ஏழைகளின் இதய தெய்வம்!

ஏழைகளின் இதய தெய்வம்!
Published on

எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் குண்டுராவ். அவர், நீண்ட நாட்களாக தமது வீட்டுக்கு வரும்படி எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டிருந்தார். அந்த வருடம் குண்டுராவின் பிறந்த நாளுக்கு அவரது வீட்டுக்குச் செல்வது என்று முடிவு செய்து, தனது மனைவி மற்றும் தமது சகோதரர் மகள் லதா ஆகியோருடன் பெங்ளூருவில் உள்ள குண்டுராவின் வீட்டுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். கூடவே அவரது உதவியாளர்களும் வேறு ஒரு வண்டியில் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை குண்டுராவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு, மறுநாள் காலை உடன் வந்தவர்களுடன் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அது கோடைக்காலம் என்பதால். வெயில் சுட்டெரித்தது. எம்.ஜி.ஆரின் கார் ஓசூர் அருகே வந்துகொண்டிருந்தது. வழியில் சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் அவரோடு பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் அவர்களின் தலையில் புல்லுக் கட்டை வைத்துக்கொண்டு, காலில் செருப்பு கூட இல்லாமல் தவித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

தொலைவில் வரும்போதே எம்.ஜி.ஆரின் பார்வையில் அவர்கள் இருவரும் பட்டு விட்டனர். அவர்களின் அருகில் சென்றதும் டிரைவரிடம் சொல்லி காரை நிறுத்தத் சொன்னார் எம்.ஜி.ஆர். கூட வந்த உதவியாளரை அழைத்து, அந்த மூதாட்டி பற்றியும் அந்த சிறுமி பற்றியும் விசாரிக்கச் சொன்னார். ‘தொலைவில் உள்ள ஒரு இடத்திலிருந்து தாங்கள் புல்லை அறுத்துக் கொண்டு வருவதாகவும், அந்தப் புல்லுக் கட்டை விற்றால் கட்டுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும் என்றும், தரை கொதிப்பதால் காலை கீழே வைக்க முடியாமல் நின்று நின்று செல்வதாகவும்’ தெரிய வந்தது.

இதைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சற்று நேரம் வருத்தம் தோய்ந்த யோசனையோடு காட்சி தந்தது. அதைத் தொடர்ந்து, தனது மனைவி ஜானகி அம்மையார் மற்றும் சகோதரர் மகள் லதா ஆகியோரின் கால்களில் இருந்த செருப்பைக் கழற்றச் சொன்னார். அந்தக் காலணிகளோடு, தம்மிடம் இருந்த ஒரு பெரும் தொகை பணத்தையும் அந்த உதவியாளரிடம் கொடுத்து, ‘அந்தச் செருப்புகளை அவர்கள் உடனே அவர்களின் கால்களில் அணிந்து கொள்ள வேண்டும்’ என்றும் சொல்லி அனுப்பினார்.

அதைப் பெற்றுக்கொண்ட அந்த மூதாட்டிக்கும் சிறுமிக்கும் ஒன்றும் புரியவில்லை. அதோடு, அதைக் கொடுத்து அனுப்பியவர் யார் என்பதை அறியவும் அவர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது காரின் கறுப்புக் கண்ணாடியை கீழே இறக்கி விட்டு, அந்த மூதாட்டிக்கு வணக்கம் தெரிவித்தார். மூதாட்டியின் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. எம்.ஜி.ஆரைக் கண்ட சந்தோஷத்தில் அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சந்தோஷத்தில் அவருக்கு நன்றி சொல்லக் கூட மறந்துவிட்டு, அவரையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் சந்தோஷம் மறைவதற்குள்ளேயே அந்தப் பொன்மனச் செம்மலின் கார் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com