

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில், 30.01.2026, வெள்ளிக்கிழமை, மாலை 3 மணிக்கு, அமரர் கல்கி அவர்களது நினைவு நாளினை ஒட்டி, கல்கி நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டது. கல்லூரியின் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை இணைந்து இந்தச் சொற்பொழிவினை நடத்தினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரியின் பிரார்த்தனைப் பாடல் பாடப்பட்டன. தொடர்ந்து கல்லூரியின் தமிழ் இலக்கியத்துறை மற்றும் தமிழ்த் துறையின் தலைவர் முனைவர் க.ர.லதா வரவேற்புரை வழங்கினார்.
அவர் தனது பெரியப்பா தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் வீட்டில் கல்கி அவர்களின் நாவல்களைப் படித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். தமிழில் நாவல் இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர் கல்கி என்றே கூறலாம் என்று கல்கியின் நாவல்களைச் சிலாகித்துக் கூறினார்.
அடுத்தபடியாக மூத்தப் பத்திரிகையாளர் மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறங்காவலர் எஸ். சந்திரமௌலி அறிமுக உரை வழங்கினார். கல்கி அவர்கள் தனது பத்திரிகையைத் தொடங்கிய பொழுது பத்திரிகைக்கு மூன்று குறிக்கோள்கள் என்று கூறி, அவை தேசநலன், தேசநலன், மற்றும் தேசநலன் என்று குறிப்பிட்டதன் வாயிலாக, கல்கி அவர்களின் தேசநலனைக் குறித்த அக்கறை நமக்குத் தெரியவருகிறது என்று குறிப்பிட்டார்.
கல்கி பத்திரிகை இன்றும் கல்கி ஆன்லைன் வாயிலாக இணையதளத்தில் பரவலாக படிக்கப்படுவதைக் கூறி, கல்கி பத்திரிகையின் பாரம்பரியம் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருவதை பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சுந்தா எழுதிய கல்கியின் பொன்னியின் புதல்வர் என்ற வாழ்க்கைச் சரித நூல் அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறினார்.
அதன் சுருக்கமான 'பேனா போராளி' என்ற காணொளி அன்று திரையிட போவதைப் பகிர்ந்து கொண்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கடந்த வருடம் பொருளாதாரத்தில் பின் தங்கிய, படிப்பில் சிறந்த மாணவர்களின் கல்விக்காக ரூபாய் 17,24,000 வழங்கியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் வளர்ந்து வரும் கர்நாடக இசை கலைஞர்களுக்குக் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வருடா வருடம் வழங்கும் விருது குறித்தும் தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை அறிமுகப்படுத்தினார். இந்தியன் எக்ஸ்பிரஸில் தனது பத்திரிகையாளர் பணியைத் தொடங்கிய அவர் 2022 இல் தி இந்துவில் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றதைக் கூறினார். தி இந்துவில் நிர்வாக ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின், கல்கி குழுமத்தின் பராக் பராக் என்ற யூடியூப் காணொளித் தொடரில் அவர் எழுதியும் விரிவுரையாளராகவும் பங்கேற்றதைக் குறிப்பிட்டார். அந்தத் தொடருக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பயணித்து அவர் மேற்கொண்ட சாகச பயணங்களைக் குறிப்பிட்டார்.
பின்னர், பேனா போராளி என்கின்ற கல்கி பற்றிய ஆவணப்படம் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது. கல்கி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன், கல்கி என பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியது, கள்வனின் காதலி, தியாக பூமி என நாவல்கள் எழுதும் பயணத்தைத் தொடங்கியது, தமிழில் கலைகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியது, மகாகவி பாரதி அவர்களுக்கு மணிமண்டபம் எழுப்ப செயல்பட்டது, பரபரப்பாக இயங்கிய பொழுதும் குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்கியது என கல்கியின் பல்வேறு பரிமாணங்களை அந்தக் காணொளி அழகாக எடுத்துரைக்கிறது. அனைவரும் காணவேண்டிய அந்த ஆவணப்படம் கல்கி ஆன்லைன் யூடியூப் சானெலில் பேனா போராளி கல்கி என காணக் கிடைக்கிறது.
தொடர்ந்து மாணவிகள் மீனாட்சி, சரண்யா ஆகியோர் கல்கி இயற்றிய பூங்குயில் கூவும் மற்றும் காற்றினிலே வரும் கீதம் பாடல்களை மேடையில் பாடினர். தொடர்ந்து ஸ்வேதா, திலகவதி, மஞ்சு ஆகிய மாணவிகள் கல்கி அவர்களின் கடிதமும் கண்ணீரும் என்ற சிறுகதையை நாடகமாக அரங்கேற்றினர். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை நாடகம் எடுத்துரைத்தது.
தொடர்ந்து மாணவி வித்யா, கல்கியைப் பற்றிய ஒரு சொற்பொழிவினை ஆற்றினார். கல்கி அவர்கள் எழுதிய வரலாற்று புதினங்கள், சிறுகதைகள் என பல்வேறு புத்தகங்கள் பற்றிய புள்ளி விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை விருந்தினர்களை, நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவியர்களைச் சிறப்பு பரிசுடன் கௌரவித்தது.
பின்னர், காலச்சக்கரம் நரசிம்மா இலக்கிய உலகில் கல்கி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்கியின் பொன்னியின் செல்வன் சோழ வரலாற்றின் ஆவணமாக திகழ்வதைக் குறிப்பிட்டார். இராஷ்டிரகூடர்கள் கண்டு அஞ்சிய ஆதித்த கரிகாலன் என்கின்ற மிகப்பெரிய வீரன் கல்கி அவர்களால் நமக்கெல்லாம் அறிமுகமானார் என்று குறிப்பிட்டார்.
கல்கி நாவல் எழுதுவதற்காக இன்றைய ஜி.பி.எஸ் போன்ற வசதிகள் இல்லாத அக்காலங்களில் எவ்வளவு கடினப்பட்டு பயணப்பட்டு இருப்பார் என்று கூறினார். மாணவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் புதினத்தை அவசியம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.
அன்று பொன்னியின் செல்வன் மூலம் கல்கி போட்ட கோடு இன்று பல்வேறு எழுத்தாளர்கள் 'ரோடு' போடுவதற்கு காரணமாக இருந்தது என்று கல்கி சோழ வரலாற்று குறித்த முன்னோடியாக திகழ்ந்ததைக் குறிப்பிட்டார்.
வரலாறு என்பது மிகவும் முக்கியமானது. அதனை எல்லோரும் அறியவேண்டும் என்று குறிப்பிட்டவர், பொன்னியின் செல்வன் படிப்பது என்பது வரலாற்றை அறிவதற்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியாக முனைவர் கெஜலட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பின்புலமாக உழைத்த பல்வேறு பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை என எல்லோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறாக கல்கி அவர்களது நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி, மாணவர்களுக்குக் கல்கியைப் பற்றி நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது.