“அணையா விளக்கு” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இங்கே: | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
“அணையா விளக்கு” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இங்கே: | கலைஞர் 100

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.தமிழக வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கியவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி.

16.08.2018 அன்று அவர் மறைந்தபோது, அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள். 19.08.2018 இதழ் கல்கியில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்திரிகையாளர் இரா. சரவணன் எழுதிய ஒரு அட்டைப் பட அஞ்சலிக் கட்டுரை வெளியானது.

“அணையா விளக்கு” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இங்கே:

இந்திரா காந்திக்கு 9; மூப்பனாருக்கு 20 இறக்கும்போது மட்டுமல்ல, புதைக்கப்படும் கடைசி நிமிடம் வரை போராடி வெற்றி கண்டிருக்கிறார் கலைஞர் மு.கருணாநிதி. “அண்ணா நீ இருக்கும் இடம் தேடி நான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா...” என அண்ணாவின் மறைவின்போது இரங்கற்பா எழுதிய கருணாநிதி, அண்ணா துயிலும் அதே இடத்துக்குப் போக முடியாதபடி இக்கட்டை ஏற்படுத்தியது எடப்பாடி அரசு.

அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு முதலில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனை அனுப்பி, எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசச் சொல்லத்தான் நினைத்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், எடப்பாடி அசைந்து கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பது தெரியவர, தானே நேரில் சென்று எடப்பாடியைச் சந்தித்து அண்ணா சமாதியில் இடம் கேட்கக் கிளம்பினார் ஸ்டாலின்.

“எடப்பாடியைச் சந்திக்க நீங்கள் செல்ல வேண்டாம்... அது மரியாதையாக இருக்காது” என நிர்வாகிகள் பலரும் சொல்ல, “தலைவரின் மரியாதைக்காக எதைச் செய்யவும் நான் தயாராகிவிட்டேன்...” எனச் சொல்லிக் குடும்பத்தினருடன் எடப்பாடியைச் சந்திக்கக் கிளம்பினார் ஸ்டாலின்.

பொதுவாழ்வில் எவரும் நெருங்க முடியாத சாதனைகளைச் செய்த ஒரு மாபெரும் தலைவனுக்கு அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்பதை சூசகமாகச் சொன்னார் எடப்பாடி. தலைவனையும் தந்தையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த துயரத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் மனம் ஒடிந்து சுணங்கி இருப்பார்கள்.

ஆனால், கருணாநிதியின் ஆளுமைமிக்க மகன் என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைக்க காலம் கொடுத்த வரலாற்று வாய்ப்பாக அந்த நிமிடங்களை நினைத்தார் ஸ்டாலின்.

மூத்த வழக்கறிஞர்களான வில்சன், சண்முகசுந்தரம் ஆகியோரை போனில் அழைத்து விவாதித்தார். தி.மு.க.வின் மற்ற வழக்கறிஞர்களையும் முடுக்கி விட்டார். இரவு 9 மணிக்கே பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷிடம் சிறப்பு அனுமதி பெற்று வழக்கைப் பதிவு செய்ய வைத்தார்.

ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஸ்டாலின் அடிக்கடி உள்ளே சென்று வழக்கு விவரங்களை விசாரித்தபடியே இருந்தார். 10.30 மணிவாக்கில் “கருணாநிதியின் உடலை அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும்” என நீதிபதிகள் தீர்ப்பு வாசித்தனர்.

அதுவரை கலங்காமல் நின்ற ஸ்டாலின் சட்டென கண்ணீர் பொங்கி கைகூப்ப, ஒட்டுமொத்த தொண்டர்களும் உணர்ச்சிப்பெருக்கில் தலைவா எனக் கதறத் தொடங்கினார்கள். கனிமொழியும் துரைமுருகனும் ஸ்டாலினின் தோள் பற்றி அந்த நெகிழ்வில் கலக்க, திரண்டிருந்த கூட்டம் நிம்மதியில் நிறைந்தது.

தந்தையை இழந்த தவிப்பு, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம், குடும்பத்தினர் இடையே எவ்விதப் பிணக்கும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை, மத்திய மாநில அரசுகளின் மனநிலையைப் புரிய வேண்டிய அவசியம், அஞ்சலி செலுத்த வருபவர்களைக் கவனிக்க வேண்டிய சூழல், தொண்டர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாதபடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு... என இத்தனை சுமைகள் இருந்தபோதும், கருணாநிதியின் கனவை ஈடேற்றி வைக்க சட்ட ரீதியாகப் போராடி அண்ணா சமாதியில் அனுமதி வாங்கி ‘உண்மையான செயல் தலைவர்’ என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின்.

