அதிகரிக்கும் ஹேக்கர்கள்; அலறுகிறது டிஜிட்டல் உலகம்!

சிறப்புக் கட்டுரை
அதிகரிக்கும் ஹேக்கர்கள்;   அலறுகிறது டிஜிட்டல் உலகம்!

ன்றைய உலகத்தில் சாப்பாடு இல்லாமல் கூட இருக்கிறார்கள், செல்போன் இல்லாமல் யாரும் இல்லை’. குழந்தைகள் கையில் இன்று செல்போன் கொடுத்தால், பாஸ்வேர்ட் போட்டு அதை ஓபன் செய்து யூடியூப், கேம்ஸ் என புகுந்து விளையாடுகிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் செல்போன் பெரும் பங்கு வகிக்கிறது.

செய்தி பரிமாற்றம், கேளிக்கைகளைத் தாண்டி இன்று கையில் ஒரு செல்போன் இருந்தால்போதும், உலகையே ஆளலாம். அந்த அளவுக்கு இன்று, உலகம் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறது

ஒரு காலத்தில் மருத்துவம், விஞ்ஞானத்தில் யார் சிறந்தவர்களோ அந்த நாடுகள் உலகுக்கு தந்தையாக இருப்பார்கள். ஆனால், இன்றைய உலகில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் செய்யக்கூடிய மென்பொருள்கள் தேவை அதிகரித்து உள்ளதால் நவீன தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்தும் நாடே, உலகுக்கு தந்தையாக கருதப்படுகிறது.

இதனால் பல்வேறு புதிய மென்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், உலக நாடுகளுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இவர்களுக்கு போட்டியாக புதுப்புது மென்பொருள்களை உருவாக்கி டிஜிட்டல் உலகை ஹேக்கர்கள் அலறவிட்டு வருகின்றனர்.

நினைவிருக்கிறதா பெகாசஸ்?

‘பெகாசஸ்’ இந்த வார்த்தை இந்திய அரசியல்வாதிகள் முதல் நீதித்துறை, பிரபலங்கள் என சமுதாயத்தில் உயர் அந்தஸ்த்தில் இருந்தவர்களை கதிகலங்க செய்தது. ‘பெகாசஸ்’ என்பது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் நிறுவனம் உருவாக்கிய உளவு மென்பொருள். இந்த மென்பொருள் தேர்ந்தெடுத்த அரசு அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருளை நிறுவனம் விற்பனை செய்கிறது. தனியார்களுக்கு விற்கப்படாது. பெகாசஸ் மென்பொருள் நிறுவப்பட்டு , அந்த போனின் மைக் மற்றும் கேமரா உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டவர்கள் உளவு பார்க்கலாம்..

இந்த மென்பொருள் மூலம் நம் நாட்டில் உள்ள நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்டது. ஒன்றிய அரசு, “இந்த மென்பொருளை வாங்கவில்லை” என்று சொல்லபட்ட போதும், “யாரால் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்டப்பட்டது, செய்தவர்கள் ஹேக்கர்ஸா” என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

