
உழைக்காமல் வரும் ஊதியம்
ஒரு நாளும் நிலைக்காது!
களைக்காமல் சேர்க்கும் செல்வம்
களிப்பினை என்றும் நல்காது!
விதைக்காமல் செய்யும் அறுவடை
வீடு வந்து சேராது!
பதைப்புடனே செய்யும் செயல்கள்
பக்குவம் பெற்று நிற்காது!
பரீட்சை எழுதாத பாஸ்
பலகாலும் துயர் சேர்க்கும்!
நிரந்தர வேலையை அது
நிச்சயம் தடை செய்யும்!
வெளிப்படை அற்ற உறவு
விபரீதத்தில் தான் முடியும்!
கருப்பை வலு விழந்தால்
கடினமே குழந்தைப் பேறு!
உண்மையே பேசி வந்தால்
உலகமே போற்றிப் பாடும்!
தன்மையாய் நடந்து கொண்டால்
தலையின்மேல் தூக்கிக் கொள்ளும்!
கண்ணிய வாழ்வு என்றும்
காத்திடும் நற் பெயரை!
உன்னிலும் உயர்ந்தோர் முன்னால்
உண்மையாய்ப் பணிவு வேண்டும்!
துன்பங்கள் வந்து போகும்
துயரங்கள் வந்து வாட்டும்!
நல்லது செய்தால் கூட
நமக்கு அது களங்கமாகும்!
வருவது வரட்டும் என்று
வைராக்கியம் மனதில் கொண்டு
உண்மையாய் உறுதி பக்கம்
நின்றிட்டால் உயர்வு வரும்!
உழைப்புக்கு ஈடும் இல்லை
உண்மைக்கு அழிவும் இல்லை!
கலப்படப் பொருள் விற்போர்
காலப்போக்கில் காணாமல் போவர்!
வியாபாரத்திலும் நேர்மை தன்னை
விடாதோர் நிலைத்து நிற்பர்!
உயர்வான எண்ணங்களே நம்மை
உயரத்தில் கொண்டு சேர்க்கும்!