
தமிழ்படைப்பிலக்கியத்தில் தான்வாழ்ந்த , சார்ந்த மண்ணின் மணத்தை வட்டார மொழியின் வளத்தை தன் படைப்புகளில் காட்டியவர்கள் வெகுசிலரே. அவர்களின்முன்னோடி கி.ராகி. ராஜநாராயணன்.
பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன் அவர்கள் பேச்சுத்தமிழில் மண் மணமிக்க சிறுகதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க அந்த மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன. கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி. ராஜநாராயணனின் செழுமையான படைப்புகளால் அந்த நிலமும் மொழியும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயிற்று. அதன் விளைவாக இன்று அவரது நடையில் பலர் எழுதுகின்றனர்.
கி.ராஜநாராயணன் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடி.. கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1991-ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்
இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர் கி.ரா. கடந்த ஆண்டு(17/05/2021). அவர் மறைந்த போது எழுத்தாளர் கி. ராஜநாராயணன் (கி.ரா.) அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அண்மையில் அதே வளாகத்தில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு அவன் வாழ்ந்து மறைந்த மண்ணிலேயே சிலை அமைத்து கெளரவித்திருக்கும் தமிழ் வளர்ச்சித்துறையும் முதல்வர் ஸ்டாலினும் பராட்டுக்குரியவர்கள்.