்கடி காஞ்சிப் பட்டு என்ற சிறப்பு வகைகள் தனிகவனம் பெறும். அதில் தற்போது அனைத்துமக்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது நெல்லை மாவட்டத்தின் வீரவாநல்லூர் செடி புட்டா சேலை. சேலைகளில் தனி மவுசு கொண்ட இந்தப் புடவைகள் வீரவநல்லூர், வெள்ளாங்குளி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சௌராஷ்டிரா சமுதாய மக்களால் கைத்தறி நெசவு மூலம் உருவாக்கப்படுகிறது. சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக அவர்கள் இந்தப் பகுதிகளில் இந்த வகை சேலையை உற்பத்தி செய்து வருகின்றனர் .சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் இதற்கு கிடைத்த புவிசார் குறியீட்டினால் இதை நெய்யும் நெசவாளிகள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

முழுக்க முழுக்க கைத்தறி நெசவு மூலம் தயாரிக்கப் படும் இந்தப் புடவைகளில் பெரும்பாலும் செடியும் பூக்களும் நிறைந்த வடிவமைப்புகள் காணப்படும். அந்த சேலை வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் இதமாகவும் உடுத்துவதற்கு எளிதாகவும் உள்ளதால், பெண்களிடையே இந்தக் கைத்தறிப் புடவைக்கு அதிகம் மவுசு உண்டு. இந்த செடி புட்டா சேலை ஒன்று தயாரிக்க மூன்று நாட்கள் வரை ஆகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் இந்த புடவை சுமார் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எல்லாக் காலத்துக்கும் ஏற்ற இந்த செடி புட்டா சேலையை இனிப் பெண்கள் மேலும் அதிகம் விரும்பி வாங்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஜடேரி நாமக்கட்டி.

புரட்டாசி பிறக்கப் போகிறது. இனி பெருமாளின் அடையாளமாக விளங்கும் நாமக்கட்டிகளுக்கு கிராக்கி ஏறும். இந்த நாமக்கட்டி பற்றி என்றாவது நாம் யோசித்திருப்போமா? புவிசார் குறியீடு பெற்ற மகிழ்வுடன் இப்போது பார்ப்போம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜடேரி கிராமத்தில்தான் இந்த நாமக்கட்டிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு உள்ள 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறைகளைக் கடந்தும்  நாமக்கட்டி தயாரிப்பதை குடிசை தொழிலாகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர். அதன்படி தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது தலைமுறையினர் நாமக்கட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.  

நாமக்கட்டி தயாரிப்பதற்காகவே இயற்கையானது இப்பகுதி வெண்பாறை நிறைந்த சுண்ணாம்பு மண்ணை அளித்துள்ளது ஆச்சர்யமான ஒன்று. இங்கு வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு அதற்கென இருக்கும்  ஆலையில் அரைத்து நீர் சேகரிக்கும் தொட்டியில் கரைக்கப்படுகிறது. தொடர்ந்து தொட்டியின் அடியில் மென்மையாக படிந்திருக்கும் நாமக்கட்டி மாவை பக்குவமாக பிரித்து நீளமாக தட்டி எடுத்து நாமக்கட்டியாக வெயிலில் காயவைத்து பாக்கெட் செய்து தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஜடேரி நாமக்கட்டி ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்படத்தக்கது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் இங்கு தயாராகும் நாமக்கட்டிகள்தான் செல்வதாக மகிழ்வுடன் கூறுகின்றனர் கிராமத்தினர்!

பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டுமே நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இதனை சேமித்து வைப்பதற்காக சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். இதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் ஜடேரி கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜடேரி திருமண் நாமக்கட்டி தயாரிப்பாளர் சங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். சங்கத்தின் மூலம் ஜடேரி  நாமக்கட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் அனுமதியோடு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பத்திருந்தனர்.

பல கட்ட ஆய்வுக்குப்பின் ஒன்றிய அரசு அதிகாரிகள் ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு அளித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளதை அறிந்த கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான நாமக்கட்டிகளை உற்பத்தி செய்து வருவதாகவும் சுண்ணாம்பு மண் கட்டணம், ஆட்கள் கூலி உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டால் ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாமக்கட்டி ஏற்றுமதி மூலம் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை மட்டுமே லாபம் கிடைக்கிறது எனவும் கூறும் இவர்கள், புறம்போக்கு நிலத்தில் உள்ள சுண்ணாம்பு மண்ணை குறிப்பிட்ட அளவு இலவசமாக அள்ளி பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்தால் மேலும் லாபம் கிடைக்கும் என்றும் நாமக்கட்டி சேமித்து வைக்கும்  கிடங்கை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும்  அரசிடம் கோரிக்கையும் வைக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com