நவம்பர் 07… உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் குரலில் பாடிய டாப் 10 பாடல்கள்!

நவம்பர் 07… உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் குரலில் பாடிய டாப் 10 பாடல்கள்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பின்னணி பாடகர், பாடலாசிரியர், இலக்கியவாதி ,அரசியல்வாதி தொலைக்காட்சி தொகுப்பாளர், பரதம் ,வெஸ்டர்ன், குச்சிப்புடி, கதக், கதக்களி என அனைத்து வித டான்ஸும் தெரிந்தவர். பல மொழி பேசும் வித்தகர். உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். எழுத்தாளர். சின்ன குழந்தைகளைக் கூட மரியாதையாக,'வாங்க', 'போங்க' என கூப்பிடும் மரியாதை தெரிந்தவர்... என பன்முகத்தன்மை கொண்ட உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகளை  அவர் குரலில் பாடிய  டாப் 10 பாடல்களைக்கொண்டு சிறப்பிக்கலாமே... என்று யோசித்ததின் விளைவே இந்த பதிவு...

வெறுமனே எளிதான பாடல்களாக பாடாமல் கிட்டதட்ட ஒரு professional பாடகர் அளவுக்கு நிறைய பாடல்களை அசால்டாக பாடி இருக்கிறார். (இனிப்பு கடைக்குச் சென்று எந்த இனிப்பு மிகச் சிறந்தது? என்று கேட்டால் எப்படி பதில் வராதோ.. அதே போல்தான் அவரின் குரலில் வெளிவந்த பாடல்களும்.. எந்த பாடல் மிகச் சிறப்பு என்று சொல்வது? தெரியவில்லை.  எனக்குத் தெரிந்ததை / மிகவும் பிடித்ததை / நான் ரசித்ததை இதில் குறிப்பிட்டுள்ளேன்).

நடிகர் பட்டியலில் இருந்து பாடகர் பட்டியில் சேர்த்து விடலாம் என்று தோன்றும் அளவுக்கு அழகான குரல் ஆண்டவருக்கு. 'தேவர் மகனு'க்காக சிலம்பம் கற்றது... 'விருமாண்டிக்காக' ஜல்லிக்கட்டு பயின்றது, அவ்வை சண்முகிக்காக' சண்முகி  மாமியாகவே' மாறியது இப்படி அவருடைய ஆர்வம் மற்றும் தொழிலுக்கான அர்ப்பணிப்பு அலாதியானது. அதேபோல்தான் பாடல் பாடும் போதும். ஒவ்வொரு பாடலையும் ரசித்து லயித்து பாடும் அழகே அழகு... அவர் ரசித்து பாடிய.. எனைக் கவர்ந்த பாடல்கள் இதோ...

G. தேவராஜன் இசையில் 1975ஆம் ஆண்டு வெளிவந்த 'அந்தரங்கம்' திரைப்படத்தில்  முதன்முதலாக சொந்த குரலில் பாடிய...

"ஞாயிறு ஒளி மழையில் 

திங்கள் குளிக்க வந்தாள்

 நான் அவள் பூ உடலில் 

புது அழகினை படைக்க வந்தேன்...’’

காதலன் காதலியை வர்ணித்து பாடுவதாக அமைந்திருக்கும் பாடல்தான்.. படம் கருப்பு வெள்ளை. ஆனால் இந்த பாடல் மட்டும் கலர் ஃபிரிண்ட் ல இருக்கும்.(கோவாவின் அழகை அழகாய் காண்பிக்கும்) மனதை வருடும் மிக மிக இனிமையான இந்தப் பாடலை எந்தவித அலட்டலும் இல்லாமல் மென்மையாக பாடி இருப்பார் கமலஹாசன்.

1978ஆம்ஆண்டு வெளிவந்த க்ரைம் த்ரில்லர் படமான 'சிகப்பு ரோஜா'க்களில் ஜானகி அம்மா அவர்களுடன் ஓர் அழகான டூயட் 

'நினைவோ ஒரு பறவை விரிக்கும் 

அதன் சிறகை பறக்கும் 

அது கலக்கும் தன் உறவை...

