விவசாயத்தில் செயற்கை உரங்களின் ஆதிக்கம் தலைதூக்கிய போதிலும், ஆங்காங்கே ஒருசில விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அதிலும் இளம் தலைமுறையினர் சிலர் தங்களின் வேலையை உதறிவிட்டு விவசாயத்தின் பக்கம் திரும்புகிறார்கள். இது, இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தையும், தொழில் செய்யும் ஆர்வத்தையும் குறிக்கிறது. அவ்வகையில் அரசு வேலையை வேண்டாம் என கைவிட்டு, ஆட்டுப்பண்ணை அமைத்து வெற்றிகரமாக வலம் வரும் சதீஷ்குமார் அவர்களை சந்தித்து பேசினோம். அவரின் வெற்றிப் பயணத்தை இப்போது நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நான் சதீஷ்குமார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 2009 ஆம் ஆண்டில், காவலருக்கான அரசுத் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தேன். காவலர் பணியிலேயே சுமார் 10 ஆண்டுகள் ஓடிப் போனது. பணிக்காலத்தில் நீடித்த வேலை பளு அதிகமானதே தவிர, வருமானத்தில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. இச்சூழலில் தான் எனது அரசு வேலையை உதறி விட்டு சொந்தமாக தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்தேன். பிறகு, உடற்பயிற்சி மையம் அமைக்கலாம் என முடிவு செய்து தஞ்சாவூரில் தொடங்கினேன். தொடக்கத்தில் சிறிது சிரமங்களை சந்தித்தாலும், போகப்போக அனைத்தும் எளிதாகி விட்டது. உடற்பயிற்சி மையத்தில் போதிய வருமானம் கிடைத்தது. இருப்பினும், கிடைக்கும் நேரத்தில் மற்றொரு தொழில் செய்தால் கூடுதல் வருமானத்திற்கு வழிவகுக்கும் என நினைத்தேன். அப்படி உருவானது தான் இந்த ஆட்டுப் பண்ணை.
ஆட்டுப் பண்ணையைப் பராமரித்து வருவதிலும் காலநிலைக்கேற்ப சில சிக்கல்கள் இருந்தது. அதனையும் தொடர் முயற்சி மற்றும் பயிற்சிகளின் மூலம் எளிதாக்கி விட்டேன். தற்போது கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு என்ற இரு வகையான நாட்டு ஆடுகளை வளர்த்துக் வருகிறேன். ஆடுகளுக்குத் தேவையான தீவனங்களை பணம் கொடுத்து வாங்காமல், இயற்கை முறையில் பசுந்தீவனத்தையும் பயிர் செய்து வருகிறேன்.
ஆடுகளை கறிக்கடைகளுக்கு கொடுக்காமல், நேரடியாக பொதுமக்களுக்கே விற்க வேண்டும் என முடிவெடுத்தேன். சமூக வலைதளங்களில் என்னுடைய பண்ணையைப் பற்றியும், நாட்டு ஆடுகள் வளர்ப்பு முறைகள் பற்றியும் நிறைய வீடியோக்களைப் பதிவு செய்துள்ளேன். இதனைப் பார்த்து விட்டு பொங்கல், தீபாவளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், திருமணம், காதுகுத்து மற்றும் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கிடா வெட்டு போன்ற வீட்டு விசேஷங்களுக்கும் என்னுடைய பண்ணையைத் தேடி பொதுமக்கள் வரத் தொடங்கினர்.
10 முதல் 15 கிலோ எடையுள்ள 40 சிறிய ஆடுகளை, 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை வாங்குவேன். ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒரு மாதத்திற்கு இரண்டரை முதல் மூன்று கிலோ வரை எடை அதிகரிக்கும் அளவிற்கு பசுந்தீவனம் கொடுப்பேன். ஒரு ஆட்டுக் கிடா, அடுத்த 6 மாதத்தில் விற்பனைக்கு தயாராகி விடும். அப்போது, ஏறக்குறைய 30 கிலோ எடை இருக்கும். 1 கிலோ உயிர் எடை ரூ.500 என விற்பனை செய்வதன் மூலம், 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஒரு வருடத்திற்கு சுமார் 120 ஆடுகளை விற்பனை செய்வதன் மூலம், மொத்தமாக ரூ.18 லட்சம் வருவாய் கிடைக்கும். பராமரிப்பு மற்றும் தீவனம் உள்பட அனைத்து விதமான செலவுகளும் போக, ஒரு வருடத்திற்கு, ரூ.8.20 லட்சம் லாபம் கிடைக்கிறது.
நான் ஏற்கனவே பணிசெய்த அரசு காவலர் வேலையில் ஒரு மாதத்திற்கு ரூ.40,000 சம்பளம். ஒரு வருடத்திற்கு ரூ.4.80 லட்சம் கிடைத்தது. ஆனால், இந்த சம்பளம் வாங்கவே நேரம், காலம் இல்லாமல் உழைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது; தூங்க முடியாது. அதே அளவு உழைப்பு மற்றும் நேரத்தை எனது தொழிலில் செலவிட்டால், இரு மடங்கு வருமானம் கிடைக்கிறது.
என்னுடைய வெற்றி எது தெரியுமா? அரசு வேலையை உதறி விட்டு "ஆடு மேய்க்கிறியா" என்று கிண்டல் செய்தவர்கள் எல்லோரும் இப்போது ஆச்சரியமாக பார்க்கிறார்களே, அதில் தான் நான் என்னுடைய முழுவெற்றியை எட்டி விட்டேன் என்ற திருப்தி கிடைக்கிறது என்று தனது வெற்றிப் பயணத்தை மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் சதீஷ்குமார்.