சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் அபார சித்திரங்கள்!

சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் அபார சித்திரங்கள்!

“நா குடிப்பேன், சீட்டாடுவேன். ஆனா குதிர ரேஸுக்கு மட்டும் போக மாட்டேன். ஏன் போகணும்? ஏழு குதிர ஓடினா ஏழாயிரம் பேர் பாக்கறானே, அந்த ஏழாயிரம் பேரே ஓடினாலும் ஒரு குதிரையாவது பாக்குமா?”

இந்த சாராயம் பற்றிய நாகேஷின் நகைச்சுவையிலிருந்து நாம் வெகு தூரம் வந்துவிட்டோம்.

“மச்சி! ஓபன் த பாட்டில்” என்றாலே சீட்டில் விழுந்து விழுந்து சிரிக்கும் பாவ்லோவின் நாய் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவின் டாஸ்மாக் காட்சிகள் நம்மை கீழிறக்கிவிட்டன.

”குடி குடியை கெடுக்கும்” போன்ற உபதேசங்கள் காலாவதியாகிப்போய்விட்டன. கவர்ச்சி நடிகை குடிக்கும் காட்சியில் வெகு ஜாக்கிரதையாக அவளின் ஸ்லீவ்லெஸ் ரகசியங்களை மறைக்காதபடி இந்த குடி சிகரெட் எச்சரிக்கை வாக்கியங்கள் போடுவதை ஒரு கலையாக்கி விட்டார்கள். இந்த காட்சிகளும் குடித்து விட்டு வீரம் பேசுவது போன்ற மறச்செயல்களும் மறைமுகமாக நமது கலாசாரத்தில் ஒன்றி பாதிப்பை ஏற்படுத்தியாகிவிட்டது.

Jean-Baptiste Greuze
Jean-Baptiste Greuze

ஜீன்-பாப்டிஸ்ட் க்ரெயூஸ் (Jean-Baptiste Greuze) என்னும் ஓவியர் வரைந்த குடிகார செருப்புத்தொழிலாளி என்னும் போர்ட்லண்ட் ஆர்ட் ம்யூசியத்துக்கு சொந்தமான, ஆனால் நான் போன சமயம் சிக்காகோ ஆர்ட் ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தைப்பார்த்தேன். க்ரெயூஸ் இந்த ஆயில் சித்திரத்தை 1776-1779 காலகட்டத்தில் வரைந்திருக்கிறார்.

இந்த சாராய பாதிப்பு காலங்காலமாக இருந்து வருவதும் அது மேற்கத்திய நாடுகளிலுமே, சீதோஷ்ணத்தின் கட்டாயத்தில் சாராயம் குடிப்பது அவர்களின் கலாசாரமாக இருக்கும்போது கூட, குடும்பங்கள் சீரழிந்த கதைகள் அங்கேயும் அதிகம் என்பது இந்த பெயிண்டிங்கைப் பார்த்தால் புரியும்.

The Drunken Cobbler, வரைந்த ஜீன் க்ரெயூஸ் பதினெட்டாம் நூற்றாண்டு சித்திரக்காரர். அவர் மரம், செடி, மலர், காதல் நிலவு என்று எழுதி தாமே சொந்தச் செலவில் பதிப்பித்த ஏதோ நம் கருத்தட்டான்குடிக்கவிஞர் மாதிரி வரைந்துவிட்டுப்போகாமல் அன்றைய சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் அபார சித்திரங்களைத் தந்திருக்கிறார்.

”கடைசி மன்னனின் கழுத்தை கடைசி மதத்தலைவரின் பெருங்குடலால் நெறித்துக்கொல்லும் வரை மனிதனுக்கு சுதந்திரம் இல்லை” (”Man will never be free until the last king is strangled with the entrails of the last priest!!”) என்று அப்போதே தைரியமாகச் சொன்ன டெனிஸ் டிடராட் (Denis Diderot), ஃப்ரான்ஸின் மிகப்பெரிய இலக்கிய கலை விமர்சகர் மற்றும் அங்கே என்ஸைக்ளோபீடியாவைத் தயாரிக்க மிகப்பெரும் தூணாக இருந்தவர். ரஷ்யாவின் காதரின் மகாராணியின் நூலகத்திலும் பணிபுரிந்திருக்கிறார். இவர் தொகுத்த என்சைக்ளோபீடியா ஃப்ரென்ஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட பல காரணிகளில் ஒன்று என்பவர்களும் உண்டு.

க்ரெயூஸின் சித்திரங்களை மிகச் சிலாகித்த விமர்சகர்களில் இவர் முன்னணி.

