
‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே!’ என்ற திரைப்படப் பாடலுக்கு அத்தாட்சியாக, இன்று உலகமே தங்கத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. கோல்டின் மதிப்பு என்றைக்கும் குறைந்ததில்லை. அதிலும் அதன் தற்போதைய மதிப்பு, தினந்தினம் சிக்சர்தான்! ஒவ்வொரு நாளும் இரண்டு முறை விலையேறும் மெகா மெட்டல் ஆகி விட்டது அது! சாண் சறுக்கினால் முழமாக ஏறி, அது தன் விலையின் உயரத்தைச் சந்திர மண்டலத்தை நோக்கிக் சென்று கொண்டிருக்கிறது.
நாடுகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி ஸ்டாக் செய்ய, மக்கள் பவுன் கணக்கிலும், கிராம் கணக்கிலும் அதனை வாங்க அலை மோதுகிறார்கள். தீபாவளி சமயத்தில் ஓரிரண்டு துணிகளை அவசரமாக வாங்கிக்கொண்டு ஊருக்குப் பஸ் பிடிக்க விழைவோர், கூட்டம் அலைமோதும் பெரிய கடைகளுக்குச் செல்லாமல், பக்கத்திலுள்ள கூட்டங் குறைந்த சிறு கடைகளில் புகுந்து, பத்து இருபது அதிகமானாலும் பரவாயில்லை என்று வேண்டியதை வாங்கிக்கொண்டு விரைவதைப்போல, தங்கம் எட்டாக் கனி ஆனவுடன், மக்கள் வெள்ளிக்குள் புகுந்து விளையாட ஆரம்பித்ததால், அதன் விலையும் ராக்கட் வேகம் எடுத்து விட்டது.
1980 களில் சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள வெள்ளிக்கடைகளில், கிராம் 6 ரூபாய் 40 காசுக்குப் பொருட்கள் வாங்கியது இன்னும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது. இப்பொழுதோ கிராம் 200 ஐ நெருங்கி விட்டது! தங்கம் ஆபரணமாக மாறி, அழகுக்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவசரக் காலங்களில் கை கொடுக்கும் ஆபத்பாந்தவனும் அதுதான்!
கையில் இருக்கும் கேஷுக்கு இணையானது, கழுத்திலும், கைகளிலும், காதுகளிலும் நகைகளாக இருக்கும் தங்கம். என்ன? ஒரு தடவை வங்கிக்குப் போய், அதனை வைத்து விட்டுப் பணத்தைப் பெற வேண்டும்.
இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ 94,600/- என்றும், ஒரு கிராம் 11,825/- என்றும் தெரிவிக்கிறது செய்தி. இதனை நீங்கள் படிக்கும்போது அது மேலும் உயர்ந்திருக்கவும் கூடும்! மீட்டர் வட்டி என்று சொல்கிறார்களே அது போல, கோல்டின் விலை கூடிக் கொண்டே போகிறது!
சரி! நாம் வேண்டுமானால் ஒரு பவுனை ரூபாய் 94/- க்கு வாங்கி வருவோமா! ஒரேயொரு கண்டிஷன்தான்! அப்படியே கண்ணை மூடி, ஓர் 65 ஆண்டுகள் பின்னால் போனால், நிச்சயமாக நாம் வாங்கி வரலாம்! அது சாத்தியமில்லை என்று நீங்கள் எண்ணுவது நியாயந்தான்! இருங்கள். அந்தச் செய்தியைப் பார்த்தாவது நாம் சந்தோஷப் பட்டுக்கொள்ளலாமே! இதோ அந்த இனிய செய்தி!
ரூ 94/- விற்ற போது ரூ 100 /-ஐ நெருங்குகிறது என்ற எச்சரிக்கை அப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதோ ஒரு பவுன் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கமே, தங்கமே! உன் மகிமையை என்னென்பது!