நடிப்பில் நம்மைக் குலைநடுங்க வைக்கிறார்

நடிப்பில் நம்மைக் குலைநடுங்க வைக்கிறார்
Published on

‘நானே வருவேன்’ சினிமா விமர்சனம்

து என்னமோ தெரியவில்லை. இரட்டைப் பிறவிகள் கதை என்றாலே ஒருவன் நல்லவனாகவும் மற்றவன் கெட்டவனாகவும் இருப்பதே திரைப்பட நியதி என்றாகிவிட்டது.

இதிலும் இரட்டை வேடம் ஏற்றிருக்கும் இரு தனுஷ்களில் ஒருவர் நல்லவர். இன்னொருவர் கெட்டவர். நல்ல தனுஷின் மகளின் உடம்பில் கெட்ட தனுஷின் இறந்துபோன மகனின் ஆவி குடியேறி அட்டகாசம் செய்கிறது. நல்ல தனுஷையே கொலை ஒன்றைச் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறது. அப்படிச் செய்தால்தான் அவரது மகளின் உடம்பில் இருந்து வெளியேறுவதாகவும் நிபந்தனை விதிக்கிறது.

நல்ல தனுஷ் என்ன செய்கிறார் என்பதுதான் மிச்சக் கதை. அதைச் சொன்னால் சுவாரசியம் போய்விடும். எனவே கடந்துசெல்வோம்.

நடிப்பு அசுரன் தனுஷின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதகளப் படுத்தியிருக்கிறார். பாசமுள்ள, சாதாரணத் தந்தையாகவும், கண்ணியமான குடும்பத் தலைவனாகவும் இயல்பான நடிப்பு.

அதே சமயம் பரட்டைத் தலையோடு, விபரீதமான புன்னகையோடு சைக்கோவாக வரும் கெட்ட தனுஷ் நடிப்பில் நம்மைக் குலைநடுங்க வைக்கிறார். அவரது வாய் பேசவியலாத மனைவியும் அவரின் இரட்டைக் குழந்தைகளும் அடைகின்ற எல்லையற்ற பீதியுணர்வு, படம் பார்ப்பவர்களுக்கும் அச்சுப் பிசகாமல் கடத்தப்பட்டுவிடுகிறது.

நல்ல தனுஷின் மகள், ஆவியால் பீடிக்கப்பட்டவுடன் படிப்படியாக அவருக்குள் நிகழும் மாற்றங்கள் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றன. வழக்கமான பேய்ப் படங்களில், பேய்களுக்கே என இருக்கும் சாமுத்ரிகா லட்சணங்களான தலைவிரிகோலம், வெள்ளை விழி போன்ற க்ளிஷேக்கள் இல்லை. ஆனாலும் அமானுட உணர்வைக் கச்சிதமாகப் புகட்டிவிடுகிறார்கள்.

சிறு வயது கெட்ட தனுஷ் ஆக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு மிரட்டுகிறது.

இதுவரை தமிழ்ப் படங்களில் சொல்லப்படாத ‘அமுக்கான்’ பற்றியும் லேசாகச் சொல்கிறார்கள். (அதென்ன அமுக்கான் என்கிறீர்களா? தூங்கும்போது சில சமயங்களில் நம்மை யாரோ அழுத்துவது போல இருக்கும்; நமக்கு நினைவு இருக்கும். ஆனால் கை கால்களை அசைக்க முடியாது; பேச முடியாது. இந்த நிலை சில நிமிடங்கள் நீடிக்கும். அப்புறம் சுய உணர்வு திரும்பிவிடும். அதுதான் அமுக்கான்.)

மிகச் சில நிகழ்விடங்களிலேயே படம் முழுவதும் பயணிக்கிறது.

பொதுவாகப் பேயோட்டிகள் கொஞ்சம் வயதானவர்களாக இருப்பார்கள். இதில் குழுவாக வரும் பேய் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவர்களாக இருப்பது வித்தியாசமாகத் தெரிகிறது. ஆனால், அவர்களின் கண்டுபிடிப்புகளெல்லாம் காதில் பூச் சுற்றும் கற்பனைச் சங்கதிகளாகவே இருப்பதென்னவோ உண்மை.

மனோதத்துவ நிபுணராக வரும் பிரபு தம்மை ஒரு ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்றும் சொல்லிக்கொள்கிறார். இரு துறைகள் மூலமும் அவரால் ஆவியின் சேட்டைகளை ஒடுக்கத்தான் முடிவதில்லை.

பேய்ப் படமா அல்லது கிரைம் த்ரில்லரா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா எனத் தீர்மானிக்க இயலாத திரைக்கதை. ஆனாலும் புதுமையாகவே இருக்கிறது.

பின்னணி இசை ஓக்கே. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை.

“ட்வின் இன்ஸ்டிங்க்ட் மாதிரி சித்தப்பா இன்ஸ்ட்டிங்ட்டா?” என்பன போன்ற தேடிப் பிடித்து ரசிக்க சில வசனங்களும் உண்டு. யோகி பாபு சில காட்சிகளில் வருகிறார்; ஆனால் சிரிப்புத்தான் வருவதில்லை.

இரண்டாம் பாகம் வருவதற்கான சாத்தியக் கூறோடு படம் முடிகிறது.

மொத்தத்தில், நானே வருவேன் = ஓரளவு நன்றாகவே வந்திருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com