தமிழ்நாடு அரசின் 2024 - 25 பட்ஜெட்: ஒரு பார்வை!

Government of Tamil Nadu Budget 2024-25: An Overview
Government of Tamil Nadu Budget 2024-25: An Overviewhttps://www.asiriyar.net

மிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

“சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும், இந்த 7 இலக்குகளை முன்வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் அமையப்பெற்று இருக்கிறது” என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்தக் கவர்ச்சிகரமான திட்டங்களை நிறைவேற்ற அளிக்கப்பட்டிருக்கும் திட்ட அறிக்கையில் செலவுகளின் மதிப்பீடு 4.08 லட்சம் கோடி.

இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதன் உள்கட்டமைப்பு, மக்களின் வாழ்க்கை முறை  மேம்படுத்தப்பட வேண்டும். அதிலும் முக்கியமாக, அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது அரசின் தலையாய கடமையாகும். 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நல்வாழ்வு என்ற முக்கியத் திட்டத்துடன் தமிழ்நாடு அரசு பட்ஜெட் அறிக்கையைத் திட்டமிட்டு உள்ளது.

அரசுக்கு மூலதனங்களை உருவாக்கித்தரும் பொதுப்பணி, நீர்வளம், போன்ற துறைகளுக்கும், மக்கள் நல்வாழ்வு கல்வித்துறை போன்ற துறைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதற்காக நிதியமைச்சரையை பாராட்ட வேண்டும். பள்ளித்துறை அமைச்சராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்திருக்கும்  நிதியமைச்சரின் அனுபவமும் ஆற்றலும் அறிக்கையில் பிரதிபலிக்கிறது. 10 புதிய அரசு பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகளிலும்  கல்லூரிகளிலும் திறன் பயிற்சி கட்டமைப்பு, ஒரு லட்சம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் அறிவிப்பு, அரசுப் பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் போன்றவை அமைச்சரின் கல்வித்துறையின் மீதுள்ள கனிவான பார்வையைக் காட்டுகிறது.

தொழில்துறைக்கு 20.198 கோடி சிறு, குறு நடுத்தரத் தொழில்துறைகளுக்கு 1557 கோடி ஒதுக்கியிருப்பதும், புதிய தொழிற்பூங்காக்கள், பொது இடங்களில் இலவச வைஃபை விண்வெளித்தொழில் போன்றவை தமிழ் நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கப் பெரிதும் உதவும். இருப்பினும், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் சில நலத் திட்டங்கள்  கவர்ச்சியாக இருந்தாலும், மத்திய, மாநில உறவுகளைப் பாதிக்குமோ என்ற அச்சத்தையும் உருவாக்குகிறது. உதாரணமாக,  கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.

2030க்குள் தமிழ்நாடு குடிசையில்லா மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என்ற, ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 1 லட்சம் வீடுகள் 2024 - 25ம் ஆண்டுக்குள் கட்டப்பட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு வீட்டுக்குச் சுமார் 3.5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளே வீடுகளைக் கட்டிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2024 - 25 நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின்’ திட்டத்தின் கீழ் அடுத்த 5 வருடத்தில் கூடுதலாக 2 கோடி மக்களுக்குச் சொந்த வீடு கனவை நினைவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு சலுகை வட்டியில் வீட்டுக்கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக 70000 ரூபாய் அளவிலான தொகையை குறைவான வட்டியில் கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 269.098 சதுரடி கொண்ட வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மானிய விலை வீட்டுக்கு அளிக்கப்படும் கடனில், சலுகையில் மத்திய மாநில அரசின் பங்கீடு 60:40 ஆக இருக்கும். PMAY கிராமின் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக  2 லட்சம் வரையில் மானிய வட்டி விகிதம் அளிக்கப்படும்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில், சொந்தமாக நிலம் இல்லாத பட்சத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இதனால் வருமானம் அளவீட்டில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பலன் அடைவார்கள். மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பலன் பெற முடியும்.

இதனால் தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிய அளவில் பயனளிக்கும். என்று சொல்லப்பட்டாலும். ஒரேவிதமான குறிக்கோளுக்கு இரண்டுவிதச் சலுகைகள் என்பது குழப்பங்களையும்  தேவையில்லாத அரசியல் விவாதங்களையும் உருவாக்கும்.

அதேபோல்,  வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களில் இடம்பெற பண்டைய தமிழ் இலக்கியங்களின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  செம்மொழி ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே  செய்து கொண்டிருக்கிறது. பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இப்படி இடம்பெற்றிருக்கும் சில தேவையில்லாத ஆணிகளை விட  இந்தப் பட்ஜெட்டில் கவலையளிக்கும் விஷயம் உயர்ந்து வரும் அரசின் அதிகப்படியான கடன் சுமை. இதைத்தவிர ஏற்கெனவே இருக்கும் பொதுக்கடனில் பெரும்பகுதி இந்த நிதியாண்டில் திருப்பிச்செலுத்தப்பட வேண்டும். இதன் விளைவாகக் கடன் தொகை 8,33,361 கோடியாக உயரும். இது மாநில ஜிடிபியில் 25.41 சதவிகிதம் ஆகும். இது ஆரோக்கியமான நிதி நிலையில்லை. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்தியாவில் மிக அதிகமாகக் கடன் சுமையிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் கடந்த மூன்றாண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இதில் முந்தைய ஆட்சியாளர்களின் பங்கும் கணிசமானது.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் அதிபராக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டது சாத்தியமானது எப்படி?
Government of Tamil Nadu Budget 2024-25: An Overview

திமுக அரசு பதவியேற்றதும்  தமிழ்நாடு பொருளாதாரத்தை, நிதி மேலாண்மையைச் செம்மையாக்க  வெளிமாநில, வெளிநாட்டு பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. அந்தக் குழு வழங்கிய ஆலோசனை, திட்டங்கள்  எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

2024 - 25 தமிழக பட்ஜெட்

மொத்த வருவாய் - 2,99,013 கோடி ரூபாய்

மொத்த செலவுகள் - 4,07,703 கோடி ரூபாய்

நிதிப் பற்றாக்குறை - 1,08,689 கோடி ரூபாய்

பள்ளிக் கல்வித் துறை - 44,042 கோடி ரூபாய்

உயர் கல்வித் துறை - 8,212 கோடி ரூபாய்

சுகாதாரம், குடும்ப நலம் - 20,198 கோடி ரூபாய்

மாநில அரசு ஊழியர்களின் ஊதியச் செலவுகள் - 84,931 கோடி ரூபாய்

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியச் செலவுகள் - 37,663 கோடி ரூபாய்

மாநில அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படும் மொத்த தொகை - 1,22,594 கோடிரூபாய்

2024 - 25 - 1,04,318 கோடி ரூபாய் அளவுக்கு புதிய கடன்கள் பெற்று, நிதிப் பற்றாக்குறை ஈடு செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை - 31.3.2025 அன்று 8,33,361 கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com