
சிறு குறு தொழில்களை வளர்ப்பதற்காக, குறுதொழில் வளர்ச்சி மற்றும் மறு நிதி அளித்தல் நிறுவனம், Microunits Development and Refinance Agency Ltd (MUDRA) முத்ரா என்ற வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC - Non Banking Finance Corporation) அரசாங்கத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சிறுகுறு தொழில்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கிறது.
முத்ரா கடன் என்றால் என்ன ?
பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் (Pradhan Mantri Mudra Yojana) வாயிலாக, முத்ரா நிறுவனத்தின் மூலம் , சிறுதொழில், குறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் சார்ந்த கடன் வழங்கும் திட்டம்தான் முத்ரா கடன் திட்டம் . இதில், 10 லட்ச ரூபாய் வரை கடன் வாங்க முடியும்.
முத்ரா கடனில் மூன்று வகைகள் உள்ளன.
1. சிஷூ (Shishu) - ரூபாய். 50,000 வரை
2. கிஷோர் (Kishore) - ரூபாய். 50,000 முதல் 5 லட்சம் வரை
3. தருண்(Tarun) - ரூபாய். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை
முத்ரா கடன் யாருக்குக் கிடைக்கும் ?
இதனை எந்த ஒரு இந்தியரும் பெற முடியும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்த , வருமான வரி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும். தொழில்களின் பட்டியலை, முத்ரா இணையதளத்தில் காணலாம்.
எந்த ஒரு அடமானமும் தேவையில்லை. எனவே, எவரும் இதன் மூலம் பயன் பெற முடியும்.
முத்ரா கடன் வழங்கும் வங்கியினை அணுகி முத்ரா கடன் பெற முடியும்.
வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முத்ரா கடன் சார்ந்த தகவல்களை பின்வரும் சுட்டியில் பெறலாம்.
https://mudra.org.in/Offerings
முத்ரா கடன் பெறுவதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை?
கடவுச் சீட்டு புகைப்படம் (passport size photograph)
அடையாள அட்டை(Identity proof)-ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவை.
முகவரி அட்டை(address proof) - மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது, சமையல் எரிவாயு ரசீது போன்றவை.
விண்ணப்பம் - கடன் சார்ந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
இதர ஆவணங்கள் - எந்த தொழிலுக்காக கடன் வாங்குகிறோமா, அந்தத் தொழில் சார்ந்த இதர ஆவணங்கள்.
இந்த ஆவணங்களை வங்கி சரிபார்த்து, கடன் வழங்கும். இந்தக் கடன்களுக்கு , வட்டி விகிதம் வங்கியால் முடிவு செய்யப்படும். பொதுவாக 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காலவரையறை இருக்கும். இதனை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்தக் கடன்களுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது. ஒருவேளை கடன் வாங்கியவர் கட்ட முடியாவிட்டால், அரசாங்கம் வங்கிக்கு அந்தக் கடனை அடைத்துவிடும்.
அரசாங்கத்தின் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தினை, சுயதொழில் செய்பவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடமானம் இல்லாமல், பெரிய தொகையை தொழிலுக்குத் தரும், அரசாங்கத்தின் அருமையான திட்டம் இது.