குப்பைக் கிடங்காக மாறி வரும் கும்முடிபூண்டி: விடிவுகாலம் எப்போது?

Gummidipundi Garbage Dump
Gummidipundi Garbage Dump

கிராமங்கள் அதிகமாக இருக்கும் ஒரு வட்டம் தான் கும்முடிபூண்டி. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது இந்த இடம். ஆனால், அதற்குள் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இதைப் பற்றிய பின்னணியை விவரிக்கிறது இந்தப் பதிவு.

தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி. தமிழக ஆந்திர எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இந்த வட்டத்தின் நிலைமை தற்போது வேறாக மாறி வருகிறது. கும்முடிபூண்டியில் சிப்காட் தொழில் வளாகம் இருக்கிறது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். ஒருபுறம் தொழிற்சாலை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்க, மறுபுறம் கும்முடிபூண்டி சாலையோரத்தின் இருபுறமும் தொடர்ந்து இரவில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காற்று மாசுபாடு அடைவது மட்டுமின்றி நில வளமும் பாதிக்கப்படுகிறது.

இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், நெகிழிப் பைகள் மற்றும் காகிதக் குப்பைகள் உள்ளிட்ட பல குப்பைக் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் அடிக்கிறது. இந்த நிலை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த அவலத்தைத் தடுக்க கும்முடிபூண்டி வாழ் மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் தகவல் தெரிவித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

குப்பைகளை முறையாக கையாண்டால் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகாது. ஆனால், யாரும் பார்த்திராத வகையில் வேண்டுமென்றே கும்முடிபூண்டியின் சாலையோரங்களை குப்பைக் கொட்டும் இடங்களாகப் பயன்படுத்தி வருகிறது ஒரு கும்பல்.

சென்னையில் இருந்து செங்குன்றம் வழியே கும்முடிபூண்டிக்கு வந்தால் நம்மை முதலில் வரவேற்பது குப்பைக் கழிவுகள் தான். குப்பைகளை எரிப்பதால் உண்டாகும் நச்சுப் புகையை இங்கு வாழும் மக்களும், வாகன ஓட்டிகளும் சுவாசிக்க நேரிடுவதால், இனி வரும் நாட்களில் இதன் பாதிப்பு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
குப்பை டிரக், ஜி.பி.எஸ் மயமாகிறது - கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்டம்!
Gummidipundi Garbage Dump

கும்முடிபூண்டி மின்சார ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சென்னை நோக்கி சென்று வருகின்றனர். இரயில் நிலையத்திற்கு வலது புறத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்கள் தான் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இந்நிலை என்று மாறும்; இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.

இதுகுறித்து கும்முடிபூண்டி வாழ் பொதுமக்களில் ஒருவரான சரவணனிடம் கேட்ட போது, "நான் தினமும் கும்முடிபூண்டியில் இருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்கிறேன். காலையில் ரயிலில் செல்லும் போது வலப்புறத்தில் இருக்கும் சாலையோரங்களில் குப்பைகள் எரிந்து புகை மண்டலமாக காட்சியளிப்பதை தினமும் பார்ப்பேன். இது தொடர்கதையாக நீடிக்கிறது. இது தொடர்பாக பல புகார்கள் அளிக்கப்பட்டும் இன்று வரை தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. கும்முடிபூண்டிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என என்னைப்போல் பலரும் காத்திருக்கிறார்கள்" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com