கடன் அட்டையிலிருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி?

கடன் அட்டையிலிருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி?

முதலில், ஏன் சிலர் இவ்வாறு கடன் அட்டையிலிருந்து வங்கி கணக்கிற்கு பணத்தினை மாற்றுகின்றனர்?

டன் அட்டையின் மூலமாக, சில வகை பணப் பரிவர்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டது. உதாரணமாக, வீட்டுக் கடன் தவணை, வாகனக் கடன் தவணை, தனிநபர் கடன் தவணை போன்றவை. இதைப் போன்ற காரணங்களுக்காவும், மாதாந்திர பணத் தட்டுப்பாட்டிற்காகவும் மக்கள் தங்கள் கடன் அட்டையிலிருந்து, வங்கிக் கணக்கிற்கு பணத்தினை மாற்ற எண்ணுகின்றனர்.

கடன் அட்டையிலிருந்து வங்கி கணக்கிற்கு எவ்வாறு பணத்தினை மாற்றுவது?

கடன் அட்டையிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தினை மாற்றுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு வழிமுறையிலும், நீங்கள் கட்டணம் என்ற வகையில், அதிக பணத்தினை இழக்க வேண்டியிருக்கும். 50,000 ரூபாய் பணத்தை இத்தகைய வழிமுறையில் எடுத்தால் என்ன செலவாகுமெனப் பார்ப்போம்.

  1. கடன் அட்டையிலிருந்து தானியங்கி பணப்பொறி (ATM) மூலமாக பணத்தினை எடுத்து (cash withdrawal), வங்கிக் கணக்கில் முதலீடு செய்வது; இந்த வழிமுறையில், உதாரணமாக, 3% கட்டணம் எனில், 50,000 * 3/100 = ரூபாய். 1500 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாக, நீங்கள் எடுத்த தேதியிலிருந்து வட்டி செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்களது கடன் அட்டையின் வருடாந்திர வட்டி விகிதம், 25% எனில், ஒரு நாளுக்கான வட்டி விகிதம், 25/365 = 0.068% என தினமும் கணக்கிடப்படும். கடன் அட்டைக்கு பொதுவாக வழங்கப்படும், மாதா மாதம் சலுகைக் காலம் (Grace period) இத்தகைய பணம் எடுத்தலுக்கு கிடையாது. எடுத்த நொடியிலிருந்து வட்டி தொடங்கிவிடும். 6 மாதம் கழித்து கட்டினால் கூட கடன் தொகை 56,000 ரூபாயாக மாறிவிடும். கூட்டு வட்டி எதிர்மறையாக வேலை செய்யும். இது அபாயகரமானது.

    2 . கடன் அட்டையிலிருந்து இவாலட் கணக்கிற்கு மாற்றி, பின்னர் அங்கிருந்து வங்கிக்கு மாற்றுவது ; இந்த முறையிலும், பணத்தினை இவாலட்டிற்கு மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பேடிஎம் இல் இது 1.5% முதல் 3% வரை. இதனை 2% எனக் கொள்ளலாம். ரூபாய். 50,000 * 2/100 = 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இது உங்களுடைய இவாலட் கணக்கில் பரிசுப் பணமாக(Gift card) சேர்க்கப்படும். அதற்கு மேலாக, பேடிஎம்ல் 5% கட்டணம் இவாலட்டிலிருந்து வங்கிக்கு மாற்ற செலுத்த வேண்டும். ரூபாய். 50000 * 5/100 = 2500 ரூபாய் கட்டணம். எனவே, இந்த முறையில் கட்டணமாக மொத்தத்தில், 3500 ரூபாய் செலவாகிறது.

    3. பணம் மாற்று(Money Transfer) கடன் அட்டை மூலமாக பணத்தினை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது; இத்தகைய கடன் அட்டைகள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தினை அனுப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. பணம் வங்கிக் கணக்கிற்கு வந்தப்பிறகு, மற்ற கடன் அட்டைகளைப் போலவே கடன்களை மாதா மாதம் அடைத்து விட வேண்டும். வெளிநாடுகளில் இது பிரபலமாக உள்ளது. இந்தியாவில் இன்னும் இத்தகைய கடன் அட்டைகள் வரவில்லை.

4. பணம் பரிவர்த்தனை இணையதளங்கள் வாயிலாக;வெஸ்டர்ன் யூனியன் போன்ற பண பரிவர்த்தனை இணையதளங்கள் வாயிலாக, கடன் அட்டைப் பணத்தினை வங்கிகளுக்கு அனுப்ப முடியும். இது கட்டணங்களுக்கு உட்பட்டது. கட்டணத்திற்கு ஏற்ப இதில் பணம் அதிகமாக செலவாகும்.

5. பேடெக் போன்ற கடன் அட்டை வாயிலாக பணம் செலுத்தும் இணையதளங்கள் வாயிலாக; பேடெக் (paydeck), பிளாஸ்டிக் (plastiq) போன்ற இணையதளங்கள் வாயிலாக மாதாந்திர செலவுகளுக்கு கடன் அட்டை மூலம் பணம் செலுத்த முடியும். மேலும், மற்றொரு வங்கி கணக்கிற்கு செலுத்த முடியும். ஆனால், உங்களுடைய கணக்கிற்கே செலுத்த முடியாது. இதில் எவ்வளவு சீக்கிரம் பணம் வங்கிக்கு செல்ல வேண்டுமென்பதற்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, 2.5% எனில், 50000 * 2.5 /100 = 1250 ரூபாய் கட்டணம் செலவாகும்.

கடன் அட்டையின் வாயிலாக, பணத்தினை வங்கிக்கு மாற்றுவதற்கு அதிக பணம் விரயமாகும். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல், கடன் அட்டைக் கடன் மட்டுமன்றி, கட்டணம் வாயிலாகவும், அதிக கடனுக்கு உள்ளாகிறார்கள். கடன் அட்டையிலிருந்து பணத்தினை எடுத்தால், அடுத்த நொடிமுதல், கூட்டு வட்டி ஒருவருக்கு எதிராக வேலை செய்யத் தொடங்குகிறது. எனவே, கடன் அட்டையினைக் கொண்டு, பணத்தினை வங்கிக்கு மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. அப்படி மாற்றியே தீர வேண்டுமெனில், எதில் குறைவாக கட்டணம் ஆகிறது எனக் கணக்கிட்டு மாற்ற முயல வேண்டும்.

 மேலும், ஒரு கடனைக் கொண்டு, மற்றொரு கடனை அடைப்பது நல்ல விஷயம் அல்ல. அது ஒரு படு குழியிலிருந்து, மற்றொரு படு குழிக்கு தாவுவதைப் போலவே. அதிக கடன் மூலம், படு குழியானது இன்னும் ஆழமாகிறது. இதற்கு மாற்றாக, சிக்கனமாக வாழ்ந்து, அதிக பணத்தினை சேமித்து, கடனை அடைத்து, கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கு வழிபார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com