“பெண்களின் அந்தரங்க பாகங்களைக் காட்டும் படங்களாக வரைந்துகொண்டிருந்த சித்திரக்காரர்களை சவட்டு சவட்டு என்று சாத்திய இந்த டிடெராட் ”இவனப்பாருங்கடே! என்னமா சமூக அவலங்களைப்படம் பிடிக்கிறான்” என்று க்ரெயூஸைப்பாராட்டினார்.

”ஒழுக்கக்கேட்டையும் தீயவைகளையும் விளக்கும் தற்கால ஓவியங்களை நாம் ஆஹா ஓஹொ என்று சிலாகிக்கிறோம். பதிலாக க்ரெயூஸின் ஓவியங்களைப்போல புத்திசொல்லி சமூகத்தைத் திருத்தும் படைப்புகள்தான் இன்றைய தேவை!”

டிடெராட் சொல்லியிருப்பது இன்றும் நம் நாட்டுக்கும் எவ்வளவு உயிர்ப்பான தேவை என்பது நமக்குப்புரிகிறதா இல்லையா!

The Drunken Cobbler
The Drunken Cobbler

செருப்பு தைக்கும் தொழிலாளி வேலை முடிந்து கிடைத்த காசை சாராயம் அருந்தித் தொலைத்துவிட்டு போதையுடன் வீட்டுக்கு வருகிறான். அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவி குழந்தைகளின் முகத்தில் இருக்கும் வலியைப்பாருங்கள்! இது ஏதோ ஒரு குடும்பத்தின் சோகம் அல்ல. அன்றைய ஐரோப்பியாவில் குடியால் அவஸ்தைப்பட்டு அழிந்துபோன குடும்பங்கள் பல என்னும் அவல சரித்திரத்தைப்படம் போட்டுக்காண்பிக்கும் ஓவியம்.

டாஸ்மாக்கின் உபயத்தில் இன்று எத்தனையோ தமிழ்க்குடும்பங்களின் நிலைமை சீரழிந்துகொண்டிருப்பது நிதரிசனம். ஓர் ஆணின் போதைத் தேவைகள் ஒரு சந்ததிக்கே கேடு என்பதும் காலங்காலமாக உலகெங்கும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும் அதை முற்றிலும் அழிக்க முடியாமல் சமூகங்கள் தடுமாறுவதும் எதிர்மறையாக கலைகள் – ஓவியம் மற்றும் இன்றைய சினிமா – மனித மனத்தை உயர்த்துவதை விட்டு அந்த சீரழிவுப்பாதையை கொண்டாடும் விதமாக அமைவதும் மனித இனத்தின் சாபக்கேடு போலும்.

“போறோம்! சரக்கடிக்கிறோம். நீ போய் உன் காதலை தைரியமா அவள்ட்ட சொல்லு!”

நண்பன் ஹீரோவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சிகள் இளைஞர்களுக்கு தைரியம் தரும் விஷயமாக குடிபோதை சித்தரிக்கப்படும் கேவலம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு!

நூறாண்டுகளாக நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம், “சட்டம் போட்டு தண்டனை கொடுத்து சரி செய்யும் விஷயம் இது இல்லை” என்பதுதான். கலைகளின் மூலம் நம்பிக்கையும் ஊக்கமும் அளித்து சமூகத்தை மேலேற்ற வேண்டிய தேவை இன்றுபோல் என்றும் இல்லை.

கல்கியும் ராஜாஜியும் நாமக்கல் கவிஞரும் இன்னும் எவ்வளவோ கலைப்படைப்பாளிகளும் காலங்காலமாக சமூக மேன்மை தரக்கூடிய விஷயங்களைப்பற்றி பேசியும் எழுதியும் பாடுபட்ட நாட்கள் போய் “நேற்று விற்பனை இவ்வளவு கோடிகள் அதிகம்” என்று பண மதிப்பில் சாராய விற்பனை பற்றி பெருமிதமாக பேசும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அதெல்லாம் விடுங்கள், மேலே அந்தச் சித்திரத்தில் நாயின் முக பாவத்தைக் கவனியுங்கள்.

“கேடு கெட்ட மனுஷா! உனக்கெல்லாம் குடும்பம், அழகான மனைவி, குழந்தைகள் ஒரு கேடா?” என்னும் வார்த்தைகள் சத்தமின்றி உங்கள் காதுகளில் கேட்கவில்லை?

Jean Baptiste Geruze ஒரு அபார கலைஞர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இவரைப்போன்ற கலைஞர்கள் அளிக்கும் சாட்டையடிப் படைப்புகள் மேலோங்கி, வளர்ந்து குடி என்னும் போதை சமாசாரத்தை முற்றிலும் ஒழிக்கும்போதுதான் நம் சுதந்திரம் முழுமை அடையும்!

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com