கைகொடுக்கும் வாட்ஸ்ப்

இந்த மென்பொருள் போல், பல மென்பொருட்கள் மூலம் ஹேக்கர்கள் டிஜிட்டல் உலகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் மென்பொருள்கள், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் நிறைய மோசடிகள் நடக்கிறது. இதை, கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மோசடிகளுக்கு மூளையாக செயல்படுபவனை, பல நாட்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்குகின்றனர். ஆனால், அவனுக்கு தலைவன் யார் என்பது அவனுக்கே தெரியாது. தொடர்புகொள்ள வேண்டிய எண், வாட்ஸ் அப் எண். ஆனால் அந்த நம்பரிலுள்ளவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ரயில்வே டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி உள்ளது. இதை ‘ஷார்ப்’ என்ற மென்பொருள் பயன்படுத்தி ரூ.56 கோடிக்கு தட்கல் டிக்கெட்களை புக் செய்து, அதிக விலைக்கு அதை விற்று ரூ.10 கோடிக்கு மேல் மெகா மோசடி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ரயில் பயணம் மூலம் வருகின்றனர். இதனால், அந்த பகுதிகளில் நிறைய ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தட்கல் முறையில் டிக்கெட்களை புக் செய்ய சென்றால், திறந்த சில நிமிடங்களில் விற்று விடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் விழுப்புரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார், திருவண்ணாமலை ரயில்வே எஸ்.ஐ. ஆதித்ய குப்தா, திருச்சி சைபர் கிரைம் எஸ்.ஐ அரி கிருஷ்ணன் மற்றும் 5 ஆர்பிஎப் போலீசார் அடங்கிய தனிப்படைகள் தனது விசாரணையை தொடங்கியது. பின்னர், மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று வேலூரில் உள்ள தட்கல் டிக்கெட்களை புக் செய்து கொடுக்கும் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது, பல கடைகளில் சட்டவிரோதமாக டிக்கெட்கள் புக் செய்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மிக ஷார்ப்பான ஆப்(பு)

இதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளின் பெயர் ஷார்ப். இரண்டு கடைகளில் ‘ஷார்ப்’ என்ற மென்பொருள் பயன்படுத்தியது தெரிந்தது. அந்த கடை உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ‘தட்கல் சாப்ட்வேர் ஆல்.காம்’ என்ற இணையதளம் மூலம் வாங்கியதாக தெரிவித்தனர். இந்த இணையதளம்தான் இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தட்கல் டிக்கெட்களை புக் செய்ய குறைந்தது 2-3 நிமிடங்கள் ஆகும். ஆனால், ‘ஷார்ப்’ மென்பொருள் மூலம் குறைந்தது 30 விநாடிகள் முதல் 60 விநாடிகளுக்கு புக் செய்துவிடலாம்.

‘ஷார்ப்’ மென்பொருள் மூலம் புக் செய்தால் பெயர், முகவரி, பயண தகவல் போட்டால் போதும், மற்ற எல்லாத்தையும் பை பாஸ் செய்து, ஓடிபி, கேப்சா இல்லாமல் நேரடியாக உள்ளே சென்று அதிவிரைவு இணைய சேவை மூலம் டிக்கெட்களை உடனே புக் செய்யலாம்.

சாதாரணமாக தட்கல் டிக்கெட்களை புக் செய்யும்போது பெயர், முகவரி, பயண தகவல் எல்லா பதிவு செய்தபின் பணம் செலுத்த சில தகவல்கள் கேட்கும். அதை போட்ட பின்பு கேப்சா (சில எழுத்துகள் காட்டும், அதை பார்த்து தான் டைப் செய்ய வேண்டும்), ஓடிபி போன்றவை கேட்கும். பயணிகளின் தகவல்களை முன்கூட்டியே பெறுவதால், அவர்களுக்கு தெரியாமலேயும், அவர்களுக்கு ஓடிபி செல்லாமலும் பணத்தை எடுக்கலாம்.

விசாரணையில் இறங்கிய தமிழக சைபர் கிரைம் இந்த இணையதளத்தின் உரிமையாளர் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒரு செல்போன் எண் கிடைத்தது. அந்த எண்ணை வைத்து விசாரிக்கும் போது, அசாமில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரிந்தது.

அந்த வங்கி கணக்கை ஆராய்ந்த போது, அந்த நபர் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் என தெரிந்தது. இதையடுத்து, அந்த செல்போன் எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த துப்புகள் மூலம் தனிப்படையினர் அந்த வாலிபரை சல்லடை போட்டு தேடினர். இதற்காக கடந்த மாதம் 9ம் தேதி பாட்னாவுக்கு சென்றனர். அங்கு அந்த வாலிபரின் இருப்பிடம் உள்ளிட்ட பல விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து அவரை நெருங்கினர்.

