இந்தியாவில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கடவுளுக்கு நிகராக போற்றப்படும் மருத்துவர்கள் மத்தியில் ஏராளமான போலி டாக்டர்களின் ஊடுருவல்கள் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தையும், சுகாதார துறையையும் ஏமாற்றி பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படும் போலி டாக்டர்களை எளிய முறையில் எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
போலி டாக்டர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, போலி டாக்டர்களாக செயல்படுபவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதை தெரிந்துகொள்வோம். அதற்கு சமீபத்திய உதாரணம்தான்,திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்த போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினியின் கதை.
திண்டுக்கல் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதியில் உள்ளது திருவள்ளுவர் சாலை. இங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனைதான் டாக்டர் பவானி கணேசன் மருத்துவமனை. இந்த மருத்துவமனையைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மருத்துவரான டாக்டர் பவானியும் அவரின் கணவர் கணேசனும் தொடங்கியுள்ளார். ஆனால், டாக்டர் தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக டாக்டர் கணேசன், மனைவி பவானியைக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் கணேசன் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், டாக்டர் பவானி கணேசனிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த சித்ரா பிரியதர்ஷினி என்பவர், மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னுடைய உண்மையான பெயரான சித்ரா பிரியதர்ஷினி என்பதை மாற்றி இறந்துபோன டாக்டர் பவானி கணேசனின் பெயரை தன்னுடைய பெயராக மாற்றியுள்ளார்.
அதேபோல், தன்னுடைய பெயருக்கு முன்னாள் டாக்டர் எனச் சேர்த்துப் பல ஆண்டுகளாக அங்குள்ள நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்துவந்துள்ளார். குறிப்பாக, தவறான பழக்கத்தினால் கருவுற்ற இளம் பெண்களுக்குச் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வது, வயதானவர்களுக்குச் சட்டத்திற்கு எதிரான கருனை கொலை செய்வது போன்ற நடவடிக்கையில் ஈட்டுப்பட்டுள்ளார். இவையெல்லாம் ரகசியமாக நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து டாக்டர் பவானி கணேசன் பெயரில் போலி டாக்டராக செயல்பட்டுவந்த சித்ரா பிரியதர்ஷினி, இளம் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய 35 ரூபாய்க்குப் பேரம் பேசும் ஆடியோ வெளியானது. இந்த ஆடியோ மாநில சுகாதாரத் துறையினருக்குக் கிடைக்க, அவர்கள் திண்டுக்கல் மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிவைத்துள்ளனர். உடனடியாக போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, டாக்டர் பவானி கணேசன் பெயரில் செயல்பட்டுவந்த மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அதிகாரிகளிடம் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி. பின்னர், அவரின் ஆவணங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மருத்துவமனைக்கும் சீல் வைத்தனர். தற்போது, அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ளார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி.
300 போலி டாக்டர்கள்!
தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றிவரும் வேளையில், வருடத்தில் பல நாட்கள் இதுபோன்ற போலி டாக்டர்கள் குறித்த செய்திகள் பொதுமக்களை அச்சம்கொள்ளச் செய்கிறது. ஆனால், இந்த அச்சத்தை அதிகாரிக்கும் மேலும் ஒரு விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் செயல்பட்டுவருகின்றனர் என்பதுதான்.
தமிழ்நாட்டில் போலி டாக்டர்களின் செயல்பாடு மற்றும் அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து கல்கி ஆன்லைன் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரியிடம் கேட்டோம். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பொதுவாக எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்கள் கட்டாயம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும். அவர்களுக்கு மருத்துவ கவுன்சில் சார்பில் சான்றிதழுடன் கூடிய மருத்துவ பணி மேற்கொள்வதற்கான அடையாள எண் வழங்கப்படும். இந்த அடையாள எண்ணை ஒவ்வொரு மருத்துவரும் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காகக் கட்டாயம் வைத்திருக்கவேண்டும்.
அதேபோல், மருத்துவர் ஒருவர்த் தனியாக கிளினிக் நடத்துகிறார் என்றால் அதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி வாங்கி இருக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட வாரியாக ஒவ்வொரு மருத்துவருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு இருக்கும்.
மருத்துவம் படித்த ஒருவர்த் தனியாக கிளினிக் அல்லது தனியார் மருத்துவமனை நடத்தினால், அந்த மருத்துவமனை அல்லது கிளினிக்கான சான்றிதழை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கவேண்டும். இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் அணுகி அடுத்த ஐந்தாண்டுகளுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
பொதுமக்கள் யாருக்காவது தங்களுடைய பகுதியில் செயல்படும் மருத்துவர் அல்லது மருத்துவமனை போலியானது என்ற சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்குப் புகாராக அனுப்பலாம். இந்த புகாரின் அடிப்படையில் அந்த சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்கள் கட்டாயம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவுச் செய்திருக்கவேண்டும். அவர்களுக்கு மருத்துவ கவுன்சில் சார்பில் சான்றிதழுடன் கூடிய மருத்துவ பணி மேற்கொள்வதற்கான அடையாள எண் வழங்கப்படும். இந்த அடையாள எண்ணை ஒவ்வொரு மருத்துவரும் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக கட்டாயம் வைத்திருக்கவேண்டும்.
அதிகரித்துவரும் போலி டாக்டர்களின் எண்ணிக்கை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாடு கிளை சார்பில், தமிழ்நாடு காவல் கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாக டாக்டர் டி.செந்தமிழ் பாரி கூறுகிறார். இந்த புகார் மனுவில் தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் செயல்பட்டுவருகிறார்கள் என்ற தரவுகளையும் சேர்த்து வழங்கியுள்ளோம் என்றார்.
மேலும், போலி டாக்டர்களாக செயல்படும் நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனை அளிக்கும் வகையில், தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் என வலியுறுத்தும் டாக்டர் டி.செந்தமிழ் பாரி, நோயாளிகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தோடு பணத்திற்காக போலி டாக்டர்களாக செயல்படும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்டங்கள் மாற்றி அமைக்கவேண்டும் எனவும், ஆனால், தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் போலி டாக்டராக கைது செய்யப்படும் நபர்கள் ஜாமினில் வெளிவரும் வகையில் சட்டம் உள்ளது எனச் சுட்டிக்காட்டுகிறார்.