"பாடலின் ஆரம்பத்தில் வரும்' பாபப பாபா'மனதை ஏதோ செய்யும். 'பனிக்காலத்தில் நான் வாடினால்

 உன் பார்வை தான் என் போர்வையோ...'

'அதுவல்லவோ பருகாத தேன்

 அதை இன்னும் பருகாததேன்' 

வாலியின் வரிக்கும், ராஜாவின் இசைக்கும் இடையே நடந்த போட்டியில் சத்தமே இல்லாமல் படு ஸ்டைலாக பாடி ஸ்கோர் பண்ணி இருப்பார். 

1978ஆம் ஆண்டு ருத்ரய்யாவின் இயக்கத்தில் வெளிவந்த 'அவள் அப்படித்தான் 'திரைப்படத்தில் அவர் பாடிய ,

'பன்னீர் புஷ்பங்களே 

ராகம் பாடு 

உன்னை போலே 

எந்தன் உள்ளம் ஆடுது

 புது தாளம் தொட்டு.

ஓ புது ராகமிட்டு..."பாடல்...

'உதட்ட சைவு இல்லாமல் புதுமையாக படமாக்கப்பட்டிருக்கும்.

கங்கை அமரனின் மனதை வருடிச் செல்லும் பாடல் வரிகளுக்கு கச்சிதமாக பொருந்தும் கமலின்குரல். தனிக் குரலில் பாடி தனி ஆவர்த்தனமே செய்திருப்பார்.(ஒளிப்பதிவு வேற லெவலில் இருக்கும்...)  

1986 ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்' படத்தில்,

'விக்ரம் விக்ரம்

 விக்ரம் ...விக்ரம் 

நான் வெற்றி பெற்றவன்

 இமயம் தொட்டுவிட்டவன்

 பகையை முட்டி விட்டவன்

 தீயை சுட்டு விட்டவன்

 என் வீரமே வாகையே சூடும்... 

'டைட்டில் சாங்கை ஹைபிட்ச்சில் அனாயாசமாக பாடி இருப்பார். 

 தமிழின் முதல் ராக் பாடல் என்றே இதை சொல்லலாம்.

 வைரமுத்துவின் வைர வரிகளை கமல் சார் பாடும் போது  ஸ்பீக்கர் கிழியும். இந்தப் பாடலை இவரை தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு ஹிட் ஆகியிருக்காது.   (பாடல் வரிகள் ஆண்டவருக்கு மிகவும் பொருத்தமானது.) என்ன ஒரு இசை.. என்ன ஒரு குரல் சான்சே இல்ல! கமல் சார் குரலில் எனர்ஜி  வேற லெவலில் இருக்கும்.

1987ஆம்ஆண்டு'நாயகன் திரைப்படத்தில்

"தென்பாண்டி சீமையிலே

 தேரோடும் வீதியிலே

 மான் போல வந்தவனே  

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ .. 

வளரும் பிறையே தேயாதே

 இனியும் அழுது தேம்பாதே 

அழுதா மனசு தாங்காதே...

'என்று பாடி நம்மையும் அழ வைத்திருப்பார். (இந்தப் பாடலுக்காகவே நிறைய தடவை படம் பார்த்தவர்கள் பலர்.) தனிமையின் தாலாட்டை இதைவிட அழகாக வேறு ஒருவரால் பாடிட முடியுமா?! கமலின் கம்பீரக் குரலில் இந்த பாடல் ஒரு பொக்கிஷம்.

1989ஆம் ஆண்டு வெளிவந்த' அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் இடம் பெற்ற

 'ராஜா கைய வச்சா..

அது ராங்கா போனதில்ல...'

என்ற பாடலை கவிஞர் வாலி அவர்கள் பெண்ணுடன் காரை ஒப்பிட்டு அருமையாக எழுதி இருப்பார்'.

கன்னிப் பொண்ணா நெனச்சு காரத்தொடனும்..

கட்டினவன் விரல் தான் மேல படணும்..

கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்..'