இறுதியாக கடந்த 21ம் தேதி சைலேஷ் யாதவ் என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர், அங்குள்ள ஒரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 24ம் தேதி வேலூருக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த மெகா மோசடியில் சைலேஷ் யாதவ் மட்டும் தனியாக செயல்பட்டது தெரிந்தது. சைலேஷ் யாதவ் ‘ஷார்ப்’ என்ற மென்பொருள் வாங்கிய சுமார் 3,500 பேருக்கு விற்று அதன் மூலம் சம்பாதித்துள்ளார். இந்த மென்பொருளை வாங்கியவர்கள் சைலேஷ் யாதவ் மோசடி செய்ததுபோல், தட்கல் டிக்கெட்களை புக் செய்து உள்ளனர். இவர்கள் யாருக்கும் யாரிடம் இருந்து வாங்கினார்கள், அவர்களது பெயர் என்ன, எங்கு இருக்கிறார்கள் என எதுவும் தெரியாது.

ஷார்ப் மென்பொருளை 3,485 பேருக்கு விற்று, அவர்கள் மூலம் 1,25,460 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் கிடைத்துள்ளது.

ஆனால் புக் செய்யப்பட்ட 1.25 லட்சம் டிக்கெட்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கப்பட்டுள்ளது

கைதாகியிருக்கும் சைலேஷ் யாதவ் ரயில் டிக்கெட்களை புக் செய்யும் இ-டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் ஆதார் சென்டர் என்று நடத்தி வந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு இதை மூடிய அவர், மென்பொருள் விற்பனை தொடர்பாக இணையத்தில் தேடி உள்ளார். அதன்படி, ‘ஷார்ப்’ என்ற மென்பொருளை வாங்கி தட்கல் டிக்கெட்களை புக் செய்து, அந்த மென்பொருள்களை ஆயிரக்கணக்கானோருக்கு விற்று பணம் பார்த்து உள்ளார்.

சைலேஷ் யாதவுக்கு இந்த ஹேக்கிங் மென்பொருளை யார் வடிவமைத்து கொடுக்கிறார்கள்? இந்தியரா? வெளிநாட்ட வரா? என்பதுதான் சைபர் கிரைமை திணறடிக்கும் கேள்வி. .

சைலேஷ் சுமார் 10 மென்பொருள்களை இதேபோல் வைத்துள்ளார். குறிப்பாக, ‘ஷார்ப்’ மென்பொருளை மட்டும் 3,485 பேருக்கு தலா ரூ.2000 முதல் ரூ.4,500 வரை விற்றுள்ளார். இதன் மூலம் மட்டுமே சுமார் ரூ.1 கோடி சைலேஷ் சம்பாதித்து உள்ளார். இதில் 25% சைலேசுக்கும், 75% மென்பொருளை வடிவமைத்தவருக்கு பங்கு கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்த சைபர் கிரைம், அது யார் என்பதைத்தான் தேடிக்கொன்டிருக்கிறார்கள். முழு பரிவர்த்தனைகளும் வாட்ஸ்ப்பில் நடக்கிறது.

வாட்ஸ் அப் காலில் பேசும் போது அவர்களின் இருப்பிடத்தை கண்காணிப்பது கடினம். அதேபோல், அவர்களும் பேசும் உரையாடல்களை கேட்க முடியாது. இதனால் சட்டவிரோத செயல்களை செய்யும் அனைவரும் வாட்ஸ் அப்பை ஒரு துருப்பு சீட்டாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாட்ஸ் அப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சட்டவிரோத செயல்களை தடுக்க கடுமையான நிபந்தனைகள் அந்நிறுவனத்துக்கு அரசு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் மயம் உலகத்தில் புகைப்படங்களை மார்ப்பிங் செய்வது, குரல் மாற்றி அமைப்பது, பாதுகாக்கப்பட்ட அரசு இணையத்தளங்கள் உட்பட பல்வேறு இணையத்தளங்களை முடக்கி தகவல்களை திருடுவது, செல்போன்களை வேவுபார்ப்பது என சட்டவிரோத செயல்களுக்காக உருவாக்கப்பட்ட பல மென்பொருள்கள் சைபர் குற்றங்களை தடுக்க பெரும் சவாலாக எழுந்திருக்கிறது.

இந்தியாவில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இணைய வழியில் நிதி மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com