ஒரு நாவல்  படமாகும்போது  நிகழும்  மாற்றங்கள்  அவருக்குத் தெரியும்.

ஒரு நாவல் படமாகும்போது நிகழும் மாற்றங்கள் அவருக்குத் தெரியும்.

Published on

அமரர் கல்கி  இன்று   இருந்திருந்தால்  ‘பொன்னியின்  செல்வன்’  திரைப்படத்தை ரசித்திருப்பாரா?

- மகேஸ்வரி, சேலம்

! திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் வசனங்களும்  எழுதியிருக்கும் கல்கி ஒரு  திரைப்படத் தயாரிப்பின்  அனைத்து நுணுக்கங்களும் அறிந்தவர்  என்பது   பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய  திரைப்பட  விமர்சனங்களிலிருந்து புரிந்துகொள்ள  முடிகிறது. ஒரு நாவல்  படமாகும்போது  நிகழும்  மாற்றங்கள்  அவருக்குத் தெரியும். அதனால் திரைக்கதை அமைப்பிலுலள்ள தவறுகளை விமர்சிதிருப்பார் இரண்டாம் பாகத்துக்கு ஆலோசனைகளைக் கூட  வழங்கியிருப்பார். 

“திராவிட மாடலை உருவாக்கியதே அ.தி.மு.க. தான்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி...

- கி. சோழ ராஜன், புதுச்சேரி 

! அவர்கள் ஆட்சிக் காலத்தில் அப்படி எதுவும் அவர்கள் அறிவிக்கவில்லையே. தாங்கள் உருவாக்கியது  “அம்மா மாடல்” அதைத்தான் திமுக காப்பியடிக்கிறது  என்றாவது சொல்லியிருக்கலாம். 

P.F.I. "..இயக்கத்தை,..தீவிரவாத இயக்கம் என்று அரசு தடை செய்தால்!!!.....  சிலர்..R.S.S...   இயக்கமும் தீவிரவாத இயக்கம் தானே!!..என்று பேசுவது பற்றி?...

- கே, ஆர் ஜி ஶ்ரீராமன், பெங்களூரு

! தீவிர வாதத்தை ஊக்குவிக்கும் எந்த இயக்கமும் தடை செய்யப்பட வேண்டியவைதான்.  ஆர்.எஸ்எஸ் இயக்கம் ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

ஊதுவத்தி எரியும் பொழுது , வெளி வரும் புகை போடும் டிசைன் ?

- மஞ்சு வாசுதேவன் பெங்களூரு

! கவிஞனுக்கும் கலைஞனுக்கும் அவன் கற்பனையில்  கண்ட உருவம் தெரியும்...  பக்தியில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு அதில் கடவுள் உருவம் தெரியும்...  மணமில்லாமல் அதிகப்  புகை வருகிறதே, நல்ல பிராண்ட்  இல்லையோ என்ற சந்தேம்  இல்லத்தரசிக்கு வரும்...

இங்கிலாந்து மன்னருக்குச் சம்பளம் உண்டா?

- வண்ணை கணேசன்,  சென்னை

! 73 வயதில் வேலை கிடைத்த இங்கிலாந்து அரசர்  சார்லஸுக்கு  குடும்ப சொத்துக்களின் வருமானத்தில் 25 சதவீதமும்,   அவரது பணிகளுக்காக ஊதியமும்  உண்டு  இதன் மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன் 500 மில்லியன் டாலர்கள்... இதைத் தவிர ‘பிரிவிபர்ஸ்’ என்று அழைக்கப்படும். அரசின் உதவித்தொகை ஆண்டுக்கு 107 மில்லியன்  அமெரிக்க டாலர்கள்.  இதற்கு வருமான வரி கிடையாது. தங்கும் இடமான பக்கிங்ஹாம் அரண்மனை அரசால்  பராமரிக்கப்படுகிறது. 

 டி.வி. விவாதங்கள் பற்றி உங்கள் கருத்து?

- சண்முக சுந்தரம், நெல்லை.

! அவை விவாதங்களாக  இல்லாததால் பார்க்க முடியவில்லை. பல நேரங்களில் நெறியாளர் ஒரு கட்சியின் சார்பு நிலை எடுக்கிறார். விவாதிப்பவர்களும் தலைப்பைத் தாண்டிய விஷயங்களைத்தான்  அதிகம் பேசுகிறார்கள். பா.ஜ.க., அ.தி.மு.க., கட்சிகளின்  செய்தித்  தொடர்பாளர்கள்  கலந்துகொள்வதில்லை. அவர்கள் சார்பில் வலதுசாரிகள், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பங்கு கொள்பவர்கள் சண்டையிடுவதிலும்  தனி மனித் தாக்குதல்களில் ஈடுபட்டு நேரத்தை வீண் செய்வதால்  நான் பார்ப்பதில்லை. 

இனி பொன்னியின் செல்வன்  நாவலைப்  படிப்பவர்களின் மனதில் அந்த கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் முகம்தானே கண்முன்னே தோன்றும்? 

- ஹரிகோபல்,  புது டெல்லி

! இது தவிர்க்க இயலாத  ஒரு  விஷயம்.  இப்போதே,  திரிஷா, ஐஸ்வர்யா  அட்டைப்படங்களுடன்  பொன்னியின்  செல்வன் பதிப்புகள் வெளியாகிவிட்டதே.


 சமீபத்திய ' உச்ச பட்ச அரசியல் அநாகரீகம் '?

- கண்மணி சேகர், திருச்சி

! முன்னாள்  அமைச்சர் ஆ. ராசாவின் பேச்சும் அதற்கு  எழுந்திருக்கும் எதிர்வினைகளும்.

“அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர்”  என்று  பண்ருட்டி  ராமச்சந்திரனை ஒ.பி.எஸ்.  நியமித்திருக்கிறாரே?

- ரவிச்சந்திரன், ராஜபாளையம்

! “அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., இருக்கிறாரா?” என்ற  கேள்விக்குத் தெளிவான விடை கிடைக்காத நேரத்தில் அவர் கட்சிப் பொறுப்புகளுக்கு நியமனங்களை அறிவிக்கிறார். முதலில் ஆள தேசம் கிடைக்கட்டும். அப்புறம் மந்திரி பிரதானிகளை நியமிக்கலாம்.

கர்நாடக ஊழலில் முன்னாள் முதல்வர் எடப்பாடியின் உறவினரும்  சிக்கியிருக்கிறாராமே?

- வரதராஜன், திண்டுக்கல்

! ‘சம்பந்தி’ என்பவர்  உறவினர் இல்லை என்று அவர் சொல்லியிருப்பது நினைவிருக்கிறதா?

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com