எப்போதுமே கட்சியின் தலைமையாக இருப்பவர்கள் இறக்கிறபோது, கட்சியில் பிளவுகள் உருவாகும் அபாயம் இருக்கிறது. ஆனால், அண்ணா சமாதியில் கருணாநிதியை அடக்கம் செய்ய சட்டரீதியான உரிமையைப் பெற்று நிரூபித்த விதத்திலேயே, கட்சியைக் கட்டிக் காப்பாற்றும் அத்தனை சாமர்த்தியங்களையும் சாத்தியமாக்கி விட்டார் ஸ்டாலின்.

81 ஆண்டுகாலப் பொது வாழ்வு, 50 ஆண்டுகால அரசியல் தலைமை என இனி வரும் எவரும் எட்ட முடியாத உயரங்களைக் கடந்து காலத்துக்குமான சாதனைத் தலைவனாக நிலைத்துவிட்டார் கருணாநிதி. எழுத்தில், பேச்சில், அரசியலில், சினிமாவில், இலக்கியத்தில் என பன்முகத் தளங்களில் அவர் படைக்காத சாதனைகள் இல்லை.சுதந்திர தினத்தன்று அத்தனை மாநில முதல்வர்களும் கொடியேற்றுகிறார்கள் என்றால், அதற்கான உரிமையைப் போராடிப் பெற்றவர் கருணாநிதி.

சொத்துரிமையில் ஆணுக்குப் பெண் சமம் என கருணாநிதி பிறப்பித்த சட்டம்தான் இன்றைக்கும் பல பெண்களின் வாழ்வைக் காப்பாற்றி வைத்திருக்கிறது. மாநில உரிமை தொடங்கி அடித்தட்டு மக்களின் நலன் வரையிலான அத்தனை கடமைகளையும் நிறைவேற்றி முழுமையான பொதுவாழ்வை நிரூபித்து நிறைந்திருக்கிறார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். பிரிந்தபோது எவ்வளவு பெரிய நிலைகுலைவில் இருந்து தி.மு.க.வைக் காப்பாற்றினாரோ, அதே வலிமையை வைகோ பிரிந்தபோதும் காட்டினார். ஆயிரம் மன வருத்தங்கள் இருந்தாலும் இன்றைக்கு கருணாநிதியின் தலைமாட்டில் நின்று கதறுகிறார் வைகோ. நிரந்தர எதிரி என எவரையுமே கருணாநிதி சம்பாதித்துக் கொண்டது இல்லை. எவ்வளவு நெருக்கடியிலும் அவர் காட்டிய நிதானமும் பொறுமையும், சிற்சில வார்த்தைகளுக்கே டென்ஷனாகிவிடுகிற இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கான அரிச்சுவடிப் பாடம். வீம்புக்கு வீராப்புக் காட்டுபவர்களுக்கு மத்தியில், அரவணைப்பையே ஆயுதமாக்கிய ஆச்சர்யக்காரர் கருணாநிதி.

1971 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்திக்கே வெறும் 9 சீட்டுகளை மட்டும் ஒதுக்கிக் கொடுத்த கருணாநிதி, 1996 தேர்தலில் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனாருக்கு 20 நாடாளுமன்றத் தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார். இந்திரா காந்தியிடமே கறார் காட்டியவர் மூப்பனாருக்குப் பெருந்தன்மை காட்டினார். காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றபடி நடந்துகொள்ளும் பக்குவத்தை கருணாநிதியிடம்தான் அனைத்துக் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழப்போர் நடந்தபோது அதனைத் தடுக்க கருணாநிதி தவறிவிட்டார் என்கிற குற்றச்சாட்டு பெரிதாக உண்டு. ஆனால், “பிரபாகரன் இறந்ததாகத் தொலைக்காட்சிகளில் அவருடைய புகைப்படம் காட்டப்பட்டபோது கருணாநிதி எந்தளவுக்குத் தத்தளித்துப் புலம்பினார் என்பது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சிலருக்கே தெரியும்” என்கிறார்கள் தி.மு.க. தரப்பில்.

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட்டாகி இருந்தபோதே கலைஞர் சொன்னது என்ன? என்று தெரிந்துகொள்ள ஆர்வமா?

நாளை வரை காத்திருங்கள்!

கல்கி 19.08.2018 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com