நடிப்போ, பாடலோ , நகைச்சுவையோ... எதுவாக இருந்தாலும் அசால்டாக செய்து அப்ளாஸ்ஸ் வாங்கி விடும் அதிசயபிறவி. சொந்தக் குரலில் பாடி பாடலுக்கு நடனமுமாடியே ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும் .இந்தப் பாடலில் பாடிக்கொண்டே செம ஹேண்ட்சமா  அவர் டான்ஸ் ஆடும் அழகு அழகோ அழகு. 

1996ஆம் ஆண்டு வெளிவந்த 'அவ்வை சண்முகி" படத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் பெண் குரலில் அவர் பாடிய'

'ருக்கு ருக்குருக்கு... ஹரேபாபா ருக்கு

ஓ மை டார்லிங்..ப்யாரி ஜானு...

கிவ் மீ எ லுக்கு...' பாடலை யாராவது மறக்க முடியுமா.?

வாலியின் வார்த்தை விளையாட்டை பாடலில் அப்படியே பிரதிபலித்திருப்பார் கமல்.'

(தூணிலும் இரு(ப்)பாண்டி துரும்பிலும் இரு(ப்)பாண்டி என்று கமலின் கதாபாத்திரம் 'பாண்டி'யை குறிப்பிட்டு பிரமாதப்படுத்தி இருப்பார் வாலி)

1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'உல்லாசம். 'இசை கார்த்திக் ராஜா. இயக்கம் ஜே.டி.ஜெரி. இந்தப் படத்தில்

"முத்தே முத்தம்மா

 முத்தம் ஒன்னு தரலாமா

 காதல் மஞ்சத்தில் 

கணக்குகள் வரலாமா

 கடலுக்கு காதல் வந்தால் கரையேறி வந்தால் போதும் கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா...

 உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம் சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்...

இந்த கலக்கலான பாடலை கமலஹாசன் அவர்கள்ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியிருப்பார்.(படத்தில் அஜித்துக்காக)

செம எனர்ஜி செம யூத்தாக இருக்கும் குரல்.

2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டியில் ஸ்ரேயாகோஷலுடன் இணைந்து பாடிய பாடல்

'உன்ன விட இந்த

உலகத்தில் ஒசந்தது

ஒண்ணுமில்ல...ஒண்ணமில்ல

 உன்ன விட ஒரு உறவுன்னு 

சொல்லிக்கிட யாருமில்ல யாருமில்ல

வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி

வெறும் சாட்சி சொல்ல சந்திர(ன்)வருவாண்டி'...

ராஜாவின் கலக்கல் ,இசை கமலின் காந்தக் குரல் அந்த இருட்டு, நிலா வெளிச்சம்.... பாடலைக் கேட்கும் போது   கணவன் மனைவியின் அன்னியோன்யம் புரியும். ... இதுதான் பாட்டு என்று சொல்ல வைக்கும். 'கமல் சாரின்குரலில் மனம் சொக்கி போவது என்னவோ நிச்சயம்... (இந்தப் பாடலை எழுதியவரும் கமல்தான்.)

2013ஆம்ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் படத்தில்

'உன்னைக் காணாத 

நானின்று நானில்லையே…

விதைஇல்லாமல் வேரில்லையே...

'இந்த ஒரு பாடலில் எத்தனை மொழி, முகபாவம் அசைவு நடிப்பு நடனம் இப்படிஎல்லாம் கலந்து கட்டிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும். கமலைத் தவிர வேறு எவராலும் இப்படி ஒரு பாடலை உருவாக்க முடியாது. நான்கு நிமிடத்தில் முடியும் ஒரு பாடலுக்கு இவ்வளவு மெனக்கெடலை வேறு எவராலும் கொடுத்திருக்க முடியாது. தமிழ் திரை உலகின் மாபெரும் ராஜராஜ சோழன் இவர்தான்... இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே  பெருமையாக உள்ளது. இப்படி ஒரு மகா கலைஞனைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.  

சகலகலா வல்லவன் கமல் சார் ஒரு சகாப்தம் சரித்திரம்.. அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க.

என்றென்றும் அன்புடன்

கல்கி குழுமத்தின் சார்பாக

உலகளாவிய கமல் ரசிகர்கள் சார்பாக…

ஆதிரை வேணுகோபால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com