
கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
வைணவ ஆச்சார்யர்களில் முக்கியமானவரான ஸ்ரீ ராமனுஜர் வாழ்க்கை வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவரது பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக கலைஞரின் கைவண்ணத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தொடர்தான் ராமானுஜர். கலைஞர், எழுதியது என்பதால் இந்தத் தொடர் பரபரப்பாக பேசப்பட்டது.
5.4.2015 கல்கி இதழில் ராமானுஜர் தொலைக்காட்சித் தொடர் குறித்து கலைஞரை பேட்டி கண்டார் பத்திரிகையாளர் பிரியன். “மதத்திலே புரட்சி செய்த மகான்” என்ற தலைப்பில் வெளியான அந்த நெடிய பேட்டியில் பல அரிய கருத்துக்களை நெகிழ்ச்சியோடும், ஆர்வத்துடனும் பகிர்ந்துகொண்டார் கலைஞர்.
அதன் இறுதிப் பகுதி இதோ:
இராமானுஜர் வரலாறு எந்த வகையில் இந்தக் கால கட்டத்துக்குத் தேவையாக இருப்பதாக உணர்கிறீர்கள்?
“வைணவ விடிவெள்ளி” என்று கொண்டாடப்படுபவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017ம் வருடம் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். 120 வருடங்கள் வாழ்ந்து அதே மாதம், அதே நட்சத்திரத்தில் மறைந்தவர். வைணவர்களின் வாழ்வில் இறுதி லட்சியமான மோட்சத்தை அடைய விசிஷ்டாத்வைத தத்துவத்தை அருளிச் செய்தவர். “குலங்களில் ஏற்றத் தாழ்வு இல்லை; கோயிலுக்குள்ளே சென்று வழிபடவும், மோட்சத்தை அடையவும் வழிகாட்டும் மூல மந்திரத்தைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு” என்று முழங்கி, அதன்படி தன் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டவர்.
பா.ஜ.க. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளவாறு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமைந்திட வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படுவார்கள் என்றுதான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றாலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், இந்தியாவில் மதச் சார்பின்மை கொள்கையினைக் காப்பாற்றவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும்; திராவிட முன்னேற்றக் கழகம் களத்திலே நின்று போராடத் தயங்கியதே இல்லை. 16வது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்று, பொறுப்புக்கு வந்தவுடன், தொடக்கத்தில் நரேந்திர மோடி அவர்கள்
தலைமையில் நாம் வரவேற்கத்தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்கள். வரவேற்க முடியாத சில திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்த நேரத்தில், நாம் எடுத்துச் சொன்ன கருத்துகளை ஏற்று, அந்தத் திட்டங்களை திரும்பப் பெற்றார்கள். ஆனால், அண்மைக் காலமாக மத்திய ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களில் சிலர் மதச் சார்பின்மைக் கொள்கையை கைவிட்டது மட்டுமன்றி, இந்தியாவை ‘இந்து ராஷ்டிர’மாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் - அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். இத்தகைய வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தைக் கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும்- நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்துவிடும் என்பதால், இந்த நேரத்தில் மதத்திலே புரட்சி செய்த - மனிதாபிமானம் மிக்க ஆத்திகரான ‘இராமானுஜர்’ பற்றி தொலைக்காட்சியிலே அறிமுகப்படுத்துவது இந்தக் காலக் கட்டத்துக்கு மிகவும் தேவை; அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் என்று நான் உணர்ந்தேன்.”
ஸ்ரீ இராமானுஜரைப் பற்றி உங்களிடம் பத்து, பதினைந்து புத்தகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். யாருடைய புத்தகம் இராமானுஜரைப் பற்றிய முழுமையான பார்வையைக் கொண்டிருக்கிறது?
இராமானுஜரைப் பற்றி பல புத்தகங்கள் என்னிடம் இருப்பது உண்மைதான்! நீண்ட நாட்களுக்கு முன்பு நான் படித்திருந்த அந்தப் புத்தகங்களை தற்போது மீண்டும் ஒருமுறை நினைவுக்காக கடந்த சில நாட்களாகப் படித்து வருகிறேன். ‘இராமானுஜர்’ பற்றி என்னிடம் இருக்கும் புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால், ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியிலே எழுதி, தமிழில் பன்மொழிப் புலவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எழுதியுள்ள “ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு” - கவிஞர் வாலி அவர்கள் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட “ராமானுஜ காவியம்” - டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய “ஸ்ரீராமானுஜர்” - அருமை நண்பர், அருளாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மதிப்புரை எழுதி, மூத்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதியுள்ள “மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜர்’ - பி.ஸ்ரீ. அவர்கள் தீட்டிய “ஸ்ரீ ராமானுஜர்” - ஆர்.வீ.ஸ்வாமி அவர்கள் எழுதிய “இராமானுச வைபவம்” - கங்கா ராமமூர்த்தி அவர்கள் எழுதிய “ஸ்ரீராமானுஜர் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்” - குளித்தலை ஆசிரியர் ஆர். கிருஷ்ணஸ்வாமி அவர்கள் எழுதிய “உய்விக்க வந்த உடையவர்” - ஜெகாதா எழுதிய “ஸ்ரீராமானுஜர் வாழ்வும் தொண்டும்” என்ற நூல்கள் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளரும், இராமானுஜரை பல்வேறு கோணங்களில் வடித்தெடுத்து தந்திருக்கிறார்கள். இதிலே யாருடைய புத்தகம் இராமானுஜரை பற்றிய முழுமையான
பார்வையைக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது சரியல்ல.”
நாத்திகப் பிரச்சாரத்துக்காக நீங்கள் பல திரைப்படங்களில் கதை வசனம் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் எழுதப் போகும் இராமானுஜர் தொடரால் பாதிக்கப்பட்டு யாரேனும் ஒரு நாத்திகர் ஆத்திகராக மாறிவிட்டால்?
“என்னுடைய கதை வசனங்களை - என்னுடைய பேச்சை - எனது கருத்துகளைக் கேட்டு, ஆத்திகர்கள் நாத்திகர்களான வரலாறுதான் உண்டு. அதைப்போலவே இந்தத் தொடரைப் பார்க்கும் ஆத்திகர்கள், நாத்திகர்களாக மாறத்தான் வாய்ப்பு உண்டே தவிர, நாத்திகர் யாரும் ஆத்திகர்களாகி விட மாட்டார்கள்.”
அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதுதான் உங்கள் கொள்கை. அந்த ஒருவன் யார்?
“அந்த ‘ஒருவன்’தான் ‘இயற்கை’. பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று இந்தக் கருத்தைச் சொல்வதற்கு முன்பே திருமூலர் தெரிவித்த கருத்துத்தான் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதாகும். தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி’ என்றெல்லாம் மிகவும் கடுமையாகச் சொன்னபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய மென்மையான பாணியில் கூறியதுதான் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதாகும்.”
இராமானுஜரைத் தவிர உங்கள் மனத்தைக் கவர்ந்த வேறு யாரேனும் ஆச்சார்யார்களும், மகாபுருஷர்களும் இருக்கிறார்களா?
“இராமானுஜரைத் தவிர, அவரைப் போலவே என் மனம் கவர்ந்தவர்கள் என் அருந்தமிழ் வளரப் பாடுபட்ட மாணிக்கவாசகரும், வள்ளலாரும், சேக்கிழாரும் ஆவர்!”
5.4.2015 கல்கி இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி