நம் அறிவை சோதிக்கும் கண்ணுக்குத் தெரியாத குரு! அது யாருடா?

Google
Google
Published on

புராண காலத்தில் குருவின் ஆசிரமத்துக்குச் சென்று பாடம் பயின்றார்கள் மாணவர்கள்; இப்போது ஒவ்வொருவர் வீட்டுக்கும், ஏன் ஒவ்வொரு மாணவருக்கும் வீடுதேடி வந்து கையடக்கமாக அமைந்திருக்கிறார் கூகுள் என்ற குரு! 

அப்படி வந்திருக்கும் கூகுளுக்கு இப்போது 28 வயது! லேரி பேஜ் (LARRY PAGE) மற்றும் செர்கே ப்ரின் (SERGEY BRIN) என்ற கல்லூரி மாணவ நண்பர்களால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பிரமாண்ட தேடு பொறி அமைப்புக்கு வித்திடப்பட்டது.  இணையங்களுக்கு இடையேயான கணிதத் தொடர்பு என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர்கள், அப்போது வரையிலான உலகளாவிய அனைத்து இணைய பக்கங்களையும் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள். 

இதன் பயனாக உருவான தங்களது இணைய தள தேடுபொறிக்கு google.stanford.edu என்று பெயரிட்டார்கள். அதாவது முற்றிலும் கல்வி, நல்லறிவு சார்ந்த, ஆக்கபூர்வமான விஷயங்களை மட்டுமே தொகுத்துக் கொடுப்பது என்ற நல்சிந்தனை! 1997ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் இந்த பெயர் பதிவு செய்யப்பட்டது. பிறகு அடுத்த ஆண்டு, அதே மாதம், தேதியில் இது தனியார் நிறுவனமாக பதிவு பெற்றது. 

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கூகோல் டாட் காம் (googol.com) என்று பெயர் சூட்ட விரும்பினார்கள் நண்பர்கள். இந்தப் பெயருக்கு, 1க்குப் பின்னால் நூறு பூஜ்யங்கள் என்று அர்த்தம்.

ஆனால் ஸிலிகான் வாலி ஆராய்ச்சியாளர் ஒருவர் அதே பெயரை தன் கண்டுபிடிப்பான தேடுபொறிக்கு வைத்திருந்ததால், இவர்கள் வேறு பெயரைத் தேட வேண்டியிருந்தது. ஏக்கத்துடன் கூகோல் என்ற பெயரைத் தட்டச்சு செய்தபோது அது பிழையாகி கூகுள் என்று வந்துவிட்டது! ஒரு ‘O‘ வை விட்டுக் கொடுத்து ’l’க்குப் பிறகு ‘e‘ ஐச் சேர்த்து google என்றானது. 

இந்த கூகுளும் ஸிலிகான் பள்ளத்தாக்கில் இடம் பிடித்தது. இந்தத் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் விரைவில் லட்சக்கணக்கில் பெருகியதால், விளம்பர வருமானமும் எக்கச்சக்கமாக எகிறியது. அதனால் 2003 வாக்கில், சிலிகான் வாலியில் மிகப்பெரிய வணிக வளாகத்தை வாடகைக்குப் பிடித்து அதில் இயங்க ஆரம்பித்தது கூகுள். இதனாலேயே அந்த வளாகம் கூகுள்ப்ளெக்ஸ் (googleplex) என்று பெயர் பெற்றது. நாளடைவில், 2006ம் ஆண்டு, 319 மில்லியன் டாலர்கள் விலை கொடுத்து அந்த வளாகமே சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்:
நாட்டின் முன்னேற்றம் தடைப்படக் காரணம் ஆட்சியாளர்களா? /அதிகாரிகளா?
Google

‘தேடுங்கள், கிடைக்கும்‘ என்ற சொலவடைக்கு மிகச் சரியான உதாரணம் என்று கூகுளைச் சொல்லலாம். உலகத்து மொழிகள் அத்தனையிலும், தேடுபவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் கூகுள் தருகிறது என்றாலும், தேவையில்லாத விஷயங்களையும் தருகிறது என்பதுதான் கொஞ்சம் வருத்தமானது. 

என்னதான் இருந்தாலும், ரத்தமும், சதையும், மாணவனின் முன்னேற்றம் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர்தானே குரு! அவருடைய போதனை, பயிற்சி எல்லாமே மாணவனின் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு உரமாக அமைவதுதானே!

ஆனால் கூகுள் வெறும் எந்திரம்தானே! அதற்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாது; அதுமட்டுமல்ல குறிப்பிட்ட தகவல் முற்றிலும் சரியா இல்லையா என்பதும் தெரியாது. நாம் தேடும் தகவலின் ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டே பத்து, இருபது இணைய பக்கங்களை அதனால் கொடுக்க முடியும். ஆனால் அத்தனை பக்கங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களே சிலசமயம் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கும். எது சரி என்று தேர்ந்தெடுத்துக் கொள்வது நம் சாமர்த்தியம், புத்திசாலித்தனம். கண்ணுக்குத் தெரியாத ஒரு குரு நம் அறிவை இவ்வாறு சோதிக்கிறார்!

இதையும் படியுங்கள்:
குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றலாமா?
Google

Anything under the sun என்பார்கள்; ஆனால் Everything under the sun என்ற எல்லை காண முடியாத வானம் போல பரந்து விரிந்து எல்லா விஷயங்களையும் தன்னுள் அடக்கி, நம் கைக்குள்ளும் அடங்கியிருக்கிறது கூகுள்!

இத்தகைய பிரமாண்டத்துக்கும், அதன் அடுத்தடுத்த சேவை வளர்ச்சிக்கும் தலைமை செயல் நிர்வாகியாகப் பணிபுரிபவர், நம் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கும் தகவல்!

கூகுள் -

மாணவனுக்கு லேசாகக் கோடி காட்டிவிட்டு அவனாகவே தன் தேடலைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நல்ல குரு என்று சொல்லலாமா? 

அல்லது, தகவல்களே சிலசமயம் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்க, எது சரி எது தவறு என்று தேர்ந்தெடுத்துக் கொள்வதை நம்மிடம் விட்டு பார்த்து சோதிக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு குரு என்று சொல்லலாமா?

அன்று ‘மாதா, பிதா, குரு, தெய்வம்‘; இன்றோ ‘மாதா, பிதா, கூகுள், தெய்வம்!‘

அந்தோ பரிதாபம்? அல்லது, பெரும் லாபம்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com