

‘புகை பிடித்தல் (Smoking) உடல் நலத்திற்கு கேடு. புகை நமக்கு பகை’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் திரும்பிய திசையெல்லாம் தென்படுகின்றன. ஆனாலும் புகைபிடிக்கும் பழக்கம் தலைமுறைகள் கடந்து இன்றளவும் நம் மக்களிடையே தொடர்கிறது.
உலகளாவிய ஆய்வுகளின்படி, புகை பிடிப்போர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா (70.5 சதவீதம்) முதலிடத்திலும், மியான்மர் (70.2 சதவீதம்) 2வது இடத்திலும், பங்களாதேஷ் (60.6 சதவீதம்) 3வது இடத்திலும், சீனா 4வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் 42 சதவீதம் ஆண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
ஆண்கள் அதிகளவில் புகை பிடிக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அடைப்பு நோய், மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மலட்டுத்தன்மை, இதயநோய்கள், அதிகப் பசி, எடை கூடுவது, நீரிழிவுநோய் போன்ற அனைத்து உடல்பாதிப்புகளுக்கும் புகை பிடித்தல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இப்பழக்கம் சுவாசப்பாதையில் நச்சுத்தன்மையை உருவாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. புகை பிடிப்பதை கைவிடுவதால் மனிதர்களின் சுவாசம் இலகுவாகும். உணவில் சுவை கூட அதிகமாகத் தெரியும்.
எதிர்காலத்தில் பிரிட்டனை புகைப்பிடித்தல் இல்லாத ஒரு நாடாக மாற்ற பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது. இதனை விரைந்து அடையும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, ஜனவரி 1, 2009-க்குப் பிறகு பிறந்த எவரும் இனி புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம், வளரும் தலைமுறையினர் சட்டப்பூர்வமாக புகையிலை பொருட்களை அணுகும் சூழல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வருடம் உயர்த்தப்படவுள்ளது.
இந்த நடைமுறையினால், 2009-க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் சிகரெட் போன்ற புகையிலைச் சார்ந்த எந்த தயாரிப்புகளையும் கடைகளிலிருந்து இனி சட்டப்பூர்வமாக வாங்க முடியாது.
புகைபிடிப்பவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படக்கூடிய ஏற்படுவதற்கான வாய்ப்பு 2 முதல் 4 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. சிகரெட் புகையில் உள்ள நச்சு இரசாயனங்கள் எரிச்சலூட்டுவதால் கண்கள் வறண்டு போகின்றன.
எனவே, புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து கண் பரிசோதனைகளை செய்துக்கொள்வது நல்லது. மேலும், இது கண்சவ்வு சிவத்தல், கண்சவ்வு இல்லாத நரம்பு முனைகளின் தூண்டுதலால் ஏற்படும் அசௌகரியம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
புகைபிடிப்பதால் கண்களில் நீரிழிவு ரெட்டினோபதி, பார்வை நரம்பு சேதம், விழித்திரை இஸ்கெமியா, விழி வெண்படல அழற்சி, புகையிலை ஆல்கஹால், அம்ப்லியோபியா ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்து புகைபிடிப்பவராக இருப்பவர்கள் புகைபிடிப்பதை நிறுத்த முனையும் போது, தங்கள் கண் ஆரோக்கியத்தின் முன்னுரிமையை முழுமையாக உணர வேண்டும்.
இந்தியாவில் உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பின்படி, தற்போது பெரியவர்களில் 28.6% விழுக்காட்டு மக்கள் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகிறார்கள். இதில் ஆண்கள் 42.4%ம், பெண்கள் 14.2%அடங்குவர். தினசரி புகையிலை பயன்படுத்துபவர்களில் 60.2% பேர் விழித்தெழுந்த அரை மணி நேரத்திற்குள் அதை உட்கொள்கிறார்கள் என்னும் செய்தி அதிர்ச்சியூட்டுகிறது.
மேலும், செயலற்ற புகைப்பிடிப்பவர்கள் இதுபோன்ற கண் நோய்களை ஈர்ப்பதில் இருந்து விலக்கப்படவில்லை. செயலற்ற புகைப்பிடிப்பவர்கள் என்பவர்கள் புகைபிடிக்காதவர்கள். ஆனால் சிகரெட்/புகையிலை புகைக்கு அருகில் இருப்பவர்கள்.
புகைப்பிடிப்பதை நிறுத்தி 20வது நிமிடத்தில் இருந்தே அதன் பலன்களை ஒருவர் உணரமுடியும். புகை பிடிப்பதை கைவிடுவதால் நமக்கு 50 நோய்களின் அபாயம் குறைகிறது. புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள சிலர், சூயிங்கம், சிகரெட், இ-சிகரெட் போன்ற ஏதாவது ஒன்றை வாயில் வைத்திருக்க வேண்டும் என்ற உந்துதலுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். நொறுக்குத் தீனி உண்டும் அந்த தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். இதனாலேயே நிக்கோட்டினுக்கு பதிலாக நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகின்றனர்.
இதைத் தவிர்க்க, ஆரோக்கியமான மாற்றுகள் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். சமச்சீரான உணவு உடலுக்கு அதிக ஊட்டத்தைத் தருவதுடன் பசி மற்றும் உடல் திறனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
புகைபிடித்தலின் பல தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைப் பற்றி பலர் இன்னும் தீவிரமாக அறியவில்லை. இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. பள்ளிகளும்,பெற்றோர்களும், சமூக ஊடகங்களும் இளைஞர்கடையே புகைப்ப்பிடித்தல் சார்ந்த ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இனியாவது முனைப்புக் காட்ட வேண்டும்.