ஒரு தவமாக இந்த ஆண்டு மலரைத் தயாரித்திருக்கிறார்

ஒரு தவமாக இந்த ஆண்டு மலரைத் தயாரித்திருக்கிறார்
Published on

பூபாளம் ஆண்டு மலர் 2022

சிற்றிதழ், இலக்கிய இதழ், ஜனரஞ்சக இதழ், பிரபலமான இதழ் என்றெல்லாம் பத்திரிக்கைகளைக் குறிப்பிடுகிறோம், தரம் பிரிக்கிறோம். ஆனால். “எந்தப் பத்திரிக்கை கீழே வைக்க முடியாமல் படிக்க வைக்கிறதோ அதுதான் வாசகன் விரும்பும் பத்திரிக்கை.”

ஒரு வாசகன் பிரபலமானவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவன் ரசனை ஆழமானது. அதுதான் அந்தப் பத்திரிக்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

அந்த விதத்தில் டாக்டர் பாஸ்கரன் அவர்களை சிறப்பு ஆசிரியராகக் கொண்டு வெளி வந்திருக்கும் "பூபாளம் ஆண்டு மலர் " வெகு சுவாரசியமான இதழ். யானையை பானைக்குள் அடைத்தாற் போல் எத்தனை விஷயங்கள் ! எவ்வளவு எழுத்தாளர்கள் !!

அட்டையைச் சேர்த்து 103 பக்கங்களில் எட்டு சிறுகதைகள்,எட்டு கவிதைகள், இரண்டு கட்டுரைகள்,ஏழு சிறப்புக் கட்டுரைகள்,ஏழு அப்பா கட்டுரைகள்,தவிர சிறப்பு ஆசிரியரின் சந்திப்புக் கட்டுரை.இவை போக வரப் பெற்றோம்,படித்ததில் பிடித்தது, அழுத்தமான எழுத்தாளர்களின் சில நச் வரிகள்.....ஆசிரியர் கிரீடத்தில் வியக்க வைக்கிறார் நண்பர் பாஸ்கரன்.

எழுதியவர்கள் அத்தனை பேரும் இவரது நண்பர்கள்,இவர் மேல் பிரியம் கொண்டவர்கள், இவர் கேட்டால் மறுக்காதவர்கள்.

ஆனால், இந்த தொகுப்பு மின்னுவதற்கு இவை மட்டும் காரணங்கள் அல்ல.

இயல்பிலேயே திரு பாஸ்கரன் ரசனை மிகுந்தவர். வாசிப்பில் அசுரன்.தேடித் தேடிப் படிப்பவர். அதனாலேயே ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் தன்னை ஒரு ரசனை மிகுந்த வாசகன் இடத்தில் பொருத்தி ஒரு தவமாக இந்த ஆண்டு மலரைத் தயாரித்திருக்கிறார்.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து......" சரியான நபர்களிடம் சரியான விஷயஙளை வாங்கிச் சேர்த்திருக்கிறார்.

டாக்டர் முருகு சுந்தரம் கதையில் ஒரு மகன் சொல்கிறான் , "அப்பா.... பார்பர் சர்ஜன் ஆகலாம்,ஆனால் ஒரு சர்ஜன் பார்பர் ஆக முடியாது " என்று.

பூபாளம் ஆண்டு மலரைப் படித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றியது,

" சீட் கிடைத்துப் படித்தால் யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆகலாம், ஆனால், டாக்டர் பாஸ்கரனைப் போல் எந்த டாக்டர் வேண்டுமானாலும் எழுத்தாளராவதோ சிறப்பு ஆசிரியராவதோ கொஞ்சம் சிரமம் தான் !!!!

பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியர் ஆர்.கே. ராமனாதன், ஆண்டு மலரின் சிறப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழு அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்கள்.

 ( தொடர்புக்கு - 9444836005, ஆண்டு சந்தா ரூ300/-

G Pay - 9003185480 )

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com