Interview: "என் யதார்த்த நடிப்புக்கு அடித்தளம் மதுரை மாநகரமே!" - குரு சோமசுந்தரம் நெகிழ்ச்சி!
இந்த வாரம் வெளியான பாட்டல் ராதா, குடும்பஸ்த்தன் இரண்டு படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால், - ஜோக்கர் படத்திற்கு பிறகு - ரசிகர்களை மீண்டும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் குரு சோமசுந்தரம். மலையாள சினிமா டைரக்டர்கள் விரும்பும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நம் மதுரை மண்ணின் மைந்தர் குரு சோமசுந்தரம். மலையாள சினிமா, படங்களில் நடித்த அனுபவம், குடி பழக்கம் போன்ற விஷயங்களை நமது கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார்.
குடிகார ராதவாக பாட்டல் ராதா படத்தில் நடிக்க முன்வந்ததற்கு குறிப்பிட்ட காரணம் இருக்கா?
இந்த படத்தின் டைரக்டர் தினகரன் தன் வாழ்க்கையில் சந்தித்த ஒரு குடிகார மனிதரை மனதில் வைத்து இந்த ராதா கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். நான் நிறைய 'குடிமகன்களை' பார்த்துள்ளேன். இவர்கள் அனைவருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு மிக சிறிய அளவில் எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த சிறு பழக்கமே என் வாழ்கையில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதுவே இப்படி என்றால் முழு நேர குடிமகன்களின் நிலை எப்படி இருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனது சொந்த அனுபவம் கொஞ்சம், மற்றவர்களை பார்த்த அனுபவம் பல என அனைத்தையும் உள்வாங்கி பாட்டல் ராதாவாக நடித்தேன்.
குடும்பஸ்தன் படத்தில் உங்கள் நடிப்பில் எம். ஆர். ராதா, விவேக் இவர்களின் சாயல் தெரிந்ததே?
இருக்கலாம். விவேக், நாகேஷ், எம்.ஆர். ராதா, வடிவேலு இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்த நடிகர்கள். இவர்களின் சாயல் இருப்பது இயல்பு. இப்படத்தின் டைரக்டர் ராஜேஸ்வர் காளிசாமி இந்த கதையை சொல்லும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இதற்கு முன்னால் முழு காமெடி படம் செய்ததில்லை. மணிகண்டன் நடிக்கும் படத்தில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதற்கு குடும்பஸ்த்தன் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடிக்கிறீர்கள்... எப்படி இருக்கிறது அனுபவம்?
மலையாளம், தமிழ் என பிரித்து பார்ப்பதில்லை. எங்கே வேலை செய்தாலும் நடிகன் என்ற உணர்வுடன்தான் இருக்கிறேன். டோவினோ தாமஸின் 'மின்னல் முரளி' படம் தொடங்கி ஏழு படம் வரை முடித்து விட்டேன். எனக்கு நடிக்க ஓரளவு ஸ்கோப் உள்ள கதைகளை செலக்ட் செய்து நடிக்கிறேன்.
சில ஆண்டுகள் முன்பு வரை மலையாள சினிமாவில், மலையாளிகள் அல்லாத பிற மொழி நடிகர்களை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் தற்போது உங்களை போல் பல தமிழ் நடிகர்கள் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்கள். மண்ணின் மைந்தர்கள் என்ற 'இறுக்கத்தை' மலையாள சினிமா தளர்த்தி கொண்டதாக நினைக்கிறீர்களா?
ஆம். மலையாள சினிமா தனது இறுக்கத்தை தளர்த்தி கொண்டுவிட்டது என்பது உண்மைதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமாவில் இந்த இறுக்கங்கள் என்றும் இருந்ததில்லை. இன்று ஒடிடி, சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு சினிமா, மொழி என்ற எல்லைகள் தாண்டி அனைத்து மக்களாலும் பார்க்க கூடிய விஷயமாக மாறி வருகிறது. மலையாள சினிமா மட்டுமல்ல இன்று அனைத்து மொழி படங்களிலும் வெவ்வேறு மொழி கலைஞர்கள் நடிக்கிறார்கள். நான் மலையாளம், தெலுங்கு, படங்களில் நடிக்கிறேன். ஹிந்தி பட 'ஆடிஷன்'கு சென்று வந்திருகிறேன். சில நாட்களில் என்னை ஹிந்தி படங்களிலும் பார்க்கலாம்.
உங்களின் யதார்த்த நடிப்புக்கு அடித்தளம் எது?
கூத்துபட்டறைதான். இங்கே பயிற்சி மேற்கொண்ட போது நடிப்போடு சேர்த்து ஒரு விஷயத்தை எப்படி 'அப்சர்வ்' செய்ய வேண்டும் என்று கற்று கொண்டேன். மேலும் நான் வளர்ந்த மதுரையின் மாசி வீதி தெருக்களும், மனிதர்களும் பின்னால் நான் நடிகனாக உருவாக ஒரு காரணமாக அமைந்தார்கள். அலங்கார், நியூ சினிமா, சென்ட்ரல் தேவி டாக்கீஸ், சிடி சினிமா என நான்மாட கூடலில் நான்கு பக்கமும் அமைந்த பல திரையரங்களில், திரைப்படங்களின் கதைகளை மற்றவர்களுடன் நான் விவாதித்தது எனக்குள் சினிமா ஆசை எழ அடிப்படை காரணமாக அமைந்தது. மதுரை டி வி எஸ் ரப்பர் தொழிற்சாலையில் உடன் பணி செய்த சக தொழிலாளர்களின் உடல் மொழி, உரையாடல் போன்ற விஷயங்கள் பின்னால் என் நடிப்புக்கு பெரிதும் உதவி செய்தது. இயல்பாகவே கலை, பண்பாடு, கலாச்சார வாழவியலை கொண்டுள்ள மதுரை மாநகரமே என்னை சினிமாவுக்குள் வர உந்துதலாக அமைந்தது.
நீங்கள் நாடக பின்புலத்தில் இருந்து வந்தவர். இப்போது நாடகங்கள் அரிதாகி வருகிறதே?
நாடகத்தில் நடிப்பவர்களில் பெரும்பாலோர் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சில காலம் நாடகங்களில் இருந்து விட்டு சினிமாவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் நாடக துறையில் ஒரு வெற்றிடம் இருப்பது போல் தோன்றுகிறது. இது எங்கள் கூத்துப்பட்டறை நாடக அமைப்புக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் உள்ள பல நாடக குழுக்கள் இந்த பிரச்சனையை சந்திக்கின்றன. இது ஒரு சுழற்சிதான். மீண்டும் நாடக உலகம் புத்துயிர் பெறும் என நம்புகிறேன்.
நீங்கள் நடித்த பாட்டல் ராதா படத்தின் இசை விழாவில் மிஷ்கின் சர்ச்சை பேச்சு குறித்து....?
மிஸ்கின் பேசியது தவறுதான். இதற்கான விளக்கத்தையும், மன்னிப்பையும் மிஷ்கின் சொன்ன பிறகு இதை பெரிது படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்.